பதினெண்கீழ்கணக்கு
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.
நூல்வகைகள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்:
"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு." [1]
இந்தப் பாடல் குறிப்பிடும் நூல்கள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- முப்பால் (திருக்குறள்)
- திரிகடுகம்
- ஆசாரக் கோவை
- பழமொழி நானூறு
- சிறுபஞ்சமூலம்
- கைந்நிலை
- முதுமொழிக் காஞ்சி
- ஏலாதி
இந்தப் பாடலில் கைந்நிலை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும்.
வாய்ப்பாட்டுப் பாடலில் பாட வேறுபாடு
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பதூஉம்,
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு
இந்தப் பாடலில் இனிய நிலையை உடைய காஞ்சி என்று அடைமொழியாகக் கொள்ளப்பட்டுக் கைந்நிலை என்பது தனி நூலாகக் கொள்ளப்படும்.
இன்னிலை, கைந்நிலை, நூல்களில் எது பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் சேரவேண்டும்
- இன்னிலை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் மேல் 45 வெண்பாப் பாடல்களைக் கொண்ட நூல். இதன் ஆசிரியர் பொய்கையார். "இன்னிலை" நூலைத் திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதிப்பித்தார்.
- "கைந்நிலை" என்ற நூலை இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். இதனை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் அச்சில் பதிப்பித்தார். இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை மேல் பாடப்பட்ட 60 பாடல்கள் உள்ளன.
இன்னுரை நூலுக்கு உரை எழுதும் சங்குப் புலவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.[2]
இன்னிலை, கைந்நிலை வேறுபாடு
வேறுபாடு | இன்னிலை | கைந்நிலை |
---|---|---|
பொருள் | புறம் | அகம் |
ஆசிரியர் | பொய்கையார் | மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் |
பாடல்கள் | 45 | 60 |
பகுப்பு
இன்னிலை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொன்று நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.[3][4]
நீதி நூல்கள்
அகத்திணை நூல்கள்
புறத்திணை நூல்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை
வரிசைஎண் | நூல்பெயர் | பாடல் எண்ணிக்கை | பொருள் | ஆசிரியர் |
---|---|---|---|---|
1. | நாலடியார் | 400 | அறம்/நீதி | சமண முனிவர்கள் |
2. | நான்மணிக்கடிகை | 101 | அறம்/நீதி | விளம்பி நாகனார் |
3. | இன்னா நாற்பது | 40+1 (கடவுள் வாழ்த்து) | அறம்/நீதி | கபிலர் |
4. | இனியவை நாற்பது | 40+1 | அறம்/நீதி | பூதஞ்சேந்தனார் |
5. | திருக்குறள் | 1330 | அறம்/நீதி | திருவள்ளுவர் |
6. | திரிகடுகம் | 100 | அறம்/நீதி | நல்லாதனார் |
7. | ஏலாதி | 80 | அறம்/நீதி | கணிமேதாவியார் |
8. | பழமொழி நானூறு | 400 | அறம்/நீதி | முன்றுரை அரையனார் |
9. | ஆசாரக்கோவை | 100+1 | அறம்/நீதி | பெருவாயின் முள்ளியார் |
10. | சிறுபஞ்சமூலம் | 104 | அறம்/நீதி | காரியாசான் |
11 | முதுமொழிக்காஞ்சி | 10*10 | அறம்/நீதி | கூடலூர்க்கிழார் |
12. | ஐந்திணை ஐம்பது | 50 | அகம் | பொறையனார் |
13. | ஐந்திணை எழுபது | 70 | அகம் | மூவாதியார் |
14. | திணைமொழி ஐம்பது | 50 | அகம் | கண்ணன் சேந்தனார் |
15. | திணைமாலை நூற்றைம்பது | 150 | அகம் | கணிமேதையார் |
16. | கைந்நிலை | 60 | அகம் | புல்லங்காடனார் |
17. | கார்நாற்பது | 40 | அகம் | கண்ணங் கூத்தனார் |
18. | களவழி நாற்பது | 40+1 | புறம் | பொய்கையார் |
மேற்கோள்கள்
- ↑ சங்க இலக்ககியம், பதினெண்கீழ்க்கணக்கு, நானாற்பது உரையுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962, ந. மு. வேங்கடசாமி நாட்டார் முகவுரை, பக்கம் 5
- ↑ இன்னிலை , பண்டித வித்துவான் தி. சங்குப் புலவரவர்கள் விளக்கவுரையுடன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி-6. சென்னை-1. 1961 முன்னுரை
- அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி யிலக்கியங்களிற் சிறந்தன சங்ககால இலக்கியங்கள் எனச் சாற்றுவர் புலவர். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு எனப்பெயர்பெறும். பத்துப்பாட்டு இன்ன இன்ன என அறிவதற்கு "முருகு பொருநாறு" என்ற வெண்பாத் துணை புரிகின்றது.
- எட்டுத்தொகை நூல்களை "நற்றிணை நல்ல" என்ற வெண்பா எடுத்துக்காட்டுகின்றது. அவ் வெண்பாக்களிற் கூறிய முறைப்படியே தொகுக்கப்பட்டுப் பின்னர் அச்சிற் பதிக்கப்பட்டு அவைகள் உலவுகின்றன.
- பண்டைக்காலப் பாவலர் பாடிய பாக்கள் தாம் எனத் துணிவதற்கு அந் நூல்களிலுள்ள கவி ஒவ்வொன்றும் சான்றாம்.
- கற்றுவல்ல சான்றோர் அவற்றில் ஒன்றையேனும் பழங்காலத்தது அன்று எனப் பகர்வாரிலர்.
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் முழுவதும் அவ்வாறு தெளிவுறப் பதிந்து வெளிவந்தில, வந்தவை சில அக்காலத்தின வல்லவெனத் துணிவதற்கு அவ்வந் நூற்கவிகள் சான்றாய்த் தோன்றா நின்றன.
- திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணை மொழி ஐம்பது, ஐந்திணையெழுபது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி நானூறு ஆகிய நூற்கவிகள் பண்டைக் காலத்தன வென்னலாம்.
- கற்றோர்க்குக் கருத்து வேறுபாடு தோன்றாது. மற்றை நூற்கவிகளை நோக்கின் ஐயமே உள்ளத்திலெழும், துணிவு பிறவாது.
- இது நிற்க.
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணு முறையுங் காட்டும் ஒரு வெண்பாவும் இதுகாறும் ஐயத்திற்கிடமாகவே உள்ளது.
- நாலடி நான்மணி நானாற்ப தைந்திணை முப்பால், கடுகங்கோவை பழமொழி-மாமூலம், இன்னிலைய காஞ்சியுடனேலாதி யென்பவே, கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு."
- இது பதினெட்டு நூல்களையும் காட்டுமாறு ஒரு புலவராற் பாடப்பட்டது எனத் தெரிகிறது.
- பாட வேறுபாடு பல.
- வேண்டிய வேறுபாடு ஒன்றை மட்டும் காட்டுகின்றேன்.
- "இன்னிலைய காஞ்சியுடனேலாதி யென்பதூஉம், கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு" என்பது இவ்வேறு பாட்டில் ஒன்று.
- முன்னது "இன்னிலை" ஒரு நூலாகக் காட்டுகின்றது.
- பின்னது "கைந்நிலை" ஒரு நூலாகக் காட்டுகின்றது. இன்னிலையை நூலாகக் கொண்டால் கைந்நிலை மறைந்து "ஒழுக்க நிலையனவாம்" கீழ்க்கணக்கு என அடை மொழியாகின்றது.
- கைந்நிலையை நூலாகக் கொண்டால் இன்னிலை மறைந்து "இனிய நிலைமையாகிய காஞ்சி என அடை மொழியாகின்றது.
- பதினெட்டாவது நூல் இன்னிலையா? கைந்நிலையா? என்ற ஐயம் எவர்க்கும் தோன்றுகின்றது.
- "இன்னிலை" உள்ளது என்று பலர் கூறினர்.
- கைந்நிலை உள்ளது ஒன்று பலர் கூறினர்.
- ஏட்டிலுள்ளது என முன்னர்க் கூறியவர்கட்கு எடுத்துக் காட்டுபவர் போல "இன்னிலை" என்ற நூலை திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதித்தனர்.
- "கைந்நிலை" என்ற நூலை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் பதித்தனர். அவற்றின் வரலாறு சிறிது காண்க.
- "திரு. பொய்கையார் இன்னிலை. திரு வ. உ., சிதம்பரம் பிள்ளையவர்கள் விருத்தியுரையுடன் தில்லையாடி த. வேதியப் பிள்ளையால் பதிப்பிக்கப் பெற்றது.
- இரண்டாம் பதிப்பு. அம்பா சமுத்திரம் அகஸ்தியர் அச்சுக்கூடம் விபவ வருஷம்" என்று முன்பக்கம் எழுதப்பட்டுள்ளது.
- இப்புத்தகத்தில் "முன்னுரை" "ஆசிரியர்". "உரைப்பாயிரம்," "இரண்டாம் பதிப்புரை" ஆகிய நான்கும் வ. உ. சி அவர்களே வரைந்திருக்கின்றனர்.
- பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று "இன்னிலை" தான் என்பதற்கும் அதனை இயற்றியவர் பொய்கையார் என்பதற்கும் இது சிறந்த நூல் என்பதற்கும் பல காரணங்காட்டி விளக்குகிறார். * இந்நூல் அவர்கள் கைக்குக் கிடைத்த விதம் அப் புத்தகத்தில் உள்ளபடி இங்கு வரைகின்றேன் அறிக. இன்னிலை'ஆசிரியர்' என்ற தலைப்பில் உள்ளது இது.
- "இந்நூலினது ஏட்டுப் பிரதியின் முதல் ஏட்டுத் தொடக்கத்தில் மதுரையாசிரியரால் தொகுக்கப்பட்ட இன்னிலை நாற்பத்தைந்து நன்றாக என்னும் சொற்களும், அம் முதலேட்டின் முடிவில் திருமேனிக் கவிராயன் எழுதி வரும் இன்னிலை நாற்பத்தைந்து நன்றாக என்னுஞ் சொற்களும், அவ்வேட்டுப் பிரதியின் கடைசி ஏட்டு முடிவில் பொய்கையார் பாடிய இன்னிலை முற்றிற்று என்னும் சொற்களும், எழுதப்பட்டுள்ளன.
- இந்நூலின் ஏட்டுப் பிரதியை எழுதிய திருமேனி இரத்தினக் கவிராயரவர்கள் செந்தமிழ்ப் புலமையும் சீரிய ஒழுக்கமும் தெய்வ பக்தியுஞ் சிறந்து விளங்கியவர்கள்.
- இந்நூலின் ஏட்டுப் பிரதியை அளித்த ஸ்ரீமான் மலையையாப் பிள்ளையவர்கள் அக்கவிராயவர்களின் ஏடுகளை யெல்லாம் போற்றி வைத்திருக்கும் அவர்களுடைய சந்ததியார்களின் தலைவராய் விளங்கியவர்கள்.
- பொய்கையார் என்பவர் இன்னிலை என்னும் நூலை இயற்றிற்றிலர் என்றாவது, அந்நூலை வேறு யாரேனும் இயற்றினரென்றாவது நாம் கேள்விப்படவில்லை. ஆதலால் இன்னிலை என்பது இந்நூலே என்றும் இந்நூலை இயற்றியவர் பொய்கையாரே யென்றும் நாம் கொள்ளலாம்" என்பது,
- இன்னிலை முதலிற் பதித்ததும் இரண்டாவது பதித்ததும் வ.உ.சி அவர்களே என்பதும், ஏட்டுப் பிரதியும் ஒன்றே என்பதும், அது மலையையாப் பிள்ளையவர்கள் அளித்தனர் என்பதும், மதுரையாசிரியரால் தொகுக்கப்பட்ட இன்னிலை நாற்பத்தைந்து, திருமேனிக் கவிராயன் எழுதி வரும் இன்னிலை நாற்பத்தைந்து, பொய்கையார் பாடிய இன்னிலை முற்றிற்று என அவ்வேட்டின் முதலிலும் முடிவிலும் எழுதப்பட்டிருந்தன என்பதும் நாம் அறிகின்றோம்.
- உரையாசிரியர்களில் இன்னார், இந்நூற்கவிகளை மேற்கோள் காட்டி, இன்னிலையில் உள்ளது என்று குறிப்புக் காட்டியுள்ளனர், என்பதற்கு ஆதாரம் ஒன்று மின்று, வ. உ. சி அவர்களும் சான்று காட்டினாரல்லர்.
- உரையாசிரியர் சிலர் மேற்கோளாக இன்னிலையிலுள்ள கவிகளை எடுத்தாண்டனர் என்று வ. உ. சி. அவர்கள் கூறியதை ஆராய்ந்தால் வியப்பு விளைகின்றது.
- தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 23 ஆம் சூத்திரம் இளம்பூரணருரை, கற்பியல், 5 ஆம் சூத்திரவுரை 12 ஆம் சூத்திரவுரை ஆகிய இடங்களைச் சுட்டி இன்னிலை நூலில் 2, 37, 29, 32, 35 எண்ணுடைய ஐந்து பாடல்களும் வந்துள்ளன என விளக்கினர்.
- இளம் பூரணத்தை நோக்க அவற்றுள் ஒன்றேனும் வந்திலது.
- முந்தின பதிப்புக்களில் இருந்து பின்னர் அவை விடுபட்டனவோ என ஐயுறும் நிலையிலுள்ளது.
- தொல்காப்பியம் செய்யுளியல் 113 ஆம் சூத்திரம் பேராசிரியருரையில் அவர்கள் கூறியவாறே இன்னிலை 5 ஆம் செய்யுள் மேற் கோளாக வந்துள்ளது.
- யாப்பருங்கலவிருத்தி யுரையாசிரியரும் இன்னிலை 2 ஆம் செய்யுளை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.
- ஆயினும் அக்கவிகள் இன்னிலை என்ற நூற் கவிகள் தாம் என்பதற்குச் சான்று தோன்றும் வகை ஆங்கில்லை.
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக இன்னிலை வந்த வழி இந்த வழி என்றுணர்க.
- இனிக் கைந்நிலை வந்த வழி காண்போம்.
- ↑ ஆசாரக்கோவை 100-ஆவது பாடல் 5 அடிகளைக் கொண்டது.
அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்பான்
அரசர் தொழிற்றலை வைத்தான் மணாளனென்
றொன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான்
ஆசாரம் வீடுபெற் றார். 100 - ↑
இதன் பாயிரம் ஆறு அடிகளைக் கொண்டது
ஆரெயில் மூன்றும் அழித்தான் அடிவணங்கி
அரிடத்துத் தான்றிந்த மாத்திரையான் ஆசாரம்
ஆரும் அறிய அறனாய மற்றவற்றை
ஆசாரக் கோவை எனத்தொகுத்தான் தீராத்
திருவாயி லாய திறல்வண் களத்தூர்ப்
பொருவாயில் முள்ளியென் பான்.