கன்பூசியசும் திருவள்ளுவரும் (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கன்பூசியசும் திருவள்ளுவரும் என்னும் திருக்குறள் ஆய்வு நூலை முனைவர் கு. மோகனராசு 2003இல் மணிவாசகர் பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டுள்ளார்.[1]

நூல் எழுந்த வரலாறு

கன்பூசியசையும் திருவள்ளுவரையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து நூலாக வெளியிட்ட கு. மோகனராசு இந்த நூல் எழுந்த வரலாற்றை "முன்னுரையில்" விரிவாகத் தருகிறார். இந்த ஒப்பாய்வை அவர் 1980இல் தொடங்கினார். 1983இல் சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வு மையம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஆய்வரங்கில் "கன்பூசியசும் திருவள்ளுவரும்" என்ற தலைப்பில் நூலாசிரியர் விரிவான ஆய்வுரை ஒன்று வழங்கினார்.

இந்த ஆய்வுரை "திருக்குறள் ஆய்வும் மதிப்பீடும்" என்னும் பெயரில் சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வு மைய வெளியீடாக வந்த நூலில் ஒரு கட்டுரையாக (78 பக்கங்கள்) வெளிவந்தது. இக்கட்டுரையே சற்று விரிவாக்கம் பெற்று, "கன்பூசியசும் திருவள்ளுவரும்" என்னும் நூலாகத் தற்போது வெளிவருகின்றது (பக்கங்கள் 7-8).

நூலின் உள்ளடக்கம்

"நுழைவாயில்" என்னும் அறிமுகப் பகுதியைத் தவிர இந்த நூலில் 8 அதிகாரங்கள் அடங்கியுள்ளன. அவை கீழ்வருமாறு:

நுழைவாயில்

(கன்பூசியசும் திருவள்ளுவரும்; காலம்; மரபுக் கதையிலோர் ஒற்றுமை; இலக்கியப் பணி; லூன்யூ; லூன்யூவும் திருக்குறளும்)

1. கடவுள்

(கடவுள் நம்பிக்கை; கடவுள் ஒருவரா? பலரா; சூழலும் தேவையும்; கல்வியும் கடவுள் கருத்துகளும்; கடவுட் பண்பும் பணியும்; கடவுள் நெறி; வழிபாடும் பயனும்; பிற கருத்தாக்கங்கள்; நிறைவுரை)

2. உயர்ந்தோர்

(சூன்ட்சுவும் அந்தணரும்; உயர்ந்தோரும் கல்வியும்; உயர்ந்தோரும் எண்ணங்களும்; உயர்ந்தோரும் சொல்லும்; உயர்ந்தோரும் செயலும்; உயர்ந்தோரும் நட்பும்; உயர்ந்தோரும் சமுதாய உறவும்; உயர்ந்தோரும் அரசியல் தொடர்பும்; நிறைவுரை)

3. கல்வி

(முன்னுரை; கல்வியின் நோக்கங்கள்; கற்கும் எல்லை; எல்லோர்க்கும் கல்வி; ஆசிரியர்; மாணவர்; கற்பதற்கு உரியன; கற்பிக்கும் முறைகள்; கற்கும் முறைகள்; கல்வியின் பயன்கள்; நிறைவுரை)

4. நட்பு

(வரையறை; நட்பின் அடிப்படை; நட்புக் கொள்ளத் தக்கவர்கள்; பழகுமுறை; நட்புக் கொள்ளத் தகாதவர்கள்; நட்புக் கொள்ளத் தகாதவரிடம் பழகும் முறைகள்; நட்பிலிருந்து விலகல்; நட்பின் பயன்கள்; நிறைவுரை)

5. அரசர்

(அரச மரபு; பெயர்ப் பொருண்மை; பண்புகள் உடைமை; அரசரின் பணிகள்; ஆளுந்திறன்; தவறும் தண்டனையும்)

6. அமைச்சர்

(சொல்லும் பொருளும்; அமைச்சரும் அரசியலும்; அமைச்சியலும் மகளிரும்; அமைச்சர்க்குரிய தகுதிகள்; வினையாற்றும் திறன்; மன்னரைச் சேர்ந்தொழுகும் முறை)

7. உலக ஒருமைப்பாடு

(உணர்வும் சூழலும்; அனைத்துயிரும் ஒன்றே; ஆண் பெண் சமன்மை; மேல் கீழ் உணர்வகற்றல்; ஊனமுற்றோர் மேம்பாடு; நீர் போல் இணைவு)

8. நிறைவுரை

(குறிப்புகள்; நூல்/கட்டுரை அடைவு)

நூலிலிருந்து ஒரு பகுதி

பல தலைப்புகளில் திருவள்ளுவரையும் கன்பூசியசையும் ஒப்பாய்வு செய்தபின் நூலாசிரியர் "நிறைவுரை" என்னும் கடைசி அதிகாரத்தில் நூலின் ஆய்வு முடிவுகளை இவ்வாறு தொகுத்தளிக்கின்றார்:

இதுவரை கூறியவற்றை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு நோக்கினால், அறியலாகும் கருத்துகள் வருமாறு:

1. கன்பூசியசு சீன நாட்டவர்; வள்ளுவர் தமிழ் நாட்டவர்; இருவரும் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தவர்கள்; ஆனாலும், பெரும்பாலானவற்றில் இருவருடைய உணர்வுகளும் வேட்கைகளும் பெரிதும் ஒத்து அமைகின்றன.

உயர்ந்தவர்கள் எங்குத் தோன்றினும் ஒன்றாகவே சிந்திப்பவர், என்பதற்கு இந்த ஒப்பீடே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒருவரை ஒருவர் அறியாத இவர்களின் கருத்துகளில் காணும் ஒப்புமைகளைக் காணும்போது, ஒப்புடைய கருத்துகளை மட்டுமே, வைத்து, யார் முந்தியவர், யார் பிந்தியவர் என்று காண முயல்வது சரியான ஆய்வாகாது என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகின்றது.

2. இருவரிடமும் காணும் வேறுபாடுகள் அவர்களுடைய வாழ்வுச் சூழல், சிந்தனை எல்லை, முதன்மை நோக்காக அவர்கள் கொண்டவை ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன எனவும் அறிய முடிகின்றது.

அந்த வேறுபாடுகள் இவ்விருவரையும் ஓரளவு பிரித்துக் காண உதவுகின்றன.

குறிப்பாக, கன்பூசியசிடம் காணும் கடவுள் உணர்வு மறைப்பு, பழைமை நாட்டம், அரசன் பற்றிய நம்பிக்கை ஆகியவற்றையும், திருவள்ளுவரிடம் காணும் நடுநிலை உணர்வு, உலகளாவிய பார்வை ஆகியனவற்றையும் கொள்ளலாம்.

3. மொத்தத்தில், இருவரும் காலம் கடந்து, எல்லை கடந்து வாழும் சாதனையாளர்கள்; அவரவர் காலப் புரட்சியாளர்கள் - சிந்தனைப் புரட்சியாளர்கள்; மனித இனம் வாழ வழி கண்டவர்கள்.

4. எனினும், வள்ளுவரிடம் காணும் பொதுமை உணர்வு, கன்பூசியசைவிடத் திருவள்ளுவரைச் சற்று மேம்பட்ட சிந்தனையாளராகக் காட்டுகின்றது.

ஆயினும், கன்பூசியசிடம் காணும் நடைமுறை நோக்கும் தீர்வும் திருவள்ளுவரிடம் பெரிதும் காணப்படவில்லை. (பக்கங்கள்: 105-106).

குறிப்பு

  1. முனைவர் கு. மோகனராசு, கன்பூசியசும் திருவள்ளுவரும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2003, பக்கங்கள்: 112.