தமிழ் நாடக வரலாறு
தமிழர் நாடகக்கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்தியம் என்னும் தலைச்சங்க காலத்து நூலாகும். நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பது தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களில் தமிழ்நாடகக்கலை பற்றிய சான்றுகள் பல உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடகத் தோற்றம்
மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்தநூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன. இவ்வாறு பிறந்த நாடகம், தொல்காப்பியர் காலத்தில் வளர்ச்சியடைந்து புகழ்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பண்ணை
"பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான் கென்ப"
தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியலில் உள்ள முதலாம் நெறியாகும் இப்பாடல் வரிகள். பண்ணை எனக்குறிக்கப்பட்டுள்ளது விளையாட்டு ஆகும். உள்ளத்தில் உவகையூட்டுதலின் காரணத்தினால் நாடகம் பண்ணையென அழைக்கப்பெற்றது. தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய 'நச்சினார்க்கினியர்' கூறும் பின்வரும் உரை விளக்கத்தினால் 'பண்ணை' என்னும் சொல்லின் மெய்ப்பொருளினை அறியலாம்.
பாடல்கள்
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில்:
"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்"
எனத் தொல்காப்பியர் தனது வாழ்நாளினிலும் முற்பட்ட இலக்கிய மரபினைப் பற்றி விளக்குகையில் 'பாடல் சார்ந்த' எனப் பொருள்படும் 'பாடல் சான்ற' எனக் கூறுகின்றார். இவ்வரியில் குறிப்பிட்டதனை ஆராய்ந்தால் தொல்காப்பியர் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலகட்டங்களிலேயே தமிழில் நாடகமும், நாடகங்களில் பாடல்களும் இடம்பெற்றிருந்ததும் என்பதனை அறியலாம்.
சுவைகள்
நாடக வழக்கினைப் பற்றித் தொல்காப்பியம் கூறும் நூற்பாவானது
"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பா லெட்டாம் மெய்ப்பா டென்பர்-"
நாடக வழக்கென்பது சுவைபட வருவதையெல்லாம் ஓரிடத்தில் வந்தனவாகத் தொகுத்துக் கூறுதலென விளக்குகின்றது இவ்வரிகள்.மேலும், இச்சுவைகள் தோன்றும் நிலைக்களன்கள் (பொருள்கள்) மூலம் முப்பத்திரண்டு சுவைகள் அடங்கும். இப்பொருள்கள் இரண்டு வகைப்படும் அவையாவன பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி,வடிவம் உணர்த்தப்படாதது ஒன்று மற்றொன்று பொருளின் தன்மையினையும் உணர்த்தி வடிவத்தினையும் உணர்த்துவதாகும்.இவ்விருவகையில் பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி வடிவம் உணர்த்தப்படாதனவை:காமம், வெகுளி (சினம்), மயக்கம், இன்பம், துன்பம் முதலியனவாகும். வடிவங்கள் இல்லாத இப்பொருள்களை,பொறிகளின் வாயிலாக மனங்கொள்வதற்கு மெய்ப்பாடுகள் காரணமாக அமைகின்றது. இம்மெய்ப்பாடானது கண்ணீர், மெய்மயிர் சிலிர்த்தல், வியர்வுதல், நடுக்கம் முதலியன புறக்குறிகள் கொண்டு ஒருவரது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே, காண்போர்க்கு புலனாகும் தன்மையே மெய்ப்பாடு எனப்படும். இவ்வகைச் சுவைகளே நடிப்பின் இன்றியமையாக் கூறுகளாக உலகின் அனைத்து நாடுகளிலும்,அனைத்து மொழி நாடகம்,திரைப்படம் போன்ற கலை வடிவங்களிலும் கருதப்படுகின்றன.மேலும் இத்தகு நாடகச்சுவைகளினைப் பற்றித் தொல்காப்பியர் அவர் காலத்தில் குறிப்பிட்டுள்ளதனால் அவருக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர் நாடகக்கலை பிரசித்தி பெற்றிருக்க வேண்டுமென்பதுமாகக் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
அரங்கம்
அரங்க அளவு
கி. பி. இரண்டாம் நூற்றாண்டளவில் தோற்றம்பெற்ற சிலப்பதிகாரத்தில் நாடக அரங்கத்தின் அளவுகளைப் பற்றி இப்பாடல் வரிகள் விளக்குகின்றன.
"நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலளவு இருப்பத்து நல்விர லாக
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோன்றிய அரங்கில்
(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 99-106-வது வரிகள்)}}
அரங்கம் அளக்கப்பயன்படும் கோள்|கோளானது, கண்ணிடை ஒரு சாண்கொண்ட மூங்கிலைக் கொண்டு, மனிதர் ஒருவரின் பெருவிரல் இருபத்துநான்கு கொண்ட அளவில் ஒரு கோல் நறுக்கினர்.அதுவே அக்கால அளவு கோலாகும்.
எட்டு அணுக்கள் கொண்டது
ஒரு தேர்ந்துகள்.
எட்டு தேர்ந்துகள் கொண்டது
ஒரு இம்மி.
எட்டு இம்மிகள் கொண்டது
ஒரு எள்.
எட்டு எள் கொண்டது
ஒரு நெல்.
எட்டு நெல் கொண்டது
ஒரு பெருவிரல்.
இவ்வகை அளவு முறையினையே பண்டைக்காலத் தமிழர் பயன்படுத்தினர்.சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அரங்கின் அகலம் ஏழு கோலாகவும். நீளம் எட்டு கோலாகவும் குறட்டின் உயரம் (அடைக்கல்) ஒரு கோல் ஆகவும் அமைத்து அரங்கின் மேற்பகுதியில் பலகை பதித்து அதற்கும் தூண்களின் மேல் பாவிய உத்தரப்பலகைக்கும் இடையே நான்குகோல் உயரம் இருக்கச் செய்து அரங்கத்தினுள் செல்லவும், வெளியேறுவதற்கும் இரண்டு வாயில்கள் அமைத்துத் தூண்களின் நிழல்கள், ஆடும் இடத்தில் (நாயகப்பத்தியில்) விழாமல் ஒளிவிடும் (மாண்சுடர் காந்தும்) நிலை விளக்குகளையேற்றினர்.
திரைகள்
மூன்று வகையான திரைகள் பண்டைக்காலந்தொட்டு உபயோகத்திலிருந்து வந்தன. அவையாவன:
- ஒருமுக எழினி (ஒருபடம்) - ஒரு பக்கமாகக் சுருக்கிக் கட்டப்பெற்ற திரையாகும். (இவ்வகைத் திரைகள் இன்றளவிலும் கூத்து மேடை,சென்னை மாநகரின் சில நாடகக்குழுக்களாலும், சிற்றூர்கள் மற்றும் பயிற்று முறை நாடக மேடைகளிலும் பயன்படுத்தப்பெற்று வருகின்றன.
- பொருமுக எழினி - ஒரு திரை இரண்டாகப் பிரிக்கப்பெற்று ஒன்றோடொன்று சேரவும், பிரிக்கவும் கூடியதாக அமைந்த திரையாகும். (இவ்வகைத் திரைகள் தமிழில் 'தட்டி' என அழைக்கப்படுகின்றது. மதுரை, கோவை ஆகிய பெருநகரங்களிலுள்ள பயிற்றுமுறை நாடகக்குழுக்கள் மற்றும் அரங்க அமைப்பாளர்கள் போன்றவர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
- கரந்து வரல் எழினி - மேற்கட்டிலிருந்து கீழே விரிந்து விடவும் பின்னர் சுருக்கிக் கொள்ளவும் கூடியதாகத் தொங்கும் திரையாக அமையப்பெற்றிருக்கும் திரையாகும்.
''தோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த
பூதரை எழுதி, மேல்நிலை வைத்து;
தூண் நிழல் புறப்பட,மாண்விளக்கு எடுத்து,ஆங்கு
ஒருமுக எழினியும், பொருமுக எழினியும்,
கரந்துவரல் எழினியும், புரிந்துடன் வகுத்து-ஆங்கு
ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து
மாலைத்தாமம் வளையுடன் நாற்றி;
விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து
(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 106-113 வரிகள்) எனச் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இடைக்காலத்தில் தோற்றம் பெற்ற 'பெருங்கதை' என்னும் நூலில் அரங்கத்தில் தொங்க விடப்படும் ஏனைய திரைச்சீலைகளைப் பற்றி இவ்வாறு விளக்கம் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
"கொடியும் மலரும் கொள் வழி எழுதிப்
பிடியும் களிறும் பிறவும் இன்னவை
வடிமாண் சோலை யொடு வகைபெற வரைந்து"
என உஞ்சைக்காண்ட வரிகளான 63 - 65 ஆகியனவற்றில் விளக்கங்கள் உள்ளன.
திரைச்சீலைகளினைத் தொடர்ந்து பண்டைத்தமிழர் சித்திர விதானம் விரித்து முத்து மாலைகள், பூமாலைகளினை வளைவாகத் தொங்கவிட்டு நாடக அரங்கத்தினை அலங்கரித்தனர்.
அரங்கம் பயன்படுத்தப்பட்ட முறை
இன்று காணப்படும் நாடக மேடைகளில், காட்சி ஒன்றில் நாடக நடிகர் வீட்டின் 'உள்ளே' செல்லுவதற்கு மேடையின் வலது புறம் மூலமாகவும் 'வெளியே' செல்வதென்றால் மேடையின் இடதுபுறத்திலும் செல்வதுவேண்டும். இவ்வகை விதியினை சிலப்பதிகாரத்தில் உள்ள இப்பாடல் வரிகளில் காணலாம்.
"இயல்பினின் வழா அ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி, அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்"
(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 129 - 134 ஆம் வரிகள்)}}
என வரும் இப்பாடல் வரிகள் குயிலுவர் (யாழ் , குழல், இடக்கினி போன்ற கருவிகளினை வாசிப்பவர்கள்) நிலையிடம் ஒரு கோல் என்ற ஒழுங்குப்படி தொழிலாளர் நின்றனர். அனைத்தும் ஒழுங்கானதும், மாதவி வலக்காலை முன் வைத்துப் பொருமுக எழினியுள்ள வலத்தூண் பக்கம் சேர்ந்தாள். ஒருமுக எழினியுள்ள இடத்தூண் பக்கம் தோரிய மடந்தையர் என்ற ஆடி மூத்தவர்; நாட்டியத்திற்குத் துணை செய்பவர், மாதவி வந்தேறியபடியே வலக்காலை முன் வைத்தேறி வந்து நின்றனர்" என இப்பாடல் வரிகள் விளக்குகின்றன.
நடிப்பும் - இசையும்
"இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து
பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு
ஆடலும் பாடலும், பாணியும், தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும் காலை-
பிண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில்கையும்,
கொண்டவகை அறிந்து, கூத்து வரு காலை
கூடை செய்த கை வாரத்துக் களைதலும்
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்,
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னோடும்"
|(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை -12 -25 வரிகள்)}}
இப்பாடல் வரிகளின் பொருட்களாவன பின்வருமாறு:
கூத்து வகைகள்
கூத்துவகை இருவகைப்படும். அவையாவன
1- அகக்கூத்து - அரசருக்காக ஆடப்படும் 'வேத்'தியலை அகக்கூத்து என்றழைப்பர்.
2- புறக்கூத்து - பிறருக்காக ஆடும் பொதுவியலை புறக்கூத்து என்றழைப்பர்.
நாடகம் - நாட்டியம் ஆகிய இரண்டும் 'கூத்து' என்றே அழைக்கவும் பெற்றது. அகக்கூத்து இருவகையினைக் கொண்டிருந்தது சாந்திக்கூத்து மற்றும் விநோதக்கூத்து அவ்விருவகைகளாகும்.
சாந்திக்கூத்து நால்வகைப்படும் அவையாவன:
- சாக்கம் - தாளத்தினை அடிப்படையாகக் கொண்ட கூத்தாகும்.
- மெய்க்கூத்து - அகச்சுவையினை அடிப்படையாகக் கொண்ட கூத்தாகும்
- அபிநயக்கூத்து - பாட்டின் பொருளினை அபிநயித்து கதை தழுவாது வரும் கூத்தாகும்.
- நாடகக்கூத்து - கதையினைத் தழுவி நடிக்கும் கூத்தாகும்.
விநோதக்கூத்து பொது மக்களின் பொழுது போக்கு கூத்தாக ஆடல் பெற்றது. விநோதக்கூத்து ஏழுவகைப்படும் அவையாவன:
- குரவைக் கூத்து - ஒன்பது கலைஞர்கள் காதல் அல்லது வெற்றிப்பாக்கள் பாடி கைக்கோத்து ஆடும் கூத்தாகும்.
- கழாய்க்கூத்து - கலைநடனம் என அழைக்கப்படும் கூத்து.
- குடக்கூத்து - கரகம் என அழைக்கப்படும் குடக்கூத்து.
- கரணம் - பாய்ந்து ஆடப்படும் கூத்து.
- பார்வைக்கூத்து - கண்களினால் நோக்கப்படும் கூத்து.
- வசைக்கூத்து - நகைச்சுவை உணர்வுகளினை மையமாகக் கொண்ட கூத்தாகும்.
- சாமியாட்டம் அல்லது 'வெறியாட்டம்'
வென்றிக் கூத்து - மாற்றான் ஒடுக்கப்படுதலும் மற்றும் மன்னனின் உயர்ச்சியினைப் பற்றியும் வெளிக்காட்டக்கூடிய கூத்தாகும். வசைக்கூத்து, விநோதக்கூத்து ஆகிய கூத்துக்கள் பாட்டின் உறுப்புகளிற்கேற்ப பாவனைகள் எடுத்தாளப்படும் கூத்துக்களாகும். இவ்வுறுப்புகள் விலக்குறுப்புக்களென அழைக்கப்படும். விலக்குறுப்புக்கள் பதினான்கு வகைப்படும் அவையாவன:
- நாற்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு.
- யோனி - உள்ளவர்க்கு உள்ளது, இல்லாதவர்க்கு இல்லாதது, உள்ளவர்க்கு இல்லாதது, உள்ளவர்க்கு இல்லாதது, இல்லாதவர்க்கு உள்ளதெனக் கற்பனையானது.
- விருத்தி - தேவர், வீரர், நடன் (கூத்தன்), நடி (நாடகக்கணிகை) இவரைத் தலைவராகக் கொண்டாடப்படுவது.
- சந்தி - பயிர்முளைத்து, நாற்றாகி, பூத்துக்காய்ந்து, கதிர் செறிந்து, அறுவடை செய்து துய்ப்பது (புசிப்பது, உண்பது) போலப் பொருட்சுவை காட்டுவது.
- வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, இன்பம், அவலம், நகை, சினம், நடுநிலை ஆகிய ஒன்பது வகைச் சுவைகள்.
- நாடகம் - தாளத்திற்கேற்ப இசைந்து நடிக்கப்படுவது.
- குறிப்பு - ஒன்பது சுவைகளைக் காண்பிப்பது.
- சத்துவம் - நன்மையே நோக்கும் தன்மையும் சுபாவம் என்ற சாத்வீகக் குணமுமாகும். உள்ள நிகழ்ச்சிகளை வெளிப்படத் தோன்றுதலும் ஆகும். விறல் (வீரம்) எனவும் அழைக்கப்படும் சத்துவம் பெருமை எனவும் பொருள்படும்.
- வெகுளி, சோம்பல், ஜயம், களிப்பு,உவப்பு, பெருமை, இன்பம், மயக்கம், தெய்வாவேசம், உறக்கம்,உடன்பாடு, துயிலுணர்ச்சி, நாணம், வருத்தம், கண்ணோவு, தலைநோவு, நஞ்சு, சாவு,மழை, வெயில், பனி, தீ, குளிர், வெப்பம் ஆகியனவற்றால் உண்டாகும் கேடுகள், இருபத்து நான்கு வகை நடிப்புகளை உள்ளடக்கிய அவிநயமாம்.
- வகைச்சொல் - உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல் ஆகிய மூன்று சொற்களை உடையது வகைச் சொற்களாகும்.
- நான்கடி, எட்டடி, பதினாறடி, முப்பத்திரண்டடியாக வரும் சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் ஆகிய நான்கு சொல் வகைகள்.
- வண்ணம், சந்தப்பாட்டு
- இசைப்பாட்டு
- சேதம் - நடனத்திற்கேற்றாற்போல் கதையினை சேதிக்கபடுவது.
ஆடல் வகைகள்
'கடையம், அயிராணி மரக்கால்விந்தை, கந்தன், குடை, துடிமால், அல்லியமல், கும்பம் - சுடர்விழியால் பட்டமதன் பேடுதிருப் பாவை அரண் பாண்டரங்கம் கொட்டியிவை காண்பதினோர் கூத்து'
ஆடல்வகை பதினொரு வகையாகும் அவையாவன:
- மாயவனாடும் அல்லி
- விடையோனாடும் கொட்டி
- ஆறுமுகன் ஆடும் குடை
- குன்றெடுத்தோன் ஆடும் குடம்
- முக்கண்ணன் ஆடும் பாண்டரங்கம்
- நெடியோன் ஆடும் மல்லாடல்
- வேல்முருகன் ஆடும் துடியாடல்
- அயிராணி ஆடும் கடையம்
- காமன் ஆடும் பேரு
- துர்க்கை ஆடும் மரக்கால்
- திருமகள் ஆடும் பாவைக்கூத்து
இவ்வடல் வகைகள் சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் குறிப்பிடுவனவாகும்.
ஆடல் இலக்கணம்
- பிண்டி - ஒற்றைக் கைக்குறியாற் காட்டுவது.
- பிணையல் - இரண்டு கைகளாலும் குறித்தல்.
- எழிற்கை - அழகு பெறக் காட்டும் வகை.
- தொழிற்கை - தொழில்பெறக்காட்டுவது தொழிற்கை.
- குடை - ஒற்றைக் கைக்கும், குவித்த கைக்கும் குடையெனப் பெயர்.
பிண்டி மற்றும் பிணையல் இரண்டும் புறத்திற்குரியன. எழிற்கை மற்றும் தொழிற்கை இரண்டும் அகத்திற்குரியன மேலும் அகக்கூத்தில் ஒற்றையிற் செய்யும் கைத்தொழில் மற்றும் இரட்டையிற் செய்யும் கைத்தொழில் போன்றனவை முரண்படாமல் இருத்தல் அவசியமாகும். ஆடும் பொழுது அபிநயம் இருத்தல் கூடாது, அபிநயிக்கும்பொழுது ஆடல் கூடாது. குரவைக்கூத்திற்கும், வரிக்கூத்திற்கும் உரியபடி கால்களை எடுத்து வைத்தல் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடகன்
சிலப்பதிகாரக் கதை நடைபெற்ற காலத்தில் தனித்தமிழ் இசை வழங்கி வந்திருப்பது வரலாறு.
- யாழ், குழல், தாளம், சீர், வாய்ப்பாட்டு, மெல்லிய குரலுடனான அமைப்பாக வாசிக்கப்படும் மத்தளம், இவற்றுடன் கூத்து வகைகள் ஆரம்பிக்கப்படும் வேளை இசைந்த பாடலினை இனிமையாக, தாளக்கட்டுடன் பொருந்தப் பாடுதல் வேண்டும்.
- வரிப்பாடு மற்றும் ஆடல் போன்றவற்றிற்குரிய பொருளினை விளக்கி இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வேற்றுச்சொற்களின் ஓசைகளைச் சுத்தமாகக் கடைபிடித்தும் அவ்வோசைகளின் இலக்கணங்களினை பிழையின்றித் தெரிந்த அறிவாளியாகப் பாடகர்கள் இருத்தல் வேண்டும்.
- பாடலாசிரியர்களின் மனக்குறிப்பு, கருத்து போன்றனவற்றினை உணர்ந்து பாடல் வேண்டும்.
- ஆடலின் தொகுதியினை அறிந்து பகுதிகளிற்குப் பொருந்தும் பாடல்களைப் பாடல் வேண்டும்.
- ஒன்பது சுவைகுறித்த நடனங்களில், சுவைக்கேற்றபடி பாடல் வேண்டும்.
- கூத்து நடைபெறும் வேளையில் ஆடலாசிரியரின் மனம் அறிந்து பாடுதல் வேண்டும்.
- இசைப் பயிற்சி மட்டும் இன்றி, இசை நூல்களிலும் மாசற்ற பயிற்சி பெற்று, பாட்டிலக்கணத்தினை விரிக்க மற்றும் வகுக்கப் போன்றனவற்றில் வல்லவர்களாகப் பாடகர்கள் இருத்தல் வேண்டுமெனப் பின்வரும் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் விளக்குகின்றன்.
'யாழும், குழலும், சீரும், மிடறும்
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி
தேசிகத்திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,
பகுதிப்பாடலும் கொளுத்தும் காலை-
வசை அறுகேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன்.
(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 26 - 36 வரிகள்)}}
இசைக்கருவிகள்
இசைக்கருவிகளின் பயன்பாடானது இலக்கண எல்லைக்குள் நின்று, ஏந்திழையாளின் இனிய நடன அரங்கேற்றத்திற்கு இனிமையான சத்தத்தினால் இசைக்கப்பெற்றது. அவளும், நாட்டிய இலக்கணங்களை நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் தன் திறமெனப் பின்வரும் பாடல் வரிகள் விளக்குகின்றன. "குழல் வழி நின்றது யாழே; யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே; தன்னுமைப்
பின்பழி நின்றது முழவே; முழவோடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை.
(அரங்கேற்றுக்காதை 139 - 143 வரிகள்)}}
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து
காட்டினள் ஆதலின்.
(அரங்கேற்றுக்காதை 158 - 159 வரிகள்)}}
கடைச்சங்க காலத்தில் நாடகத்தமிழ்
"கழைவளர் அடுக்கத்து இயலி யாடுமயில்
விளைவுகள விறலியிற் தோன்று நாடன்"
என்ற கபிலரின் அகநாநூற்றுப்பாடல் வரிகளான (82) 9-10 வரிகள் 'மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலாவி ஆடுகின்ற மயில் இனங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டினன்' என விளக்குகின்றது இப்பாடல் வரிகள்.
திருப்பரங்குன்றத்தில் பாணரும், கூத்தரும், விழாக்கள் கொண்டாடி ஆடல்பாடல் நிகழ்த்தியதற்குச்ச் சான்றாக
"படுகண் இமிழ்கொளை பயின்றனர் ஆடும்
களிநாள் அரங்கின் அணி நலம் புரையும்"
என்ற பரிபாடல் 16:12 - 13 வரிகளில் ஆடல் அரங்குகள்பற்றிய சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.கடைச்சங்க காலத்தில் தமிழ் நாடகம் செழுமைபெற்று விளங்கியதும் குறிப்பிடத்தக்கது.
வீழ்ச்சிக்காலம்
கடைச்சங்க காலம் வரை எழிலோடு இருந்த நாடகக்கலை, கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் காலப்பகுதியில் எவ்வித செழிப்புமற்ற நிலையில் இருந்தது. தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்படும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஜந்தாம் நூற்றாண்டின் பின்காஞ்சி|காஞ்சியில் புத்த, சமண சமயங்கள் பரப்பப்பட்டன. அச்சமயம் இருந்த 'நாடகக்கலை சிற்றின்ப வேட்கையினை எழுப்புவது' என்ற கருத்தினை வலியுறுத்தி நடைபெற்றன. மேலும் இக்காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள், வடமொழி நூல்களினைப் போற்றி பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தம் கருத்துக்களினை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இக்காரணங்களினால் தமிழ் நாடகக் கலை தழைக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. இக்காலகட்டத்திலேயே தோற்றம் பெற்ற தமிழ் இலக்கியங்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பதினொரு நூல்கள் அற இலக்கியங்கள், இந்நூல்களிலில் நாடகக்கலையின் சிறப்புகள்பற்றித் தகவல்கள் குறிப்பிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் செல்வம்|செல்வத்தின் இயல்புகளைக் குறிப்பிடும் பின்வரும் பாடல் வரியானது
"கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவி ளிந் தற்று"
(அறத்துப்பால் - 332 ஆம் பாடல்) (திருக்குறள்)}}
கூத்தாட்டு அவையினை உவமையாகக் கூறுகின்றார் திருவள்ளுவர். நாடகம் சிற்றின்ப நாட்டத்தினைத் தரும் காரணத்தினால் ஒதுக்கப்பட வேண்டுமெனப் புத்த மதத்தினர் புத்தரின் கொள்கையினைப் பரப்பும் பொழுது மக்களுக்குத் தெரிவித்தனர். புத்தர் தனது சீடர்களிற்கு உரைத்த பத்து விதிகளில் ஒன்றான நுண் கலைகளில் நாட்டம் கொள்ளக் கூடாது என்பதன் காரணத்தினால் புத்த மதத்தினர் இவ்வாறான நாடகக்கலையினை பின்பற்ற வேண்டாமென மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
மணிமேகலையின் சிறைசெய்காதையின் 43 மற்றும் 65 ஆம் வரிகளில்
''காவிரி வாயிலிற் ககந்தன் சிறுவன்
நீவா வென்ன நேநிழை கலங்கி
மண்டிணி ஞாலத்து மழைவளந் தரு உம் - சரு (45)
பெண்டி ராயிற் பிறர் நெஞ்சு புகா அர்
புக்கேன் பிறறுளம் புரிநூன் மார்பன்
முத்தீப் பேணு முறையெனக் கில்லென
மாதுய ரெவ்வமோடு மனையறம் புகா அள்
பூத சதுக்கம் புக்கனன் மயங்கிக்-----ருரு (50)
கொண்டோற் பிழைத்த குற்றந் தானிலேன்
கண்டோ னெஞ்சித் கரப்பெளி தாயினேன்
வான்றரு கற்பின் மனையறம் பட்டேன்
யான்செய் குற்றம் யானறி கில்லேன்
பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்-----ருரு (55)
தெய்வ நீயெனச் சேயிழை யாற்றலும்
மாபெரும் பூதந்தோன்றி மடக்கொடி
நீகே ளென்றே நேரிழைக் குரைக்கும்
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் -
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்---சாரு (60)
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்
பிசியு நொடியும் பிறர்வாய்க் கேட்டு
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்,
கடவுள் பேணல் கடவியை யாகலின்
மடவர லேவ மழையும் பெய்யாது------சாரு
இவ்வாறு அமைந்துள்ள இப்பாடல் வரிகளானது மருதி என்ற அந்தணர் குலத்தைச் சார்ந்த பெண் காவிரி ஆற்றில் நீராடிவிட்டுச் செல்லும் வழியில் 'ககந்தன்' என்ற அந்நாட்டு இளவரசன் அவளழகில் மையல் கொண்டு காதல் மொழி பேசுகின்றான். மருதியோ அவனிடமிருந்து தப்பியோடி சதுக்கப்பூதம்|சதுக்கப்பூதத்தினிடம் முறையிட்டு நீதி வேண்டுகின்றாள். சதுக்கப்பூதம் அவளைக் குற்றமற்றவள் என்று கூறி அப்பெண்ணிற்குத் தண்டனை எதுவும் வழங்காது நின்ற வேளை மருதியும் 'மழை வளத்தைத் தரும் பத்தினிப் பெண்களாய் இருப்பவர் மாற்றான் மனதிற்கு மயக்கம் தரும் மங்கையராவதில்லை. ஆனால் நானோ இவ்விளவரசன் உள்ளம் புகுந்தேன். கொண்டவனுக்கு யாதொரும் குற்றமும் செய்யவில்லை. நான் செய்ததவறு இன்னதென்று எனக்கே புலப்படவில்லை' எனச் சதுக்கப்பூதத்திடம் எடுத்துரைத்தாள். சதுக்கப்பூதமோ 'பொய்க்கதைகளினையும், நகையை விளைவிக்கும் மொழிகளையும் பிறர் வாய்மொழிகளையும் கேட்டு, நடனம், பாடல், தாளக்கருவிகள் முழங்கும் விழாக்களை விரும்பித் தெய்வங்களை வழிபடும் நியமத்தை மேற்கொண்டிருந்தாய், ஆதலில் உன் ஏவலால் மேகம் மழையைப் பெய்யாது; உத்தம பத்தினிப் பெண்டிரைப் போலப் பிறருடைய மனத்தைச் சுடுந்தன்மையும் உனக்கு இல்லாது போயிற்று' - எனக் கூறியது சதுக்கப்பூதம். இக்கதையின் மூலம் தமிழர் நாடகக்கலை இக்காலகாட்டத்தில் பிரசித்திபெற்றிருக்கவில்லை என்பதனை அறியலாம். கி. பி. ஏழாம் நூற்றாண்டுன் காலப்பகுதியில் தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நிலைகொண்டிருந்த சமயம் நாடகக்கலை சிறப்புப்பெறாமலேயே இருந்தது. வடமொழியில் பற்றுக்கொண்ட பல்லவ மன்னனான மகேந்திர வர்மன் 'மத்த விலாசப் பிரகசனம்' என்னும் வடமொழி நாடகத்தினை எழுதினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுமலர்ச்சி காலம்
கி. பி. 900 முதல் கி. பி. 1300 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்சிபெற்றன. கி. பி. 846 ஆம் ஆண்டு விசயாலய சோழனால் எழுச்சிபெற்ற சோழப்பேரரசு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் பின்னர் வலுப்பெற்றது. கி. பி. 1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் இராசேந்திர சோழன் காலத்தில் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிபெற்றது.
கி. பி. பதினேழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் சோழ அரசர்களின் ஆதரவில் அரண்மனைகள், கோயில்கள் போன்றனவற்றில் நடத்தப்பெற்ற நாடகக்கலை மக்கள் மன்றங்களில் மீண்டும் நடத்தப்பட்டன. சங்க காலத்தில் நடைபெற்ற பொதுவியற் கூத்துக்கள் போலவே பதினேழாம் நூற்றாண்டுக் கால நாடக்கக்கலை மக்களின் கலையாக வளர்ச்சி பெற்று பின் பள்ளு, குறவஞ்சி, நொண்டி போன்ற நாடகங்கள் தோன்றின.
இன்றைய தமிழ் நாடகக்கலைக்கு வித்திட்டோர் கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் 'தெருக்கூத்து' என்ற நாடக வடிவம் தோற்றம் பெற்றது. தெருக்கூத்தென அழைக்கப்பட்டிருந்த நாடகக்கலையின் வளர்ச்சிக்கு வித்திட்டவராகக் கோவிந்தசாமி ராவ் விளங்குகின்றார். நாடகத்தின் நேர அமைப்பினை இக்காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தவரும் ஆவார் கோவிந்தசாமி ராவ். கி. பி. 1891 ஆம் ஆண்டளவில் பயின்முறை நாடகக்குழுவினைத் தோற்றுவித்த 'நாடகத் தந்தை' என அழைக்கப்பெற்ற பம்மல் சம்பந்த முதலியாரால் தமிழ் உரை நடை நாடகங்கள் தமிழ் நாடக மேடையினுள் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்மூலம் நாடக மேடைகளில் அமைக்கப்பெற்ற கட்டடம் போன்ற செயற்கையில் செய்யப்பட்ட அமைப்பு மேடையில் மேலும், கீழும் ஏறுவதும் இறங்குவதுமான புதிய யுக்திகளினை அறிமுகமும் செய்தார் பம்மல் சம்பந்த முதலியார். கி. பி. 1891 ஆம் ஆண்டு தனது 24 ஆம் அகவையில் நாடகத்துறையில் தன்னை ஈடுபடித்திக்கொண்டு 'தமிழ் நாடகத் தந்தை' 'தமிழ்நாடகத் தலைமையாசிரியர்' போன்ற பட்டங்களினைப் பெற்ற சிறப்பினை உடையவர் தவத்திரு சங்கரதாச சுவாமிகள். கி. பி. 1872 ஆம் ஆண்டு பிறந்தவரான சி. கன்னையா தமது பதினேழாவது வயதில் 'இந்து வினோத சபா' என்ற நாடகக் குழுவொன்றில் சேர்ந்து தனது 26 ஆம் வயதில் 'ஸ்ரீகிருஷ்ணவினோத சபா' என்ற நாடகக்குழுவொன்றினை தோற்றுவித்தார். மின் விளக்கு ஒளிகளால் வண்ணத்திரைகளுடன் புதிய வடிவங்களினை மேடையில் தோற்றுவித்த முதல் நாடக அமைப்பாளர் என்ற பெருமையினை உடையவர். மேலும் இவரது நாடகங்களில் உயிருள்ள மான், காளை, பசு, யானை போன்ற விலங்கினங்களை நடிக்க வைத்துப் புதுமை நிகழ்த்தினார். சி. கன்னையாவிற்கு முற்பட்ட நாடக அரங்குகள் மேடைகளாக இருந்து வந்தன இதனை மாற்றி முக்கோண கனபரிமாண அமைப்புமூலம் அரங்குகளை அமைத்து ஒரு அரங்கில் காட்சி நடந்து கொண்டிருக்கும்வேளை அடுத்த அரங்கில் அடுத்த காட்சிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யப்பட்டிருக்கும் இவரது நாடகங்களில். நாடகங்களின் காட்சியமைப்புக்களின் வழிகாட்டி சி. கன்னையா எனப் பலராலும் கருதப்படுகின்றவர். 'நவாப் ராஜமாணிக்கம்' என அழைக்கப்பெற்ற டி. எஸ். இராசமாணிக்கம் என்பவரால் நாடகம் ஒரு மக்கள் இலக்கியம் என்ற பொருளால் அழைக்கப்பெற்றது. மேலும் இவர் தமது நாடக மேடையினை இயங்கு உலகமாக மாற்றியமைத்தவர் என்ற பெருமையினை உடையவர். நவாப் ராஜமாணிக்கத்தின் அனைத்து நாடகங்களும் ஏறத்தாழ எட்டாயிரம் முறைகள் மேடையேறியதும் குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஜம்பதாண்டு காலம் தமிழ் நாடகக்கலைக்குப் பெரும்பங்காற்றியவர்கள் தி. க. சங்கரன், தி. க. முத்துசாமி,தி. க. சண்முகம், தி. க. பகவதி ஆகிய தி. க. சண்முகம் சகோதரர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் ஜம்பது ஆண்டுகள் தமிழ்மரபுவழி நாடகங்கள் சீரான வளர்ச்சியினை எட்டியபொழுது தி. கெ. சண்முகத்தின் இராஜராஜசோழன் என்ற நாடகத்தின் மூலமும், 'நாடகக் காவலர்' என அழைக்கப்பெற்ற ஆர். எஸ். மனோகரின் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தின் மூலமும் தமிழ் நாடகக்கலை மிகவும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.
உசாத்துணை
- தமிழ் மரபு வழி நாடக மேடை, கவிஞர் ஜீவன், நர்மதா பதிப்பகம்.(நவம்பர், 2000)
வெளி இணைப்பு
- காயாத கானகத்தே - தமிழ் நாடகம் கடந்து வந்த பாதையை விளக்கும் தொடர் (பிபிசி)
- நாடகக் களஞ்சியம்
- தமிழ் நாடகங்களின் தோற்றம்
- நாடகக் கலை என்றால் என்ன?