கு. ப. ராஜகோபாலன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கு. ப. ராஜகோபாலன் |
---|---|
பிறந்ததிகதி | ஜனவரி 1902 |
இறப்பு | ஏப்ரல் 27, 1944 |
கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட கு. ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும் அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்று அழைக்கப்படுகிறார்.[1][2]
வாழ்க்கை வரலாறு
கு. ப. ரா கும்பகோணத்தில் பிறந்தவர். அவருடைய பெற்றோர் பட்டாபிராமையர்- ஜானகி அம்மாள். திருச்சி கொண்டையம்பேட்டைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், தேசியக் கல்லூரியில் இடைநிலை (இண்டர்மீடியட்) கல்வியும் பெற்றார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் வடமொழியை சிறப்புப் பாடமாகக் கொண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். தனது 24ஆம் வயதில் அம்மணி அம்மாளை மணந்தார். மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணக்கராகப் பணியாற்றினார். கண்புரை நோயின் காரணமாக கண் பார்வை குன்றியதால் அப்பணியில் இருந்து விலகினார். கண் பார்வை குன்றிய நிலையிலும் மணிக்கொடி போன்ற இதழ்களில் அவர் இலக்கியப் படைப்புகளை எழுதி வெளியிட்டார்.[1]
மருத்துவ சிகிச்சைக்குப்பின் கண் பார்வை மீண்டும் கிட்டியது. சென்னைக்கு இடம் பெயர்ந்து முழுநேர எழுத்தாளராக மாறினார். மணிக்கொடி, கலைமகள், சுதந்திர சங்கு, சூறாவளி, ஹனுமான், ஹிந்துஸ்தான் போன்ற இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின. வ. ராமசாமி ஆசிரியராக இருந்த ”பாரத தேவி” என்ற இதழிலும், கா. சீ. வெங்கடரமணி நடத்திய ”பாரத மணி” இதழிலும் சிலகாலம் பணியாற்றினார். கு. ப. ரா தனது இயற்பெயரிலும் ”பாரத்வாஜன்”, "கரிச்சான்', "சதயம்” போன்ற புனைப்பெயர்களிலும் படைப்புகளை வெளியிட்டார். இரண்டாம் உலகப் போரின் போது கும்பகோணத்துக்கு மீண்டும் திரும்பி ”மறுமலர்ச்சி நிலையம்” என்ற பெயரில் புத்தக நிலையம் ஒன்றை நடத்தினார். 1943-ஆம் ஆண்டு கிராம ஊழியன் இதழின் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த ஆண்டு அவ்விதழின் ஆசிரியரானார். ஆனால் இழைய அழுகல் நோயால் தாக்கப்பட்டு 1944ஆம் ஆண்டு இறந்தார்.[1]
கு. ப. ரா. வின் தங்கை சேது அம்மாளும் அறியப்பட்ட ஓர் எழுத்தாளர்.[2]
படைப்புகள்
(பட்டியல் முழுமையானதல்ல)
சிறுகதைத் தொகுப்புகள்
- ஆத்மசிந்தனை (1986)
- ஆற்றாமை (1990)
- கனகாம்பரம் முதலிய கதைகள் (1944)
- காணாமலே காதல் (1943)
- புனர்ஜன்மம் சிறுகதைகள்(1943)
கட்டுரைத்தொகுதி
- கண்ணன் என் கவி (1937)
- எதிர்கால உலகம் (1943)
- ஸ்ரீஅரவிந்த யோகி (1940)
- டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும் (1985)
- பக்தியின் சரிதை (1992)
மொழிபெயர்ப்புகள்
- அனுராதா (சரத்சந்திரர் - புதினம்)
- ஆறு நவயுக நாவல்கள் (புதினம்) (1940)
- இரட்டை மனிதன் (ஆர்.எல்.ஸ்டீவன்ஸன் - புதினம்)
- டால்ஸ்டாய் சிறுகதைகள் - I,II,III பாகங்கள் (1942)
- துர்க்கேஸநந்தினி (பக்கிம் சந்திர சாட்டர்ஜி - புதினம்)
- தேவி ஸௌதுராணி (பக்கிம் சந்திர சாட்டர்ஜி - புதினம்)
- ஹரிலட்சுமி (சரத்சந்திரர் - புதினம்)
- ஹிரண்மயி (சரத்சந்திரர் - புதினம்) (1949)
நாடகங்கள்
- அகலியை (1967)
படைப்புத் தொகுதிகள்
- கு.ப.ரா. கட்டுரைகள் (2012)
- கு.ப.ரா கதைகள் (2009)
- கு.ப.ரா சிறுகதைகள் (2014)
- கு.ப.ரா. படைப்புகள் (நாடகங்களும் கவிதைகளும்) (2010)
- சிறிது வெளிச்சம் (தொகுப்பில் வராத கதை, குறுநாவல்கள், கவிதைகள் (1969)
- கருவளையும் கையும் (கவிதைத் தொகுதி- காவிரி இதழ் வெளியீடு) ((2021)
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "சிறுகதை ஆசான்' கு.ப.ரா.
- ↑ 2.0 2.1 "Stories of another day" இம் மூலத்தில் இருந்து 2012-11-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121111030942/http://hindu.com/2002/01/29/stories/2002012900140200.htm.
வெளி இணைப்புகள்
- அந்த ஒரு வார்த்தை
- கு.ப.ரா
- [1] பரணிடப்பட்டது 2021-04-19 at the வந்தவழி இயந்திரம்