சிலப்பதிகாரம்

தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம். பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.

பெயர்க் காரணம்

"சிலப்பதிகாரம்" என்ற சொல் சிலம்பு, அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று.

கதை

  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.[1]
  • நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது.[2]
  • மலையாள மொழி[3] பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில். எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது.
  • புகார் நகரத்தில் சிவன்கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.[4] 276 ஊர்களிலிருந்த சிவன்கோயில்களைக் குறிப்பிடும் தேவாரம் இதனைக் குறிப்பிடவில்லை. எனவே புகார் நகரைக் கடல் கொண்டது தேவாரம் தோன்றிய 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது.
  • புகார் நகரத்தில் பலராமனுக்கும், கண்ணனுக்கும் தனித் தனிக் கோயில்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.[5] 108 திருப்பதிகளைக் காட்டும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் இந்தக் கோயில் பற்றிய செய்தியே இல்லை. இதனாலும் சிலப்பதிகாரம் 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பது உறுதியாகிறது.
  • கண்ணகி விழாவுக்குச் சென்றிருந்த இலங்கை மன்னன் கயவாகு தன் நாட்டு இலங்கையில் எழுப்பப்போகும் கோயிலிலும் எழுந்தருளும்படி, கண்ணகி தெய்வத்தை வேண்டிக்கொள்கிறான்.[6]
  • இந்தக் கயவாகு காலம் பொ.ஊ. 114-136[7]
  • தேவாரம், திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி முதலான நூல்கள் விருத்தப்பா என்னும் பா வகையைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் வழக்கில் இருந்த ஆசிரியப்பா [8] நடையில் அமைந்துள்ள சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அந்த நூல்களுக்கு முந்தியவை.[9]
  • எனவே இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு.

சான்றுடன் மணிமேகலை காலம் : 1. நாகார்ச்சுனரால் உண்டாக்கப்பட்ட மகாயான பௌத்த மதக் கொள்கைகள் மணிமேகலையில் கிடையாது. ஆனால் ஈனயான பௌத்த மதக்கொள்கைகள் நிரம்பி இருப்பதனால் மணிமேகலை காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு என்கின்றனர்.

2. கிருதகோடி ஆசிரியர் பற்றி குறிப்பிடுவதால் மணிமேகலை பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்றனர் ஆய்வாளர்கள். பல்வேறு சான்றுகளை ஒப்பீடு செய்து கால ஆராய்ச்சி என்னும் தன் நூலில் சி. இராசமாணிக்கனார் மணிமேகலை காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பு என்றார்.

3. சங்கப் புலவர் மாமூலனார் பிறந்த காலம் பொ.ஊ.மு. நான்காம் நூற்றாண்டின் மத்திய பகுதி என கல்வெட்டு மற்றும் ஓலைச் சுவடி பாடல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாமூலனார் காலத்தின் மூலம் கணக்கிட்டதில் மணிமேகலை காலம் பொ.ஊ. முதல் நூற்றாண்டின் ஆரம்ப காலம் என சந்தேகம் இல்லாமல் நிரூபிக்கபட்டுள்ளது தற்காலத்தில்.

இளங்கோவடிகள்

இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர்.

சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவர் ஆவார்.

நூலமைப்பு

காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன. அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிக்கின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூல் இதுவேயாகும். சிலப்பதிகாரம், நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல் வரி, வேட்டுவ வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

காண்டங்கள்

  • புகார்க் காண்டம்
  • மதுரைக் காண்டம்
  • வஞ்சிக் காண்டம்

காலமும் சமயமும்

காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். இவன் கலையுணர்வும், வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாயகனின் மகள் கண்ணகி. இவள் திருமகள் போன்ற அழகும், அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும், கற்புத்திறமும் கொண்டவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு, இன்புற்று வாழ்ந்தனர்.

கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான். அவன் மாதவி இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். மாதவி இந்திர விழாவில் கானல் வரிப் பாடலைப் பாடினாள். பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை விட்டுப் பிரிந்தான், பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான். வணிகம் செய்தற்பொருட்டு கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவியும் சென்றார். அவர், மதுரை நகர்ப்புறத்தில் மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார். கோவலன் சிலம்பு விற்று வர மதுரை நகரக் கடை வீதிக்குச் சென்றான். விலை மதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றை கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான்.

பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனை , சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான். கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை மாதரி மூலம் அறிந்த கண்ணகி; பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர் " என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம்" கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது" என்றாள். அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே! எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பினைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள்.

புகார்க்காண்டம்

இது 10 காதைகளைக் கொண்டது.அவை,

  1. மங்கல வாழ்த்துப் பாடல்
  2. மனையறம் படுத்த காதை.
  3. அரங்கேற்று காதை.
  4. அந்தி மாலைச் சிறப்பு செய் காதை.
  5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை.
  6. கடல் ஆடு காதை.
  7. கானல் வரி
  8. வேனிற்காதை
  9. கனாத் திறம் உரைத்த காதை.
  10. நாடு காண் காதை

மங்கல வாழ்த்துப் பாடல்

புகார் நகரிலே, கோவலனின் தந்தையான மாசாத்துவானும், கண்ணகியின் தந்தையான மாநாய்கனும், தம் மக்கள் இருவருக்கும் மணஞ்செய்வித்த சிறப்பும், மணமகளை மாதர்கள் பலர் சூழ்ந்து நின்று மங்கல வாழ்த்து உரைத்தலும், இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது. திருமணத்தின் போது கண்ணகிக்கு வயது பன்னிரண்டாண்டு ஆகும். கோவலன் திருமணத்தின் போது பதினாறு ஆண்டு பருவத்தை உடையவன். வானத்து அருந்ததியைப் போலும் தகைமையுடைய கண்ணகியைக் கோவலன், மிகவும் வயது முதிர்ந்த பார்ப்பான் மறைவழிகளைக் காட்டி ஒன்று சேர்க்க மணந்து, அவளுடன் தீயினையும் வலம் வந்த காட்சியைக் கண்டவர் கண்கள் தவம் செய்தவை ஆகும். மங்கல மகளிர் மணமக்களையும் தம் மன்னன் செம்பியனையும் வாழ்த்தினர்.

மனையறம் படுத்த காதை

திருமணத்தால் ஒன்றுபட்ட கோவலனும் கண்ணகியும் தம்முட்கூடி இல்லறம் நிகழ்த்திய செய்திகள் பலவும் இதன்கண் கூறப்படுகின்றன. சில ஆண்டுகளாக அவர்களின் இல்வாழ்வும் இன்பமுடனேயே கழிந்தது என்பதனையும், அவர்களைத் தனி மனைக்கண் பெற்றோர் இருத்தியதையும், அவர்கள் தனிக் குடும்பமாக வாழத்தொடங்கியதையும் இக் காதை கூறுகிறது.

அரங்கேற்று காதை

மாதவி என்னும் ஆடல்மகள் சேர மன்னர்த் தன் நாட்டியத் திறம் எல்லாம் தோன்ற ஆடிக் காட்டினாள். அவள் தலையரங்கேறித் தலைக்கோலம் பெற்றாள். அவள் ஆடலைக் கண்டு மகிழ்ந்த காவல் மன்னன், அந்நாட்டு நடைமுறையான இயல்பிலிருந்து வழுவாமல், அரசனின் பச்சை மாலையையும், 'தலைக்கோலி' என்ற பெயரையும் மாதவி பெற்றனள். தலையரங்கிலே ஏறி ஆடிக்காட்டி, 'நாடக கணிகையர்க்குத் தலைவரிசை' என நூல்கள் விதித்த முறைமையின்படி, ஆயிரத்து எட்டுக் கழஞ்சுப்பொன்னை ஒருநாள் முறையாகப் பெறுபவள், என்ற பெருமையையும் பெற்றனள். நகரத்து இளைஞர்கள் பலரும் திரிந்து கொண்டிருக்கிற பெருந்தெருவிலே, கூனி, மாதவியின் மாலையை விலை கூறுவாள்.கோவலன் அதற்குரிய ஆயிரம் பொன்னையும் தந்து வாங்கினான். கூனியுடனே, தானும் மாதவியின் மணமனைக்குச் சென்றான். குற்றமற்ற சிறப்பினையுடைய தன் மனைவியின் நினைவையே தன் உள்ளத்திற் சிறிதும் கொள்ளாதவனாகி, தன் வீட்டை, கண்ணகியை, அறவே மறந்து மாதவி வீட்டினிலேயே மாலைத் தங்குவானுமாயினன் என்பதைக் கூறும் பகுதியே அரங்கேற்றுக் காதை.

அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை

மாலை நேரத்திலே, தம்முள் கூடினார் இன்பத்திலே திளைத்து மயங்குவதும், பிரிந்தவர் அளவுகடந்த வேதனையால், நைந்து அயர்வதும் இயல்பு ஆகும். கோவலனோடு கூடியிருந்த மாதவியும், அவனால் கைவிடப்பட்ட கண்ணகியும், ஒருநாள் மாலை வேளையிலே இருந்த இருவேறு மயக்கநிலைகளையும் விளக்கிக்காட்டி, மாலைக்காலத்தின் தகைமையை இப்பகுதியில் கூறுகின்றனர். தம்மோடு கலந்து உறவாடுபவர்களுக்கு நிழலாகியும், தம்முடன் கூடாது பிரிந்து வாழ்பவர்களுக்கு வெய்யதாகவும், காவலனின் வெண்கொற்றக் குடைபோல, முழுநிலவும் வானிலே விளங்கிற்று. வானத்திலே ஊர்ந்து செல்லும் நிலவு தான் கதிர்விரிந்து அல்லிப்பூக்களை மலர்விக்கும் இரவுப் பொழுதிலே, மாதவிக்கும் கண்ணகிக்கும் அவ்வாறு நிழலாகவும் வெய்யதாகவும் விளங்கி, அவர்களை முறையே இன்பத்திலும் துன்பத்திலும் ஆழ்த்திற்று என்பது இக்காதை கூறும் செய்தியாகும்.

இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

புகார் நகரின் அமைப்பும், அங்கு வாழ்ந்த பல்வேறு வகையினரான குடியினர்களும், அவ்வூரார் இந்திர விழாக் கொண்டாடிய சிறப்பும் பற்றிச் சொல்லும் சிறந்த பகுதி இது. புகார் நகரின் மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் ஆகிய இடங்களின் சிறப்பையும், ஐவகை மன்றங்களாகிய தெய்வமன்றம், இலஞ்சிமன்றம், ஒளிக்கல் மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம் ஆகியவிற்றில் அரிய பல்வேறு பலிகளையும் இட்டு மக்கள் பலரும் வழிபட்டுப் போற்றிய நிகழ்ச்சியையும் எடுத்துரைக்கின்றது. வழிபாடுகளும் விழாக்களும் எங்கனும் நிகழ்கின்றன. விழாக்களிப்பிலே மனம் தளர்ந்த தம் கணவரோடு மனைவியர் சினந்து ஊடுகின்றனர். உட்புறத்திலே நறுந்தாது நிறைந்து இருத்தலால், மேலேயிருக்கும் கட்டு அவித்து, தேன் சொரிய நடுங்கும் கழுநீர் மலரினைப்போலக், கண்ணகியின் கருங்கண்ணும் மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தின் நினைவை மறைத்துத் தத்தம் எண்ணத்தை அகத்தே ஒளிக்க முனைந்து, விண்ணவர் கோமானின் விழவு நாட்களிலே நீர் உகுத்தன. அவ்வேளையில் கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடிக்கின்றன. பிரிவுத்துயரால் கண்ணகிக்கும், ஆனந்த மிகுதியால் மாதவிக்கும் கண்கள் நீரைச் சொரிந்தன.

கடல் ஆடு காதை

விஞ்சையர் வேரன் ஒருவன், தன் காதலியுடன் புகாருக்கு இந்திர விழாக் காணவந்தான். மாதவியின் பதினொரு வகை ஆடல்களையும் தன் காதலிக்குக் காட்டி மகிழ்ந்தான். விழா முடிந்ததும் கோவலன் மாதவியோடு ஊடினான். மாதவி அவன் ஊடல் தீர்த்துக் கூடினாள். பின்னர்க் கடலாட விரும்பினாள். இருவரும் கடற்கரைச் சென்றனர். களித்திருக்கும் பிற மக்களோடு தாமும் கலந்தவராக அவர்கள் மகிழ்ந்திருந்தனர் என்பதை எடுத்துரைக்கும் பகுதி இது.

கானல் வரி

கோவலனும் மாதவியும் யாழிசையுடன் சேர்ந்து கானல்வரிப் பாடல்களைப் பாடுகின்றனர். இறுதியிலே, கோவலனின் மனம் மாறுகின்றது அவனுடைய ஊழ்வினை சினந்துவந்து அவன் பாற் சேரத் தொடங்கிற்று. முழுநிலவினைப் போன்ற முகத்தினளான மாதவியை, அவளோடு கைகோர்த்து இணைந்து வாழ்ந்த தன் கைப்பிணைப்பை, அந்நிலையே நெகிழவிட்டவனும் ஆயினான். மாதவியுடன் செல்லாது, தன் ஏவலாளர் தன்னைச் சூழ்ந்துவர, கோவலன், மாதவியைவிட்டுப் பிரிந்து, தான் தனியாகவே சென்று விட்டான். செயலற்ற நெஞ்சினளானாள் மாதவி. தன் வண்டியினுள்ளே சென்றும் அமர்ந்தாள். காதலன் தன்னுடன் வருதல் இல்லாமலேயே, தனியாகவே, தன்மனைச் சென்று புகுந்தாள். கானல் விழாவின் முடிவில் மன்னனை வாழ்த்தும் மரபும் பேணப்பட்டது. ஊழ்வினை வந்து உருத்தது என்பதனைக் காட்டும் உருக்கமான பகுதி இது.

வேனிற்காதை

இளவேனிற் பருவமும் வந்தது. கோவலனின் பிரிவாலே துயரடைந்த மாதவி, தன் தோழி வசந்தமாலையைத் தூது அனுப்பினாள். தன்பால் வந்த தூதினைக் கோவலன் மறுத்தான். வசந்தமாலையிடம், ஆயிழையே! அவளோர் ஆடல் மகள்! ஆதலினாலே, என்பாற் காதல் மிகுந்தவளேபோலே நடித்த நாடகமெல்லாம், அவளுடைய அந்தத் தகுதிக்கு மிகவும் பொருத்தம் உடையனவே! தன்மேல் அவளுக்கு உண்மையான காதல் எதுவும் இல்லை எனக் கூறி மாதவியை நாடி வர மறுத்தான். அதனால் மாதவி மனம் துடித்தாள். இளவேனிற்கு முந்திய பருவத்தே பிரிந்தவன், இளவேனிற் காலத்திலாவது வருவானென மயங்கியிருந்த அவள் மனம், இளவேனிற்காலம் வரவும் அவன் வாராமை கண்டு, நிலை கொள்ளாது தவிக்கின்றது என்பதையும் காணலாம். இளவேனில் பற்றிய ஏக்கமே, கோவலனிடம் கண்ணகி நினைவையும் தூண்டிற்று என்பதும் இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.

கனாத்திறம் உரைத்த கதை

கண்ணகி, தேவந்தியிடம் "யான், இனி என் கணவனுடன் கூடுதலைப் பெறவே மாட்டேன். என் நெஞ்சம் ஏனோ வருந்துகின்றது! கனவிலே நேற்றிரவு கோவலன் வந்தான். என் கைப்பற்றி'வருக! என அழைத்தான். இருவரும் வீட்டைவிட்டுப் போய், ஒரு பெரிய நகரினுள் சென்றோம். சேர்ந்த நகரிலே என் மீது தேளினைப் பிடித்து இட்டவரைப்போலக், 'கோவலனுக்கு ஒரு தீங்கு விளைந்தது' என்று எங்கட்கு ஏலாத்தோர் வார்த்தையினைச் சொல்லினர். அது கேட்டுக் காவலன் முன்னர்ச் சென்று யானும் உண்மையைக் கூறி வழக்கு உரைத்தேன். காவலனோடு, அவ்வூருக்கும் நேரிட்ட தீங்கு ஒன்றும் உண்டாயிற்று. அந்நிலையே யான் பேச்சற்றேன்" என்று தான் கண்ட கனவை எடுத்துரைத்தாள். கோவலன் கண்ணகியிடம் மீண்டும் வந்தான். தன் மனைவியின் வாடிய மேனியும் வருத்தமும் கண்டான். தம் குலத்தவர் தந்த மலைபோலும் பெரிய பொருட்குவைகள் எல்லாமே தொலைந்து போயின; அதனால் வந்த இல்லாமை நிலை தனக்கு வெட்கத்தைத் தருவதாகவும் கூறினான். கண்ணகியோ தன் திருமுகத்திலே முறுவலினைக் காட்டி "சிலம்புகள் உள்ளன; எடுத்துக் கொள்ளும்" என்றாள். காதலியான கண்ணகியானவள் கண்ட தீய கனவு, கரிய நெடுங் கண்களையுடைய மாதவியின் பேச்சினையும் பயனற்றுப் போகச் செய்தது. பழவினை வந்து கோவலனின் நெஞ்சினைத் தன் போக்கிலே ஒருப்படுத்தப், பொழுது விடியுமுன் இருவரும் தம் வீட்டைவிட்டும், புகாரை விட்டும் வெளியேறி, மதுரை நோக்கிப் பயணமாயினர். இப்பகுதியில் கண்ணகியின் கனவு விளக்கப்பட்டுள்ளது.

நாடுகாண் காதை

வீட்டைவிட்டும், புகாரை விட்டும் வெளியேறிய கோவலனும் கண்ணகியும், கவிந்தியடிகளுடன் மதுரையை நோக்கி நடந்ததனர். திருவரங்கத்தைக் கடந்து, அம்மூவரும் சோணாட்டு உறையூர் வரையும் சென்றது பற்றிக் கூறுவது இப்பகுதியாகும். இத்துடன் புகார்க் காண்டம் முடிவுற்றது.

மதுரைக் காண்டம்

இது 13 காதைகளைக் கொண்டது. அவை,

  1. காடு காண் காதை,
  2. வேட்டுவ வரி,
  3. புறஞ்சேரி இறுத்த காதை,
  4. ஊர் காண் காதை,
  5. அடைக்கலக் காதை,
  6. கொலைக்களக் காதை,
  7. ஆய்ச்சியர் குரவை,
  8. துன்ப மாலை,
  9. ஊர் சூழ் வரி,
  10. வழக்குரை காதை,
  11. வஞ்சின மாலை,
  12. அழற்படுகாதை,
  13. கட்டுரை காதை

என்பவை ஆகும்.

காடுகாண் காதை

கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் என்னும் மூவரும், தென்திசை நோக்கி நடையைத் தொடர்ந்தனர். இடைவழியிலே மாங்காட்டு மறையோனைச் சந்தித்து, வழியின் இயல்புகளை அவன் மூலம் கேட்டு அறிந்தனர். கானுறை தெய்வம் வசந்த மாலையின் வடிவிலேத் தோன்றிக் கோவலனின் மதுரைப் போக்கைத் தடுக்க முயல்கிறது. 'வசந்தமாலையின் வடிவிலே தோன்றினால், மாதவியின் பேரிலுள்ள காதலினால் இவன் நமக்கு இசைவான்' என்று கருதிய அத்தெய்வம் கோவலனின் பாதங்களின் முன் வீழ்ந்து கண்ணீரும் உகுத்தது. வசந்தமாலை, ஏதோ பிழைபட்ட சொற்களைக் கோவலனிடம் சொன்னதால்தான் கோவலன், தன்னைக் காண வராமல் கொடுமை செய்து விட்டான் என்று மாதவி கூறி மயங்கியும் வீழ்ந்தாள் என்றும் மாதவி, கணிகையர் வாழ்வு, என்றும் கடைப்பட்ட வாழ்வே போலும்! என்று சொல்லி வருந்திக் கண்ணீர் உகுத்ததாகவும் வசந்தமாலையின் வடிவில் தோன்றிய கானல் தெய்வம் கூறியது. மயக்கும் தெய்வம் இக்காட்டிலே உண்டு என்று வியக்கத்தக்க மறையவன் முன்னரே கோவலனிடம் சொல்லியிருந்தனன். கோவலன் கூறிய மந்திரத்தால் வசந்தமாலை வடிவில் தோன்றியக் கானுறை தெய்வம் "யான் வனசாரிணி; நினக்குமயக்கம் விளைவித்தேன்; புனத்து மயிலின் சாயலினையுடைய நின்மனைவிக்கு, புண்ணிய முதல்வியான கவுந்தியடிகளுக்கும் என் செயலைக் கூறாது போய் வருக' என்று சொல்லி, அத்தெய்வம், அவ்விடத்து நின்றும் மறைந்து போய்விட்டது. அதன்பின்னர் மூவரும் ஐயையின் திருக்கோயிலைச் சென்றடைகின்றனர்.

வேட்டுவ வரி

ஐயைக் கோட்டத்திலே ஒரு பக்கமாகச் சென்றிருந்து கோவலன், கண்ணகி, கவுந்தி ஆகிய மூவரும் இளைப்பாறுகின்றனர். அங்கே 'சாலினி' தெய்வமேற்று, கண்ணகி வாழ்வின் பின்நிகழ்வுகளைக் கூறுகின்றாள். பின், வேட்டுவர் வரிப்பாட்டுப் பாடி கூத்து ஆடுகின்றனர்.

புறஞ்சேரி இறுத்த காதை

பகல் நேர வெய்யிலோ கடுமையாயிருந்தது. அதனால் பகலிற் செல்லாது, இரவில் நிலவு வெளிச்சத்திலேயே அவர்கள் வழிநடந்தனர். இடையே, ஓரிடத்திலே, கௌசிகன் மாதவியின் ஓலையுடன் வருகின்றான். தன் பெற்றோர் அருமணி இழந்த நாகம் போலும் இன்னுயிர் இழந்த யாக்கை போன்றும் துயருற்ற சம்பவத்தையும், உற்றோரும் துயர்க் கடல் வீழ்ந்ததையும், மாதவியின் துயரத்தையும் கௌசிகன் கொண்டுவந்த, மாதவியின் கடிதத்தின் மூலம் அறிந்தான். மாதவியும் குற்றமற்றவளே என்பதை உணர்ந்து, அக்கடிதத்தையே தன் பெற்றோரிடம் கொண்டுபோய் கொடுக்கும்படியாக கோவலன், கௌசிகனை வேண்டினான். கௌசிகனை மீண்டும் புகாருக்கு அனுப்பிவிட்டுக் கோவலன், அவ்வழியிடையே வந்து தங்கிய பாணருடன் கூடி யாழிசைக்கின்றான். அவர்பால் மதுரையின் தூரத்தினைக் கேட்டறிந்து, வைகையாற்றை மரத்தெப்பத்தாற் கடந்து செல்லும் போது வைகையாறு கண்ணகிக்கு ஏற்படப்போகும் துன்பத்தைத் தான் முன்னரே அறிந்தவளைப்போலப், புண்ணிய நறுமலர் ஆடைகளால் தன் மேனி முழுவதும் போர்த்துத், தன்கண் நிறைந்த மிகுந்த கண்ணீர் வெள்ளத்தையும் உள்ளடக்கிக்கொண்டு, அவள் அமைதியாகவும் விளங்கினாள். பின்னர் இனிய மலர்செறிந்த நறும்பொழிலின் தென்கரையினைச்சென்று அவர்கள் சேர்ந்தனர். பகைவரைப் போரிலே வென்று வெற்றிக் கொடியானது, 'நீவிர், இவ்வூருக்குள்ளே வாராதீர்' என்பது போல, மறித்துக் கைகாட்டியபடியே பறந்து கொண்டிருந்தது. அறம்புரியும் மாந்தர் அன்றிப் பிறர் யாரும் சென்று தங்காத, புறஞ்சிறை மூதூரினை நோக்கி அவர்கள் மூவரும் விரும்பிச் சென்றனர்.

ஊர்காண் காதை

புறஞ்சிறை மூதூரிலே, கவுந்தியும் கண்ணகியையும் தங்கியிருக்க வைத்துவிட்டுக் கோவலன் மதுரை நகருக்குள் சென்று அங்குள்ள செல்வர், அரசர் வீதி, எண்ணெண் கலையோர் வீதி, அங்காடி வீதி, இரத்தினக் கடைத் தெரு, பொன்கடை வீதி, அறுவை வீதி, கூல வீதி ஆகிய பல்வேறு வீதிகள் வழியாகச் சென்று அவற்றின் சிறப்புகளையும் கண்டு, மீண்டும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் செய்தியைக் கூறும் பகுதி இது.

அடைக்கலக் காதை

புறஞ்சேரிக்குத் திரும்பிய கோவலன், மதுரையிலே கண்டவெல்லாம், கவுந்தியிடம் வியப்போடு எடுத்துக் கூறினான். 'தென்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை உணர்த்தி' என்று சொல்லி மதுரை சென்றவன், அதுபற்றி ஏதுங் கூறவில்லை. கவுந்தியம்மை கவலையடைகின்றார். அவ்வேளை, 'மாடலன்' அங்கே வருகின்றான். கோவலனின் சிறப்புகளைக் கூறுகின்றான். துறந்தோருக்குரிய அவ்விடத்தை விட்டுப் பொழுது மறைவதற்குள் மதுரை நகருட் செல்லுமாறு மாடலனும் கவுந்தியும் கோவலனைத் தூண்டுகின்றனர். அவன் செயலற்று இருக்கவே, அவ்வழியாக வந்த மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக அளிக்கின்றார் கவுந்தியடிகள். அவளும், கண்ணகியுடன் கோவலனும் பின்வரத் தன்வீட்டிற்கு அவளை அன்போடு அழைத்து போகின்றாள்.

கொலைக்களக் காதை

கோவலன் கண்ணகியருக்கு ஒரு புது மனையிலே இடந்தந்து, பல்வகைப் பொருளும் தருகின்றாள் மாதரி. தன் மகளையும் கண்ணகிக்குத் துணையாக அமைக்கின்றாள். கண்ணகி சோறாக்கித் தன் கணவனை உண்பிக்க, அவனும் அவளைப் பாராட்டி, தன் நிலைக்கு வருந்துகின்றான். கண்ணகியின் காற்சிலம்புகளுள் ஒன்றைக் கையிலே எடுத்துக்கொண்டு மதுரை நகருக்குப் போய் விலை மாறி வருவதாகக் கூறிச் சென்றான். கடைவீதி வழியே செல்லும்போது பொற்கொல்லன் ஒருவன் தன் பின்னே நூற்றுக்கணக்கான பொற்கொல்லர் தொடர்ந்துவர முன்னால் நடந்து வந்தான். அவனை அரண்மனைப் பொற்கொல்லன் என்று கருதி கோவலன் தான் கொண்டுவந்த காற்சிலம்பை அவனிடம் கொடுத்து விற்றுத் தருமாறு வேண்டுகின்றான். தன் குடிலில் கோவலனை இருத்திவிட்டு அக்காற்சிலம்பை மன்னருக்கு அறிவித்து வருவதாகச் சொல்லிச் சென்றான். பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கோவலன் கொல்லப்பட்டு இறந்தான்.

ஆய்ச்சியர் குரவை

ஆயர் சேரியிலே பல தீய நிமித்தங்கள் தோன்றின. குடத்திலிட்டு வைத்த பாலோ உறையவில்லை. ஏற்றின் அழகிய கண்களிலிருந்து நீர் சொரிகின்றன. வெண்ணெயோ உருக்கவும் உருகாது போயிற்று. ஆநிரைகளின் கழுத்து மணிகள் நிலத்திலே அறுந்து வீழ்கின்றன. ஆட்டுக்குட்டிகள் துள்ளியாடாவாய் முடங்கிக் கிடக்கின்றன. அதனால் தீமை நேரும் என்று அஞ்சிய ஆயமகளிர்கள், தம் குலதெய்வமான கண்ணனை வேண்டிக் குரவைக் கூத்து ஆடுகின்றனர்.

துன்ப மாலை

கண்ணகியின் துன்பத்தை உணர்த்துவதால் துன்ப மாலை என அழைக்கப்படுகிறது.

குரவையின் முடிவிலே, மாதரி வைகையிலே நீராடிவிட்டுவரப் போயினாள். கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்டுக் கண்ணகி புலம்பினாள். இப்பகுதியில் கண்ணகியின் அவல மிகுதியைக் காண்கின்றோம். அவள் காய்கதிர்ச் செல்வனை விளித்துக் கேட்டாள். "நின் கணவன் கள்வனல்லன்; இவ்வூரினைப் பெருந்தீ உண்ணப்போகின்றது" என்ற குரல் ஒன்று எழுந்தது.

ஊர்சூழ் வரி

எழுந்து ஒலித்த அக்குரலை அனைவருமே கேட்டனர். கண்ணகியும், தன்பாலிருந்த மற்றொரு சிலம்பினைத் தன் கையிலே எடுத்துக் கொண்டவளாகத், தன் கணவனின் உடலினை காணப் புறப்பட்டாள். அவன் கிடந்த நிலையைக் கண்டு அரற்றினாள். அவன் வாய் திறந்து பேசவும் கேட்டாள். குலமகளாகப் பொறுமையின் வடிவமாகத் துயரங்களைத் தாங்கி அமைதியோடிருந்தவள், கொதித்துப் பலரும் அஞ்சி ஒதுங்க, வம்பப் பெருந்தெய்வம்போல ஆவேசித்து, மன்னன் அரண்மனை நோக்கி அறம் கேட்கப் போகும் நிலையையும் காண்கின்றோம். இந்த நிலைமாற்றம் பெண்மையின் தெய்வீகப் பேரியல்பு என்றும் உணர்கின்றோம்.

வழக்குரை காதை

கண்ணகி அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசாத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர்" என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம் "கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது"என்றாள்.

அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே!எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள்.[10]

வஞ்சின மாலை

பாண்டியன் உயிர்விட்ட அக்காட்சி கண்ணகியைத் திகைப்படையச் செய்தது. கோப்பெருந்தேவியது கற்பின் செவ்வி அவளைப் பெரிதும் வியப்படையவும் செய்தது. எனவே, தானும் கற்புடை மகளிர் பலர் பிறந்த நகரிலே பிறந்தவள் என்றும், பத்தினியே என்றும், அரசோடு மட்டும் அமையாது மதுரை நகரினையும் அழிப்பேனென்றும் வஞ்சினம் கூறிச் சென்று, தீக்கடவுளையும் மதுரை மீது ஏவுகின்றாள்.

அழற்படு காதை

தீத் தெய்வத்தைக் கண்ணகி மதுரை மீது ஏவினாள். அதன் பயனாக மதுரை மூதூரினை எரிபற்றி உண்ணத் தொடங்கியது. நால்வகை வருணபூதங்களும் பிறவும் நகரைவிட்டு விலகிப்போயின. கணவனை இழந்துவிட்ட பிரிவுத் துயரோடு உள்ளம் கொதித்து, உலைக்களத்துத் துருத்திமுனைச் செந்தீயைப் போலச் சுடுமூச்செறிந்தனள் கண்ணகி. அங்ஙனம் சுடுமூச்செறிந்தவளாகத் தெருக்களிலெ கால்போன இடமெல்லாம் அவள் சுழன்று திரிந்தாள். குறுந்தெருக்களிலே கவலையுடன் நிற்பாள். போய்க்கொண்டும் இருப்பாள். மயங்கிச் செயலழிந்தும் நிற்பாள். இவ்வாறு பெருந்துன்பம் அடைந்த வீரபத்தினியின் முன்னர், மலர்ந்த அழலின் வெம்மைமிக்க நெருப்பினைப் பொறாதவளான 'மதுரபதி' என்னும் மதுரைமாதெய்வம் வந்து தோன்றினாள்.

கட்டுரைக் காதை

மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன்னால் தோன்றுகிறது. அவளது பண்டைய வரலாறும், கோவலன் செய்த பழைய பழியும் கூறுகின்றது. கண்ணகியும் மதுரையை விட்டு வெளியேறித் திருச்செங்குன்றினைச் சேர்ந்து, மதுராபதி கூறியபடியே, தன் கணவனுடன் ஒன்றுபடுகிறாள்.

இத்துடன் மதுரைக் காண்டம் முற்றுப்பெற்றது.

வஞ்சிக் காண்டம்

  1. குன்றக் குரவை
  2. காட்சிக் காதை
  3. கால்கோள் காதை
  4. நீர்ப்படைக் காதை
  5. நடுகற் காதை
  6. வாழ்த்துக் காதை
  7. வரம் தரு காதை

ஆகிய ஏழு காதைகளைக் கொண்டது.

குன்றக் குரவை

திருச்செங்குன்றினைச் சேர்ந்த கண்ணகியாள், மலர் நிறைந்த ஒரு வேங்கை மரத்தின் அடியிலே சென்று நின்றனள், மதுரைமா தெய்வம் கூறியதைப் போலவே, கோவலன் இறந்ததன்பின் பதினான்கு நாட்கள் கழிந்திருந்தன. வானுலகத்திலிருந்து தேவருடன் அவர் வர, அவனுடன் அவளும் விமானம் ஏறி வானகம் நோக்கிச் சென்றனள். அக் காட்சியைக் குறவர் குடியினர் கண்டனர். அவர்கள் அடந்த வியப்போ பெரிது!அதனால், அவளைத் தம் குலதெய்வமாகவே கொண்டு வழி பட்டுப் பணிந்து போற்றலாயினர்.

காட்சிக் காதை

சேர வேந்தனான செங்குட்டுவன் மலைவளம் காணச் சென்றான். கண்ணகி வேங்கை மரத்தடியில் நின்றதும், தாம் கண்ட அதிசயமும் குன்றக் குறவர் அவனுக்குக் கூறினர். அப்போது அங்கே அவ்விடத்தே இருந்த சாத்தனார், கண்ணகி வழக்கு உரைத்ததும், மதுரை தீயுண்டதும் பற்றி அவர்கட்குக் கூறினார். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் நட்டு வழிபட எண்ணினான். வடநாட்டு வேந்தர் சிலரின் வீராப்பான பேச்சு இமயத்திற்கே செல்ல அவனைத் தூண்டியது பற்றிய அரசாணையும் எழுந்தது என்பது இது.

கால்கோட் காதை

செங்குட்டுவன் படைப்பெருக்கோடு வடநாடு நோக்கிச் சென்றான். எதிர்த்த ஆரிய மன்னர்கள் பலரையும் வென்றான். இமயத்திலே பத்தினிக்குக் கல்லும் தோண்டிக் கொண்டான்.

நீர்படைக் காதை

கண்ணகிப் படிவத்திற்கான கல்லினைத் தோண்டிக் கொணர்ந்து, நீர்ப்படை செய்தது முதல், மீண்டும் செங்குட்டுவன் வஞ்சிமா நகரம் திரும்பியது வரை கூறுவது.

நடுகற் காதை

பத்தினியாளான கண்ணகிக்கு இமயத்திலேயிருந்து கொணர்ந்த கல்லிலே படிவம் சமைத்து, அதனை முறைப்படி, விழாக்கோலத்துடன் தெய்வமாக போற்றிக் கொண்டாடிய செய்திகளைக் கூறுவது இப்பகுதி.

வாழ்த்துக் காதை

கண்ணகிப் படிமத்தின் கடவுள் மங்கலம் நடைபெற்றது. செங்குட்டுவன் வந்திருந்தான். பல சிற்றரசர்களும் வந்து திறை செலுத்தினர். தேவந்தி முதலியோர் கண்ணகி கோயிலுக்கு வந்து அரற்றினர். கண்ணகி தேவ வடிவிலே தோன்றுகின்றாள்; செங்குட்டுவனையும் வாழ்த்துகின்றாள்.

வரந்தரு காதை

மணிமேகலை துறவைப்பற்றி தேவந்தி சொன்னாள். அவள் மேல் சாத்தன் ஆவேசித்துப் பேசுகிறான். கண்ணகியின் தாய், கோவலனின் தாய், மாதரி என்பவர், தம் அடுத்த பிறப்பிற் சிறுகுழந்தைகளாக அங்கு வந்து, தாம் மீண்டும் பிறந்ததன் காரணம் பற்றிக் கூறுகின்றனர். பத்தினிக்குப் பூசை செய்யத் தேவந்தி அனுமதி பெறுகிறாள். பல நாட்டு மன்னரும் வணங்கி விடைபெறுகின்றனர். வேள்விச் சாலைக்குச் செங்குட்டுவன் செல்லுகின்றான். நூலாசிரியருக்குக் கண்ணகி அவர்தம் முன்வரலாறு உரைக்கின்றாள். முடிவில் உலகோர்க்கான அறிவுரைகளுடன் சிலப்பதிகாரம் முடிவடைகிறது.

கதை மாந்தர்கள்

கண்ணகி - பாட்டுடைத் தலைவி. கோவலனது மனைவி. களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் கற்புநெறியின் அளவுகோலாகவும் படைக்கப்பட்டவள். தெய்வம் தொழாள் கொழுனன் தொழுவாள் என வள்ளுவர் உரைத்த மங்கை. கணவன் போற்றா ஒழுக்கம் புரிந்தபோதும் அதை மாற்றா உள்ள வாழ்கையே ஆனவள். கணவனுக்காக மதுரை மாநகரையே எரித்தவள்.

கோவலன் - பெரும் செல்வந்தர் மாசாத்துவானின் மகன். பிற ஒழுக்கங்கள் அனைத்தும் நிறைந்திருந்தாலும் மோகத்தால் அழிந்தவன். ஊழ்வினை காரணமாக உயிரிழந்தவன்.

மாதவி - பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய்.

சிலம்பு செல்வர் ம. பொ. சிவஞானம்

சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம. பொ. சியைச் சாரும்.இக்காப்பியத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்கு கண்ணகி, மாதவி என பெயர் சூட்டினார்.ரா. பி. சேதுப்பிள்ளை மூலம் 'சிலம்பு செல்வர்' என்னும் பட்டம் பெற்றார்.

சிலப்பதிகாரம் பற்றி ம. பொ. சி எழுதிய நூல்கள்

  • சிலப்பதிகாரமும் தமிழரும் [1947]
  • கண்ணகி வழிபாடு [1950]
  • இளங்கோவின் சிலம்பு [1953]
  • வீரக்கண்ணகி [1958]
  • நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) [1961]
  • மாதவியின் மாண்பு [1968]
  • கோவலன் குற்றவாளியா? [1971]
  • சிலப்பதிகாரத் திறனாய்வு [1973]
  • சிலப்பதிகார யாத்திரை [1977]
  • சிலப்பதிகார ஆய்வுரை [1979]
  • சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு [1980]
  • சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் [1990]
  • சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994]

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • ஆர். கே. சண்முகம் செட்டியார். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட உரை. புதுமலர் நிலையம் -வெளியீடு- 1946
  • வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட மதிப்புரை. புதுமலர் நிலையம் வெளியீடு -:1946
  • எஸ். வையாபுரிப்பிள்ளை. தமிழ் ஆராய்ச்சித்துறைத்தலைவர். சென்னைப் பல்கலைக்கழகம்- சிலப்பதிகாரப் : புகார்க்காண்டம் முன்னுரை. புதுமலர் நிலையம் வெளியீடு- 1946

மேற்கோள்கள்

  1. மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும். (சிலப்பதிகாரம் நூல் கட்டுரை)
  2. :எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
    குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
    ஏதிலாளன் கவலை கவற்ற,
    ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
    கேட்டோர் அனையராயினும்,
    வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே. (மருதன் இளநாகனார் நற்றிணை 216)
  3. மலையாளம்
  4. பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், (சிலப்பதிகாரம், இந்திர விழவு ஊர் எடுத்த காதை 169)
  5. வால் வளை மேனி வாலியோன் கோயிலும், நீல மேனி நெடியோன் கோயிலும், (சிலப்பதிகாரம், இந்திர விழவு ஊர் எடுத்த காதை 171-172)
  6. அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
    பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,
    குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
    கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்,
    ‘எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்
    நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்
    வந்து ஈக’ என்றே வணங்கினர் வேண்ட (சிலப்பதிகாரம், வரந்தரு காதை 157-163)

  7. கயவாகு
  8. 'ஏ' என்னும் அசை கொண்டு முடியாமல் 'என்' என்னும் அசை கொண்டு முடியும் ஆசிரியப்பா
  9. பொ.ஊ. 6 ஆம் நூற்றாண்டினதாகக் கணிக்கப்படும் பெருங்கதை என்னும் நூலைத் தவிர வேறு எந்தக் காப்பியமும் ஆசிரியப்பாவால் அமையவில்லை.
  10. வாழியெம் கொற்கை வேந்தே வாழி தென்னம் பொருப்பின் தலைவ வாழி
    செழிய வாழி தென்னவ வாழி
    பழியொடு படராப் பஞ்சவ வாழி
    அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்
    பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
    வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள் அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
    ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
    கானகம் உகந்த காளி தாருகன்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிலப்பதிகாரம்&oldid=9779" இருந்து மீள்விக்கப்பட்டது