ஈழத்தமிழ் நாடகங்கள்
ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகளும் நவீன நாடகங்களாகும்.
மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாதுவிடினம் ஈழத்தில் நாடக வடிவ இலக்கியங்களான பள்ளு குறவஞ்சி நூல்களின் தோற்றக் காலமான 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஈழத்தில் பல மரபுவழி நாடகப் பிரதிகள் தொடர்ச்சியாகத் தோன்றத் தொடங்கின என்று அறிகிறோம். கணபதி ஐயரே (1709-1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முதலாசிரியர் என்பர். இவர் வாளபீமன் நாடகத்தை எழுதினார். இதுவரை கிடைத்த பல்வேறு தகவல்களிலிருந்து ஈழத்தில் ஏறத்தாள 200க்கு மேற்பட்ட மரபுவழி நாடக நூல்கள் இருந்ததாக அறிய முடிகிறது. ஆனால் ஏட்டுருவிலோ அன்றி அச்சுருவிலோ கையிற் கிடைப்பவை அவற்றினும் பாதியே.
போத்துக்கேயர் வருகையின் பின் ஈழத்தில் வளர்ச்சி பெற்ற கத்தோலிக்க மதத் தாக்கத்தினால் கத்தோலிக்க மதச் சார்பு பொருந்திய கூத்துக்களும் தோன்றின. என்றிக் எம்பரதோர் நாடகம், ஞானசவுந்தரி நாடகம் என்பன இதற்கு உதாரணங்களாகும். ஈழத்து மரபுவழி நாடகங்களில் கத்தோலிக்காரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலைநாடு ஆகிய இடங்களிலெல்லாம் இம் மரபு வழி நாடகங்கள் இன்றும் வழக்கிலுள்ளன. இவற்றிற்கிடையே பிரதேசத்திற்குப் பிரதேசம் சிற்சில வேறுபாடுகளிருப்பினும் இவை அனைத்தும் ஓரிடத்திலுருவாகி, பின்னர் ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களிற் சுவறின என்பதற்கு ஆதாரங்களுண்டு. இம்மரபுவழி நாடகங்களே ஈழத்து நாடக மரபின் ஆரம்பமாகும்.
பார்ஸி வழி நாடகக்காரரது வரவினால் 18 ஆம் நூற்றாண்டில் விலாசம் என்றொரு நாடக வடிவம் ஈழத்தில் வந்து புகுந்தது. அரிச்சந்திர விலாசம், மதனவல்லி விலாசம் என்பன இதற்கு உதாரணம். கூத்திலிருந்த ஆட்ட முறைகள் நீக்கப்பட்டமையும் கர்னாடக சங்கீத இசை இடம் பெற்றமையும் விலாசத்தை கூத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டிய அம்சங்களாகும். கூத்து ஆட்ட முறைகளை விட்டு கர்னாடக இசையுடன் மேற்கத்திய, இந்துஸ்தானி இசைகளும் கலந்து சபா, டிறாமா போன்ற நாடக வடிவங்களும் 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் எழுந்தன. நாட்டுக்கூத்திற் காணப்படாத காட்சியமைப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் இந்நாடகங்களின் பிரதான அம்சங்களாகும்.
துணை நூல்கள்
வெளி இணைப்புகள்
ஈழத்து நாடக நூல்கள்
- கந்தன் கருணை - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்
- வந்து சேர்ந்தன, தரிசனம் - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்
- சமூக விரோதி - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2005-12-18 at the வந்தவழி இயந்திரம்
- நான்கு நாடகங்கள் - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்