இ. எஸ். ஏரியல்
இ. எஸ். ஏரியல் (ஆங்கிலம்: E. S. Ariel) என்பவர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் ஆவார். அவரது சமகாலத்தவரால் மாசியு ஏரியல் (பிரெஞ்சு: "திரு. ஏரியல்") என்று குறிப்பிடப்படும் இவர், பண்டைய இந்திய தத்துவ நூலான திருக்குறளைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக அறியப்படுபவர். இவர் 1848-இல் திருக்குறளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறட்பாக்களைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து பாரிசில் குறள் டி திருவள்ளுவர் (Kural de Thiruvalluvar (Traduits du Tamoul)) என்ற பெயரில் வெளியிட்டார்.[1] இவருக்கு முன்னரே குறளின் முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1767-இல் பெயர் அறியப்படாத ஒரு அறிஞரால் செய்யப்பட்டது என்று ஏரியல் தனது நூலில் குறிப்பிட்டிருந்தாலும், ஏரியலின் மொழிபெயர்ப்புதான் குறளைப் பிரெஞ்சு மக்களுக்குக் கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.[2][3]
குறளைப் பற்றிய கருத்து
பர்னூஃப் என்பவருக்கு ஏரியல் எழுதிய கடிதமொன்று ஜர்னல் ஆசியடிக் (நவம்பர்–டிசம்பர் 1848) இதழில் வெளியிடப்பட்டது. அதில் ஏரியல் குறளைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:
“ | தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பு—மனித சிந்தனையின் மிக உயர்ந்த தூய்மையான வெளிப்பாடுகளில் ஒன்று. திருக்குறளில் எல்லாவற்றிற்கும் மேலாக அற்புதமானது என்னவென்றால் அதன் ஆசிரியர் சாதி, குல, நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாது ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் பொதுவான அறிவுரைகளை வழங்குகிறார்; அவர் இறையாண்மைக்கு ஏற்ற நன்னெறிகளையும் அறிவார்ந்த சிந்தனைகளையும் வகுக்கிறார்; அச்சிந்தனைகளுக்குத் தக்கவாறு என்றும் நிலைக்கும் பொதுத்தன்மையுடன் அறத்தையும் வாய்மையையும் அனைவருக்கும் அவர் அறிவுறுத்துகிறார்; அவர் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து மாந்தர்தம் அக மற்றும் புற வாழ்க்கையின் அறச் சட்டங்களை முன்வைக்கிறார்; மனித மனத்தின் மென்மையான உணர்வுகளிளைப் பகுப்பாய்ந்து பேராயியற்கையின் இரகசியங்களையும் அதன் தெய்வீகத் தன்மையையும் நன்குணர்ந்தவராய் அவற்றைத் தன் சிந்தையில் இருத்தி அவற்றை தனது படைப்பில் சிந்தனையளவிலும் மொழியளவிலும் செய்யுளளவிலும் சமமாகத் தருகிறார்.[2][4] | ” |
திருக்குறளைப் பற்றிக் கூறுகையில் ஏரியல் அதனை "பெயரறியா ஆசிரியரால் இயற்றப்பட்ட பெயரறியா நூல்" ("Ce livre sans no, par un auteur sans nom") என்று பாராட்டியுள்ளார்.[4]
மேற்கோள் தரவுகள்
- ↑ Sanjeevi, N. (1973). Bibliography on Tirukkural. In First All India Tirukkural Seminar Papers. Chennai: University of Madras. பக். 146.
- ↑ 2.0 2.1 Ramasamy, V. (2001). On Translating Tirukkural (First ). Chennai: International Institute of Tamil Studies. பக். 30–31.
- ↑ Rajaram, M. (2015). Glory of Thirukkural. 915 (1 ). Chennai: International Institute of Tamil Studies. பக். 84–85. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-85165-95-5.
- ↑ 4.0 4.1 Pope, G. U. (1886). The Sacred Kurral of Tiruvalluva Nayanar. New Delhi: Asian Educational Services. பக். i (Introduction). https://archive.org/details/in.ernet.dli.2015.43871.