களவியல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு என்று வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும்.களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு நெறியில் இருப்பர். களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை.

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை, பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது.

தொல்காப்பியர் விளக்கம்

இன்பம், பொருள், அறம் மூன்றும் இணைந்தது வாழ்க்கை. அன்பின் வழியில் அமையும் இதனை ஐந்து திணையொழுக்கங்களாக எண்ணிப் பார்ப்பது தமிழர் நெறி. இதனைக் காமக்கூட்டம் என்பர். வேத நூல்கள் பாகுபடுத்திக் காட்டும் திருமண முறைகள் எட்டில் இது யாழோர் கூட்டம் எனப்படுகிறது. [1]

ஊழ்வினையால் காதல் காட்சி நிகழும். காதலர் ஒப்புமையால் ஒன்றியிருந்தால் சிறப்பு. காதலன் காதலியை விடச் சிறந்திருந்தாலும் குறையில்லை. [2] காதலி சிறந்தவளாய் இருந்தால், கிடைப்பாளோ எனக் காதலனுக்கு ஐயம் தொன்றும். [3] தெய்வமோ என அவன் ஐயுறும்போது சில குறிப்புகளால் இவள் பெண்மகள் என உணர்ந்துகொள்வான். [4] அவர்கள் பார்வையில் இசைவு புலப்படும். [5] ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனி இயல்புகள் உண்டு. [6]

காதல் நினைவுகள்

ஆசை மிகுதல், ஒருவர் மட்டும் நினைத்தல், நினைவால் உடலும் உள்ளமும் மெலிதல், இன்னது செய்தால் இன்னது நேருமோ என எண்ணுதல், நாணம் வரம்பைக் கடத்தல், பார்க்கும் பொருள்களிலெல்லாம் காதலர் நினைவே வருதல், தன்னையே மறந்து பித்தாதல், எண்ணச் சோர்வால் மயங்கி விழுதல், காதல் நிறைவேறாதபோது சாகத் துணிதல் முதலான நினைவலைகள் களவுக் காலத்தில் காதலர் உள்ளத்தில் மோதிக்கொண்டே இருக்கும். [7]

காதலன் காதலியிடம் பேச்சு கொடுத்தல் [8]

களவியல் செய்திகளைக் 'காதலர் செய்திகள்' எனப் புரிந்துகொள்ள வேண்டும். காதலன் காதலியிடம் பேச்சு கொடுத்தல், தன் சொல்லுக்கு அவளைக் கட்டுப்படுமாறு செய்தல், கட்டுப்பட்டால் இன்ன நன்மை என விளக்குதல், அவளது புன்னகையின் பொருளை உணர்ந்துகொள்ளுதல், அவளை நினைத்துத் தான் மெலிவதை உரைத்தல், அவள் இல்லாவிட்டால் தனக்கு நிகழப்போகும் தீங்கை எடுத்துரைத்தல், தன் கைவிடாத் தனமையை அவளுக்குத் தெளிவுபடுத்துதல் முதலான பேச்சுகளால் காதலன் காதலியை வயப்படுவான்.

காதலன் காதலியைத் தொட்டுக் காதலைப் பயிலுதல் [9]

காதலியைத் தொடுதல். அவள் அழகைப் பொய்யாகப் பாராட்டுதல். அவள் ஒப்புதலுடன் அணைத்துக்கொள்ளல். அவளிடம் வருவதற்குத் தனக்கு நேர்ந்த இடையூறுகளை எடுத்துரைத்தல். அவள் உறவு கிடைக்கவில்லையே எனப் பெருமூச்சு விடுதல். உடலுறவு கொள்ள முயல்தல், காதலியைத் துய்த்தல், ஆசை அடங்காமை என்னும் இவை எட்டும் ஒரு வகை.

பெற்றவழி மகிழ்தல், அவள் பிரிந்து செல்லும்போது கலங்குதல், நிகழவேண்டியதை எடுத்துரைத்தல், தன்னைக் குறைகூறும் பாங்கனுக்கு எடுத்துரைத்தல், பாங்கன் உதவியை வலியுறுத்தல், தன் ஊர், பேர், அவள் இல்லாவிட்டால் தனக்கு நேரும் கெடுதி முதலானவற்றைக் கூறித் தோழியின் உதவியை நாடல், தோழி தன் தலைவியை இணங்கச்செய்தல், தலைவி இணங்காவிட்டால் மீண்டும் மீண்டும் கெஞ்சுதல், இணங்கியபின் அரவணைத்தல், அவள் தயங்கும்போது தனக்கு நேரும் கெடுதியையும், தன் பெருமைகளை எடுத்துரைத்தல், மடலேறிப் பெறுதல் பற்றி நினைவூட்டுதல் முதலானவை அப்போது பேசப்படும். செல்லும் வழியில் நிகழும் சிலவும் உண்டு [10]

கைக்கிளை, பெருந்திணை [11]

திருமண உறவுகளில் பாங்காயினோர் கூட்டிவைக்கும் கூட்டம் 12-இல் கைக்கிளை உறவு 3 என்றும், பெருந்திணை உறவு 4 என்றும், மண உறவுகளில் ஏழு வகைகளைப் பகுத்துக் காட்டி, யாழோர் கூட்டம் 5 என விரித்துரைக்கிறார்.

உரையாடுவோர்

கிழவன் [12], கிழத்தி [13], தோழி [14], செவிலி[15], தாய் [16] ஆகியோர் இந்தக் காதல் வாழ்க்கையில் உரையாடுவர்.

சில முறைமைகள்

  • கிழவோள் (அவள்) தன்னால் அளக்கமுடியாத அறிவினை உடையவள் எனக் கிழவோன் (அவன்) ஐயுற்று உரையாடுவான். [17]
  • அவன்முன் அவள் தன் விருப்பத்தைச் சொல்லமாட்டாள். எனினும் அவளது உடலில் நீர் போல வெளிப்படும். [18]
  • அவன் தனக்குத் தானே தூதுவனாகி அவளிடம் செல்வதும் உண்டு. [19]
  • அவன் எங்கு வேண்டுமானாலும் வரமுடியும் ஆதலால் கூடும் இடத்தை அவள்தான் சொல்வாள். [20]
  • தோழி தூதும் உண்டு. [21]
  • அவள் தோழி இல்லாமல் தனிமையில் மூன்று நாளுக்கு மேல் செல்லமாட்டாள். [22]
  • அவள் மட்டுந்தான் தோழி துணையுடன் வருவாள். [23]
  • அவளுக்குத் தாய் எனச் சொல்லப்படுபவள் அவளைப் பேணி வளர்க்கும் செவிலித்தாயே. [24] (பெற்றவள் நற்றாய்)
  • அவளுக்குத் தோழி அவளை வளர்க்கும் செவிலியின் மகள். [25]
  • கேட்டறிதலும் உண்டு. [26]
  • தோழியும் செவிலியும் அவன்-அவள் உறவை அறிதலை ‘மதியுடம்படுதல்’ என்பர். இது முன்னுற உணர்தல், குறையுற உணர்தல், இருவரும் இருக்கும்போது உறுதியாக உணர்தல் என மூன்று வகைப்படும். [27]
  • தெளிவாக உணர்ந்த பின்தான் தோழியும் செவிலியும் செயல்படுவர். [28]
  • அவள் முயலும்பொது அவர்கள் உதவுவர். [29]
  • இனி கூடுவது பகலிலா இரவிலா என அவள் குறிப்பாள். [30]
  • இரவுக்குறி மனை எல்லைக்குள் இருக்கும் [31]
  • பகற்குறி இல்லத்துக்குப் புறத்தே அவள் அறிந்த இடமாக இருக்கும். [32]
  • அவன் வந்தான் என்று அவள் ‘அல்ல-குறி’ப் படுதலும் உண்டு. [33]
  • குறியிடத்தில் கூடுவதும் களவொழுக்கம். [34]
  • குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட நாள் அல்லாமல் அவனும் அவளும் கூடார். [35]
  • அவன் வழியில் நேரும் இடையூறுகளுக்கு அஞ்சாமல் குறித்தபடி வருவான். [36]
  • அவளைப் பெற்ற தாய்தந்தையர் குறிப்பால் உணர்ந்துகொள்வர். [37]
  • தாய் அறிந்தால் செவிலி போல் நடந்துகொள்வாள். [38]
  • களவு வெளிப்பட்டு அம்பல், அலர் தூற்றப்படுவது அவன் நடத்தையால்தான். [39]
  • களவு வெளிப்படுவதற்கு முன்னரும் களவு அம்பல், அலரால் வெளிப்பட்ட பின்னரும் என இருவேறு காலங்களிலும் திருமணம் நடைபெறும். [40]
  • களவு வெளிப்பட்ட பின்னர்த் திருமணம் நடந்தால் அது கற்புமணம். (களவுக்கு முன்னர் எனின், அவன் அவளை அழைத்துக்கொண்டு செல்லும் ‘கொண்டுதலைக் கழிதல்’) எப்படியோ அவளைத் திருமணைம் செய்துகொள்ளாமல் கைவிடமாட்டான். [41]

(நம்பி அகப்பொருள்) கருத்தோட்டம்

களவு என்பது இன்ப உணர்வின் அடிப்படையில் நிகழக் கூடியது. இக் களவு ஒழுக்கம் நான்கு வகையாகப் பகுத்துக் கூறப்படும். அவை :

1 காமப் புணர்ச்சி: இஃது அன்புடைய இருவர் நல்வினையால் எதிர்ப்பட்டு, காதல் கொள்வது. காம வேட்கை மிகுதியால் தான் இக்காதல் உருவாகிறது.

காதல் எவ்வாறு உண்டாகும் என்பதைத் தொல்காப்பியர் களவியல் நூற்பாவில் (2) விளக்குகிறார்.

ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் இல்லறத்தின் பயனால் அவ்விருவரையும் ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்தும், பிரித்தும் வைப்பதுமான இருவகை ஊழ்வினை உண்டு. அவற்றுள் நல்லூழின் ஆணையால் ஒத்த பிறப்பு, குடி, ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்துப் பண்புகளுடன் இருக்கும் ஓர் ஆணும், பெண்ணும் கண்டு காதல் வயப்படுவர். இதில் தலைவன் தலைவியுடன் ஒத்த பண்புடையனாகவோ தலைவியின் மிக்கோனாகவோ இருத்தல் வேண்டும்.

தலைவி தன்னுடன் ஒத்த நலன்களால் சிறந்து தோன்றிய வழி தலைவனுக்கு ‘இவள் தெய்வ மகளோ?’ என்ற ஐயம் தோன்றும். ஆனால் அவள் அணிந்துள்ள மாலை, அணிகலன் ஆகியவற்றைக் கண்டு அவள் மானிட மகளே எனத் தெளிவான்.'

பிறகு அவள் தன்மேல் விருப்பம் கொண்டிருக்கிறாளா என அறிய அவள் கண்களை நோக்குவான். காம வேட்கையினால் அந்நான்கு கண்களும் தாம் கொண்ட காதலை உரைக்கும்.

ஒருவரை ஒருவர் காணும் முதற்காட்சியிலேயே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்படாது, உள்ளப் புணர்ச்சி அளவிலேயே ஒழுகி மணந்து கொண்ட பின்னரே கூடி மகிழ்வர்.

2 இடந்தலைப்பாடு இயற்கைப் புணர்ச்சி எனப்படுகின்ற இருவரும் கூடி மகிழ்கின்ற நிலையை நாள்தோறும் நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்படும். முதல்நாள் சந்தித்த அதே இடத்திற்கு ஒவ்வொரு நாளும் தலைவன் சென்று காதலியைச் சந்தித்து மகிழ்வான். இதுவே இடந்தலைப்பாடு ஆகும்.

3 பாங்கொடு தழாஅல் இடந்தலைப்பாடு இடையூறு இன்றி நிகழ்தல் அரிது. ஆதலால் தலைவியோடு தனக்குள்ள உறவினைப் பாங்கனுக்குக் (தோழனுக்கு) கூறுவான். பிறகு அத்தோழன் அப்பெண் எவ்விடத்தைச் சேர்ந்தவள்? எத்தன்மை உடையவள்? என வினவி, அவள் இருப்பிடம் அறிவான். அவளிடம் சென்று அத்தலைவியைக் கண்டு வருவான். கண்டு வந்து அவள் நிலையைத் தலைவனுக்குக் கூறுவான்.

4 தோழியில் புணர்வு தலைவியை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து கூட விழையும் தலைவனுக்குப் பாங்கற் கூட்டம் பயன்தராது. அதனால் தலைவியோடு பழகிவரும் உயிர்த்தோழியை நட்பாக்கிக் கொண்டு அவளை இரந்து, அவள் பின் நிற்பான். பிறகு அவள் வாயிலாகத் தலைவியைக் கூடுவதே தோழியிற் புணர்வாம். இது தோழியிற் கூட்டம் எனவும் உரைக்கப்படும்.

5 இருவகைக் குறிகள் தலைவியைத் தோழி குறிப்பிட்ட ஓரிடத்தில் இருக்கச் செய்து, பின்னர்த் தலைவனிடம் சென்று தலைவி தலைவனுக்காகக் காத்திருக்கும் இடத்தைக் குறிப்பிடுவாள். தலைவன் அவ்விடம் சென்று தலைவியுடன் கூடி மகிழ்வான். இக்கூட்டம் பகலில் நிகழ்ந்தால் பகற்குறி என்றும் இரவில் நிகழ்ந்தால் இரவுக் குறி என்றும் அழைக்கப் பெறும்.

அடிக்குறிப்புகள்

எண்கள் தொல்காப்பியம் களவியல் நூற்பா வரிசை எண்ணைக் குறிக்கும்.

  1. 1 (இது நல்வினைப் பயனால் தன்னியல்பில் நிகழும் புணர்ச்சியாதலின் இதனைப் பிற நூல்கள் இயற்கைப் புணர்ச்சி எனவும், தெய்வப் புணர்ச்சி எனவும், முன்னுறு புணர்ச்சி எனவும் குறிப்பிடுகின்றன).
  2. 2
  3. 3
  4. 4
  5. 5, 6
  6. 7, 8
  7. 9
  8. 10
  9. 11
  10. 12
  11. 13 முதல் 16
  12. 17 முதல் 20
  13. 21 முதல் 23
  14. 24
  15. 25
  16. 26
  17. 27
  18. 28
  19. 29
  20. 30
  21. 31
  22. 32
  23. 33
  24. 34
  25. 35
  26. 36
  27. 37
  28. 38
  29. 39
  30. 40
  31. 41
  32. 42
  33. 43
  34. 44
  35. 45
  36. 46
  37. 47
  38. 48
  39. 49
  40. 50
  41. 51
"https://tamilar.wiki/index.php?title=களவியல்&oldid=14590" இருந்து மீள்விக்கப்பட்டது