ச. வையாபுரிப் பிள்ளை
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ச. வையாபுரிப் பிள்ளை |
---|---|
பிறந்ததிகதி | 12 அக்டோபர் 1891 |
பிறந்தஇடம் | சிக்க நரசய்யன் கிராமம், நெல்லை மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா |
இறப்பு | 17 பெப்ரவரி 1956 | (அகவை 64)
பணி | தமிழறிஞர், பதிப்பாளர், வழக்கறிஞர் |
ச. வையாபுரிப் பிள்ளை (எஸ். வையாபுரிப் பிள்ளை, 12 அக்டோபர் 1891 – 17 பெப்ரவரி 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
வையாபுரிப்பிள்ளை, நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்க நரசய்யன் கிராமம் என்ற ஊரில் 1891-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி சரவணப்பெருமாள் - பாப்பம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். இவர் பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று "சேதுபதி தங்க மெடல் (பதக்கம்)" பெற்ற பெருமைக்குரியவர் ஆனார்.
வழக்குரைஞராகப் பணி
தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் வையாபுரிப் பிள்ளை திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்குரைஞரானது மட்டுமல்லாமல், ஏழு ஆண்டுகள் வழக்குரைஞராகவும் பணிபுரிந்தார். பிறகு மூன்று ஆண்டுகள் திருநெல்வேலியிலும் வழக்குரைஞராகப் பணியாற்றினார். வையாபுரிப் பிள்ளையின் நெல்லை வாழ்க்கையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக, "இரசிகமணி" டி. கே. சிதம்பரநாத முதலியார், நீலகண்ட சாஸ்திரியார், பேராசிரியர் சாரநாதன், பெ. அப்புசாமி போன்றோர் இருந்திருக்கிறார்கள்.
தமிழாய்வு
வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதி, வெளிவந்த பல கட்டுரைகளும் இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன. உ.வே.சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு.
வையாபுரிப்பிள்ளை 1926 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார். 1936 ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். 1946 வரை அப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார்.
வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் பொற்காலம் என்று கூறுவார்கள். சுமார் நான்கு ஆண்டுகள் அப்பதவியில் வையாபுரிப் பிள்ளை இருந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி லெக்சிகன் (சொற்களஞ்சியம்) பதிப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினாரகவும் பணியாற்றிய பெருமை வையாபுரிப் பிள்ளைக்கு உண்டு. இந்தக் காலகட்டத்தில் தான், பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக விளங்கிய வ. ஐ. சுப்பிரமணியம், ஆய்வு மாணவராக வையாபுரிப் பிள்ளையிடம் பணியாற்றி அவரது வாரிசு என்ற பெயரையும் பெற்றார்.
இரா. பி. சேதுப்பிள்ளையைப் போலவே கம்பனின் கவிநயத்தில் தன்னைப் பறிகொடுத்த வையாபுரிப் பிள்ளை, "இரசிகமணி" டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும், வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆகிய இருவரிடமும் வையாபுரிப் பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது. தனது சிறைவாசத்துக்குப் பிறகு, அரசியல் வாழ்வில் வெறுப்புற்றிருந்த வ. உ. சி., ஏட்டிலிருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்தார். அதனை எஸ்.வையாபுரிப் பிள்ளையிடம் காட்டி செப்பம் செய்தார். வையாபுரிப் பிள்ளையையும் அதன் பதிப்பாசிரியராகத் தன்னுடன் இருக்குமாறு கேட்டதையும், ஆனால் இவரோ நீங்களே பதிப்பாசிரியராக இருந்தால் போதும் என்று மறுத்து விட்டதாகவும் அந்த உரைப் பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில். அவை அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.
நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955 இல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார். கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவரது அவா மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது.
விமரிசனங்கள்
தேவநேயப் பாவாணர் போன்றவர்கள், வையாபுரிப் பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலத்தை சரியாக கணிக்கவில்லை என்றும், கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர். தமிழின் பழம் பெருமைக்கு எதிரானவர் என்று அவரை திராவிடக் கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.
மறைவு
வையாபுரிப் பிள்ளை 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தனது 65வது வயதில் இயற்கை எய்தினார்.
இயற்றிய நூல்கள்
- 1930 - ஆராய்ச்சியுரைத் தொகுதி-1, ஆசிரியர் வெளியீடு
- 1944 - சிறுகதை மஞ்சரி, தினமணி வெளியீடு
- 1946 - Research in Dravidian Language, Madras Premier Co., Madras
- 1947 - இலக்கியச் சிந்தனைகள், பாரி நிலையம்
- 1949 - தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம்
- 1950 - கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு, கம்பன் கழகம், காரைக்குடி
- 1951 - உரைமணிமாலை, ஆசிரியர் பதிப்பு
- 1952 - இலக்கிய தீபம், பாரி நிலையம்
- 1952 - இலக்கிய உதயம் (பகுதி 2), தமிழ்ப் புத்தகாலயம்
- 1954 - இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம்
- 1955 - கம்பன் காவியம், தமிழ்ப் புத்தகாலயம்
- 1956 - இலக்கணச் சிந்தனைகள், பாரி நிலையம்
- 1956 - திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, தமிழ்ப் புத்தகாலயம், இரண்டாம் பதிப்பு
- 1956 - History of Tamil Language & Literature, NCBH
- 1956 - சொற்கலை விருந்து, பாரி நிலையம்
- 1957 - காவியகாலம், தமிழ்ப் புத்தகாலயம்
- 1958 - இலக்கிய விளக்கம், தமிழ்ப் புத்தகாலயம்
- 1958 - ராஜி
- 1959 - தமிழ்ச் சுடர்மணிகள், பாரி நிலையம், மூன்றாம் பதிப்பு
- 1959 - அகராதி நினைவுகள், தமிழ்ப் புத்தகாலயம்
- 1960 - தமிழின் மறுமலர்ச்சி, பாரி நிலையம், நான்காம் பதிப்பு
பதிப்பித்த நூல்கள்
- மனோன்மணியம், 1922
- துகில்விடு தூது, 1929
- நாமதீப நிகண்டு, 1930
- அரும்பொருள் விளக்க நிகண்டு, 1931
- களவியற்காரிகை, 1931
- கம்பராமாயணம்-யுத்த காண்ட1-3 படலம்), 1932
- குருகூர் பள்ளு, 1932
- திருக்குருங்குடி அழகிய நம்பி உலா, 1932
- தினகர வெண்பா, 1932
- நெல்விடு தூது, 1933
- தொல்காப்பியம்-(பொருளதிகாரளம, இளம்பூரணம்), 1933
- திருமந்திரம் (சேர்ந்து பதிப்பித்தது), 1933
- திருமுருகாற்றுப்படை (சேர்ந்து பதிப்பித்தது, புதிய உரையுடன்), 1933
- கம்பராமாயணம்-பால காண்டம் (1-7படலம்), 1933
- பூகோள விலாசம், 1933
- திருப்பணி மாலைகள் (தென்திருப்பேரை, திருக்கோளூர்),1933
- மூப்பொந்தொட்டி உலா, 1934
- பொதிகை நிகண்டு, 1934
- இராஜராஜதேவர் உலா, 1934
- தொல்காப்பியம்-பொருளதிகாரம் (நச்சினார்க்கினியம்),1934
- இராமலிங்கேசர் மீது பணவிடு தூது, 1934
- மதுரைக் கோவை, 1934
- தெய்வச்சிலையார்விறலிவிடு தூது, 1936
- புறத்திரட்டு, 1938
- கயாதரம், 1939
- சங்க இலக்கிய பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்), 1940
- சீவக சிந்தாமணி, 1941
- சாத்தூர் நொண்டி நாடகம், 1941
- நவநீதப் பாட்டியல் - உரையுடன், 1943
- திருமுருகாற்றுப்படை-பழைய உரை, 1943
- நான்மணிக்கடிகை, 1944
- இன்னா நாற்பது, 1944
- திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும், 1944
- இனியவை நாற்பது, 1949
- இராமப்பய்யன் அம்மானை, 1950
- முதலாயிரம், 1955
- திருவாய்மொழி
- கொண்டல் விடு தூது
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- ஒப்பாரும் மிக்காரும் இல்லா வையாபுரிப் பிள்ளை[தொடர்பிழந்த இணைப்பு], வே. சிதம்பரம், தினமணி இதழ், செப்டம்பர் 6, 2009
- எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழ் மரபு அறக்கட்டளை இணையத்தளம்
வெளி இணைப்புகள்
- தமிழின் மறுமலர்ச்சி - 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி', திண்ணைக் கட்டுரை
- வையாபுரிப்பிள்ளை பரணிடப்பட்டது 2012-11-25 at the வந்தவழி இயந்திரம்
- மறக்க முடியுமா? பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை கீற்று கட்டுரை