பின்வருநிலையணி
பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது.[1]
பின்வருநிலையணியின் வகைகள்
பின்வருநிலையணி மூன்று வகைப்படும்.அவை,
- சொல் பின்வருநிலையணி
- பொருள் பின்வருநிலையணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
சொல் பின்வருநிலையணி
சொல் பின்வருநிலையணி என்பது ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் பின்னர் பல இடத்தும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது சொல் பின்வரு நிலையணி ஆகும்
எ.கா:
“ | உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் [2] |
” |
இக்குறட்பாவில் 'உடைமை' என்ற சொல்லானது பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல் பின்வருநிலையணி ஆகும்.
பொருள் பின்வருநிலையணி
பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது.
எ.கா:
“ | அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ் விண்டன கொன்றை விரிந்த கருவிளை கொண்டன காந்தள் குலை[3] |
” |
இப்பாடலில் மலருதல் என்னும் பொருள் தரக்கூடிய அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும்
சொற்பொருள் பின்வருநிலையணி
சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.
எ.கா:
“ | எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.[4] |
” |
அணிப் பொருத்தம்:
இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்
மேற்கோள்கள்
- ↑ http://www.tamilvu.org/courses/degree/d031/d0314/html/d03142l1.htm
- ↑ திருக்குறள் (592)
- ↑ தண்டியலங்கார மேற்கோள் (பக். 88)
- ↑ திருக்குறள் : 299