இக்கால உலகிற்குத் திருக்குறள் (நூல்)
இக்கால உலகிற்குத் திருக்குறள் என்னும் திருக்குறள் ஆய்வு நூல் மூன்று தொகுதிகளாக அமைந்து சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மூன்று தொகுதிகளுக்கும் தொகுப்பாசிரியர் தி. சே. சுப்பராமன், சேயோன் ஆகியோரும், பதிப்பாசிரியர் சா. கிருட்டின மூர்த்தியும் ஆவர்[1].
மூன்று நிறுவனங்கள் பங்கேற்பு
மூன்று தொகுதிகள் கொண்ட இந்நூலின் தொகுப்பாசிரியர்கள் தி.சே. சுப்பராமன், சேயோன் ஆகியோர் முறையே அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் என்னும் நிறுவனங்களையும், பதிப்பாசிரியர் சா. கிருட்டின மூர்த்தி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தையும் சார்ந்தவர்கள். இம்மூன்று நிறுவனங்களும் சேர்ந்து நிகழ்த்திய திருக்குறள் கருத்தரங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்புகளே இந்த மூன்று நூல் தொகுதிகள் ஆகும்.
முதல் தொகுதி உள்ளடக்கம்
இக்கால உலகிற்குத் திருக்குறள் என்னும் நூலின் முதல் தொகுதியில் 39 கட்டுரைகள் கீழ்வரும் பொதுத்தலைப்புகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன:
- அறிவியல்
- பொறியியல், தொழில் நுட்பம்
- மருத்துவம்
- மேலாண்மை
இரண்டாம் தொகுதி உள்ளடக்கம்
இரண்டாம் தொகுதியில் 43 கட்டுரைகள் கீழ்வரும் தலைப்புகளின் கீழ் வருகின்றன:
- பொருளாதாரம்
- அரசியல்
- மதநல்லிணக்கம்
- இல்லறம்
- சமுதாய நோக்கு
மூன்றாம் தொகுதி உள்ளடக்கம்
மூன்றாம் தொகுதியில் 51 கட்டுரைகள் கீழ்வரும் வகையில் தரப்படுகின்றன:
- சமுதாய நோக்கு
- பிறமொழி இலக்கிய ஒப்புமைகள்
- பொது
மூன்று தொகுதிகளிலும் பெரும்பான்மையான கட்டுரைகள் தமிழிலும் சில கட்டுரைகள் ஆங்கிலத்திலும் உள்ளன. திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் இருப்பதுபோல, இம்மூன்று தொகுதி நூலிலும் 133 கட்டுரைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு
- ↑ சா. கிருட்டின மூர்த்தி (பதிப்பாசிரியர்), இக்கால உலகிற்குத் திருக்குறள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004, 3 தொகுதிகள், பக்கங்கள்: 274, 288, 322.