பெருந்திணை
பெருந்திணை என்பது பொருந்தாக் காம உறவு. இதனைத் தொல்காப்பிய இலக்கணம் அகத்திணையில் ஒன்றாகக் கொண்டு பாகுபாடு செய்துள்ளது. பெருந்திண என்பது பெரும்பான்மையோர் கொள்ளும் உறவு, மேன்மக்கள் மாட்டு நிகழும் உறவு என்று தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.[1] தொல்காப்பியத்துக்குச் சுமார் 1200 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணம் இதனைப் 'பெருந்திணைப் படலம்' என்னும் பெயரில் தனிப் பகுப்பாக வைத்துக்கொண்டு இலக்கணம் கூறுகிறது. இதனை இந்த இலக்கணம் 'அகப்புறம்' என்னும் பாகுபாட்டின் கீழ் வைத்து எண்ணுகிறது.
வடநூலார் கருத்து ஒப்பீடு
வடநூலார் திருமண முறைகள் எட்டு எனத் தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகிறது. [2] இவற்றில் முதலில் உள்ள நான்கும் கைக்கிளை என்றும், இறுதியில் உள்ள மூன்றும் பெருந்திணை என்றும் வகுத்துக்கொண்ட தொல்காப்பியம் இடையில் உள்ள கந்திருவர் [3] மணத்தை யாழோர் கூட்டம் எனப் பெயர் சூட்டி 'அன்பின் ஐந்திணை' எனக் கொண்டு விளக்குகிறது.
பெருந்திணை என்பது அரும்பொருள்வினை, இராக்கதம், பேய்நிலை என்று வடநூல் குறிப்பிடும் மூன்று வகையான மணமுறைகள். இவற்றில் அரும்பொருள் வினை என்பது ஆண்மகன் தன் திறமையை வெளிப்படுத்தித் திருமணம் செய்துகொள்வது. [4] இராக்கதம் என்பது விரும்பாத பெண்ணை வலுக்கட்டாயமாக அடைவது. [5] பேய்நிலை என்பது மது மயக்கத்தில் கிடக்கும் பெண்ணிடமும், உறங்கும் பொண்ணிடமும் உறவு கொள்வது.[6]
கைக்கிளை, பெருந்திணை நிகழ்வுகளின் வேறுபாடுகள்
கைக்கிளை [7] | பெருந்திணை [8] |
---|---|
மடலேறுவேன் என்று கூறுதல் | மடலேறுதல் |
இளமை போய்விடும் என்று கூறுதல் | இளமை மாறிய பருவத்துக் காதல் |
தேற்றமுடியாத காம உணர்வு | காம வெறி உரசல்கள் |
காம வெறிக் குறும்புகள் | காம வெறி உடலுறவு |
புறநானூற்றில் பெருந்திணைப் பாடல்கள்
புறநானூற்றில் பெருந்திணைப் பாடல்கள் ஐந்து உள்ளன. பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்வதைத் தகாத செயல் என அக்காலப் புலவர்கள் எடுத்துக் கூறித் திருத்தும் பாடல்களாக அவை உள்ளன. [9] மேலே நாம் கண்ட தொல்காப்பிய நெறி இந்தப் பாடல்களில் இல்லை. தொல்காப்பியர் காட்டும் பெருந்திணையில் காதலன் தன் காதலியையும், அவளது பெற்றோர்களையும் தன் திருமணத்துக்கு உதவும்படி வற்புறுத்துகிறான். இது அகத்திணை. புறநானூற்றுப் பாடல்களுக்குத் திணை, துறை வகுத்தவர் பன்னிரு படலம் என்னும் நூலைப் பின்பற்றியிருக்கிறார்.
நம்பியகப்பொருள் விளக்கம்
நம்பியகப்பொருள் பெருந்திணையை இரண்டு வகையாகப் பிரித்துக்கொண்டு விளக்குகிறது.
- அகப்பொருட் பெருந்திணை
- பிரிவில் கலங்குதல், இணங்காவிட்டால் மடலேறுவேன் எனல், குறியிடத்தில் பெறமுடியாமல் போதல், நம்பியவரைக் கைவிடுதல், பெண்ணை வெறியாட வைத்தல், ஆணும் பெண்ணும் விரும்பிப் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப்போதல், மாதவிலக்கு பற்றிக் கூறுதல், பொய்யாக உறுதிமொழி கூறுதல், ஊடல்-பிணக்குப் பாட்டுக்கொண்டே காலம் கழித்தல், பொருள் தேடச் செல்பவனைப் போக விடாமல் தடுத்தல், போர்ப்பாசறையில் காதலியை நினைத்துப் புலம்பல், சொன்ன பருவத்தில் திரும்பாமை, தலைவன் வற்புறுத்தும்போது எதிர்த்துப் பேசுதல், கணவனும் மனைவியும் காட்டுக்குச் சென்று தவம் செய்தல் போன்றவை அகத்திணையில் நிகழும் பெருந்திணைச் செயல்கள். [10]
- அகப்புறப் பெருந்திணை
- மடலேறி வந்து மனைவியாக்கிக் கொள்ளுதல், காளையை அடக்கி மனைவியாக்கிக் கொள்ளுதல், குற்றிசை, குறுங்கலி, சுரநடை, முதுபாலை, தாபத நிலை, தபுதார நிலை, முதலான நிகழ்வுகள் அகப்புறப் பெருந்திணை எனப்படும். [11]
புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம்
காம இன்பம் துய்க்கும் பாடல்கள் அகத்திணைப் பாடல்கள். மாறாகத் தலைவன் தலைவியர் துன்பப்படும் பாடல்களை இந்த நூல் பெருந்திணை எனக் கொள்கிறது.
பெண்பால் கூற்று [12]
இதில் 19 துறைகள் உள்ளன
- வேல்வீரனிடம் பெண் ஆசைமொழி பேசுவது [13]
- தலைவன் ஊர்தியைக் கண்டு தலைவி தொழுதல் [14]
- தலைவன் பிரிவைத் தாங்கிக்கொள்வது [15]
- திருமணத்தை எண்ணிக் காத்திருத்தல் [16]
- அவன் வரவில்லையே என ஏங்குதல் [17]
- பெண் ஆணைத் தேடி இரவில் செல்லல் [18]
- தலைவன் மேல் இல்லாததும் பொல்லாததும் தலைவி சொல்லிச் சிரித்தல் [19]
- ஊடலின்போது அழுதல் [20]
- மாலை வந்ததும் வருந்துதல் [21] [22]
- அவனைத் திருடிய பரத்தையை ஏசுதல் [23]
- பரத்தையின் குறி தலைவனிடம் கண்டு தலைவி சினக் கண்ணைப் பாய்ச்சுதல் [24]
- புணர்ச்சிக்குப் பின்னும் அவனை அவள் தழுவிக்கொண்டே கிடத்தல் [25]
- அவனை அவள் கைப்பிடியாக இழுத்துச் செல்லல் [26]
- உடலுறவின்போது அவள் சோர்ந்து போதல் [27]
- ஊடலில் தளர்வு [28]
- அவன் பசப்பு வலையில் வீழ்தல் [29]
- அவனை அவள் தன் காலடியில் விழ வைத்தல் [30]
- தூங்குபவனைத் தழுவித் தொந்தரவு செய்தல் [31]
- பரத்தையிடம் செல்லுமாறு தானே அனுப்பி வைத்தல் [32]
இருபால் பெருந்திணை [33]
இதில் 17 துறைகள் உள்ளன
- பொருள் தேடச் செல்வதை அவன், அவள்மேல் உள்ள ஆசையால் தானே கைவிடுதல் [34]
- தலைவன் மடலார்ந்து சென்று தலைவியை அடையல் [35]
- அவனிடம் தோழியைத் தூதாக அனுப்பல் [36]
- அவள் துன்பத்தைத் தோழி அவனுக்குச் சொல்லுதல் [37]
- அவன் வணங்கக் கண்டு அவனுக்குத் தன்னை விட்டுக்கொடுத்தல் [38]
- அவர் சொன்ன காலம் இது அன்று எனத் தோழி கூறுதல் [39]
- அவளைப்பற்றி அவன் ஊரறியப் பேசுதல் [40]
- அவன் உறவு ஊருக்குத் தெரியாது என்று கூறுதல் [41]
- பெண்ணைப் பேயாட்டுதல் [42]
- அவனுக்குத் தூதாகப் பாணன் வந்துள்ளதைத் தோழி தலைவியிடம் சொல்லல் [43]
- 'அவனை அடைதல் எனக்கு எளிது' எனப் பரத்தை கூறல் [44]
- 'அவன் பரத்தமை அறிவேன்' எனத் தோழி விறலியிடம் சொல்லி அனுப்புதல் [45]
- பரத்தமை பற்றி விறலி தோழியிடம் சொல்லம். [46]
- பரத்தமையை மறைக்கவேண்டிய தோழி தலைவியிடம் 'போட்டுக்கொடுத்தல்'. [47]
- அவனது பரத்தமையை மறைக்கவேண்டிய விறலி தலைவியிடம் கூறல் [48]
- பரத்தை பகைவர்க்கும் உரியள் என அறப்புகழ் கூறல் [49]
- பரத்தையின் பசப்பு மொழியைக் குத்திப் பேசித் தலைவனை விலக்குதல் [50]
யாப்பருங்கல விருத்தி [51]
அறவழியில் அல்லாமல் மற-வழியில் இன்பம் துய்ப்பது பெருந்திணை.[52] இது நிலையில்லாமல் அவ்வப்போது தோன்றி மறையும் காதலாக இருக்கும். இந்தக் காதல் நீடிக்கவும் செய்யாது. இது அகத்திணை அன்று. அகப்புறம்.[53]
அடிக்குறிப்பு
- ↑ "பொருள் அதிகாரம், இளம்பூரணர் உரை". தொல்காப்பியம். சாரதா பதிப்பகம். 2010. p. 404.
- ↑
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்,
காமக் கூட்டம் காணும் காலை,
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 89) - ↑ கந்து = துணை, துணையாக வாழும் இருவர்
- ↑
ஆகும் அசுரம் செரு வில் ஏற்றியும்
திரி பன்றியினைத் தெரிவுற எய்தும்
இன்னன பிறவும் பன்னிய செய்தும்
கன்னியை மன்னுதல் துன்னும் என்ப (இறையனார் களவியல் உரை பேற்கோள்) - ↑
துன்னும் இராக்கதம் சுரிகுழல் பேதையைத்
தன்னிற் பெறாதும் தமரிற் பெறாதும்
வலிதிற் கோடல் மரபு காட்டும் - ↑
காட்டு பைசாசம் களித்தார் துயின்றார்
மாட்டுப் புணரும் புணர்ச்சியின் மாண்பே - ↑
காமம் சாலா இளமையோள்வயின்,
ஏமம் சாலா இடும்பை எய்தி,
நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்,
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து,
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்-
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே (தொல்காப்பியம், பொருளதிகாரம் 53) - ↑
ஏறிய மடல் திறம், இளமை தீர் திறம்,
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்,
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ,
செப்பிய நான்கும்-பெருந்திணைக் குறிப்பே (தொல்காப்பியம், பொருளதிகாரம், 54) - ↑ புறநானூறு 143 முதல் 147
- ↑
அகன்றுழிக் கலங்கலும் , புகன்ற மடல் கூற்றும்,
குறி இடையீடும் , தெளிவிடை விலங்கலும்,
வெறிகோள் வகையும் , விழைந்து உடன்போக்கும்,
பூப்பு இயல் உரைத்தலும் , பொய்ச்சூள் உரையும்,
தீர்ப்பு இல் ஊடலும், போக்கு அழுங்கு இயல்பும்,
பாசறைப் புலம்பலும் , பருவம் மாறுபடுதலும்,
வன்பொறை எதிர்ந்து மொழிதலும் ,அன்பு உறு
மனைவியும் தானும் வனம் அடைந்து நோற்றலும்,
பிறவும் , அகப்பொருள் பெருந்திணைக்கு உரிய. - ↑
மடலேறுதலொடு , விடைதழால் என்றா ,
குற்றிசை தன்னொடு , குறுங்கலி என்றா ,
சுரநடை தன்னொடு , முதுபாலை என்றா,
தாபத நிலையொடு , தபுதார நிலை, எனப்
புகன்றவை இயற்பெயர் பொருந்தா ஆயின்
அகன்ற அகப்புறப் பெருந்திணைக்கு ஆகும். - ↑ புறப்பொருள் வெண்பாமாலை, கொளு & 305-324
- ↑ வேட்கை முந்துறுத்தல் 396
- ↑ பின் நிலை முயறல் 307
- ↑ பிரிவிடை ஆற்றல் 308
- ↑ வரவு எதிர்ந்து இருத்தல் 309
- ↑ வாராமைக்கு அழிதல் 310
- ↑ இரவுத் தலைச் சேறல் 311
- ↑ இல்லவை நகுதல் 312
- ↑ புலவியுள் புலம்பல் 313
- ↑ பொழுது கண்டு இரங்கல் 314
- ↑ திருக்குறளில் 'பொழுகு கண்டு இரங்கல்' என்னும் அதிகாரம் (123) உள்ளது. அதில் தலைவி தலைவன் இல்லாத மாலை நேரத்தோடு பேசி, அந்த நேரத்தை நொந்துகொள்கிறாள். இது அகப்பொருள். "மாலை நேரத்தில் அவன் வரவில்லை. அவனைப் பார்த்தாயா" என்று மற்றவர்களிடம் கேட்டால் அது பொருந்திணை.
- ↑ பரத்தையை ஏசல் 315
- ↑ கண்டு கண் சிவத்தல் 316
- ↑ காதலில் களித்தல் 317
- ↑ கொண்டு அகம் புகுதல் 318
- ↑ கூட்டத்துக் குழைதல் 319
- ↑ ஊடலுள் நெகிழ்தல் 320
- ↑ உரை கேட்டு நயத்தல் 321
- ↑ பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல் 322
- ↑ பள்ளிமிசைத் தொடர்தல் 323
- ↑ செல்க என விடுத்தல் 324
- ↑ புறப்பொருள் வெண்பாமாலை, கொளு & 325-342
- ↑ செலவு அழுங்கல் 125
- ↑ மடல் ஊர்தல் 126
- ↑ தூதிடை ஆடல் 127
- ↑ துயர் அவற்கு உரைத்தல் 128
- ↑ கண்டு கைசோர்தல் 129
- ↑ பருவம் மயங்கல் 130, 131
- ↑ ஆண்பாற் கிளவி 132
- ↑ பெண்பாற் கிளவி 133
- ↑ வெறியாட்டு 134
- ↑ பாண் வரவு உரைத்தல் 135
- ↑ பரத்தை கூறல் 136
- ↑ விறலி கேட்பத் தோழி கூறல் 137
- ↑ விறலி தோழிக்கு விளம்பல் 138
- ↑ பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தல் 139
- ↑ பிறர் மனைத் துயின்றமை விறலி கூறல் 140
- ↑ குற்றிசை 141
- ↑ குறுங்கலி 142
- ↑ அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 435, 436
- ↑
பெருந்திணைப் பொருளே பொருந்தக் கூறின்
அறத்தின் இயன்ற அகத்தொடு புணராத்
திறத்தது என்ப திறன் அறிந்தோரே - ↑
நிலையா அன்பின் நீடா இன்பத்து
உலக மலைவு எல்லாம் பெருந்திணை அகப்புறம்