கும்பகோணம் கரும்பாயிர விநாயகர் கோயில்
இருப்பிடம்
கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் கும்பேஸ்வரர் கோயில் திருமஞ்சன வீதியில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகே வராகப்பெருமாள் கோயில் உள்ளது.
பழைய பெயர்
முன்னர் இக்கோயில் வராகப்பிள்ளையார் கோயில் என்றழைக்கப்பட்டது. ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் வடதிசையில் இந்த கரும்பாயிரம் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் வராகப் பிள்ளையார் என்றும் பின்னர் கரும்பாயிரம் விநாயகர் ஆனது. ஹிரண்யாட்சன் பூமாதேவியை சுருட்டி எடுத்து கொண்டு போய் பாதாளத்தில் மறைத்து வைத்தான். அப்போது மகாவிஷ்ணுவானவர் வராக அவதாரம் எடுத்து செல்வதற்குமுன் கும்பேஸ்வரர் கோவிலுக்கு வடக்கில் பூவராக தீர்த்தம் என்னும் குளத்தை அமைத்து அதன் கரையில் விநாயகரை பிரதிஷ்டை செய்து தீர்த்ததில் நீராடி விநாயகரை வணங்கி சென்றார் காரியம் சுபமானது. மீண்டும் வந்து விநாயகரை வழி பட்டு சிறப்பு செய்தார் விஷ்ணு. இதுவே வராக பிள்ளையார் உருவான வரலாறு.
தல வரலாறு
ஒரு காலத்தில் கும்பேசப்பெருமானைத் தரிசிக்க வந்த முனிவர்களுடன் ஒரு கரும்பு வியாபாரியும் ஆயிரம் கரும்புகளுடன் வராகக்குளக்குரையில் வந்து தங்கினான். அங்கிருந்த விநாயகர் அந்தணச்சிறுவன்வேடங்கொண்டு அந்த வியாபாரியிடம் சென்று தனக்கு ஒரு கரும்பு கொடுக்கும்படி கேட்டார். அவன் கொடுக்க மறுக்கவே அச்சிறுவன் (விநாயகர்) ஒரு கரும்பைப் பிடித்து இழுக்கவே அதனால் கோபங்கொண்ட வியாபாரி, விநாயகராகிய சிறுவனை அடிப்பதற்குத் துரத்திக்கொண்டு செல்ல, அப்போது சிறுவன் மேற்படி விநாயகர் கோயிலுக்குள் ஓடி மறைந்துவிட்டான். பிறகு வியாபாரியின் ஆயிரம் கரும்புகளும் சாரமற்றுச் சக்கை போல் ஆகிவிட்டன. இதை அறிந்த வியாபாரி வருந்தி விநாயகரிடம் வேண்டி நின்றான். அப்போது விநாயகர், அந்த ஆயிரம் கரும்புகளுக்கும் மீண்டும் சாரத்தைக் கொடுத்தார். அதுமுதல் அவருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டது. [1]
இக்கோயில் பற்றி திருக்குடந்தைப்புராணம் போற்றுவதைக் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். [2]
“அருகரும்புத் தரும்வியப்ப அவனியொரு
கோட்டுநுனி அமைத்துத் தீயோர்
திருகரும்புக் கிடங்கொடாச் செங்கண்வரி
கமும்கிழத் தேதே யென்று
வருகரும்புட் குலமுழக்கு மலர்க்கேழற்
புனற் கோட்டார் வணிகன் பாங்கர்
ஒருகரும்புக் காயிரங்கொண் டுறுகரும்பா
யிரக்களிற்றை உளங்கொள்வோமே“
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
- அருள்மிகு கரும்பாயிரம் பிள்ளையார் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
- வேடிக்கை பெயரில் விநாயகர்கள், மாலைமலர் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்