கிராம ஊழியன் (இதழ்)
கிராம ஊழியன் என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வெளிவந்த தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது திருச்சிராப்பள்ளிக்கு 28 கல் தள்ளி இருக்கும் துறையூர் என்ற சிற்றுாரிலிருந்து மாதம் இருமுறை இதழாக வெளிவந்தது. இது 1943-47 காலகட்டத்தில் மாதம் இருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் திருலோக சீதாராம் ஆவார். இது தரமான இலக்கியபடைப்புக்களை வெளியிட்டது.
வரலாறு
அரசியல் இதழாக
1940களில் திருச்சியிலிருந்து 'நகர தூதன்’ என்ற வார இதழ் செல்வாக்குடனும் பரபரப்பூட்டும் வகையிலும் வந்து கொண்டிருந்தது. அது நீதிக் கட்சி ஆதரவு இதழாக சுயமரியாதை இயக்க ஏடாக வெளிவந்தது. அந்த இதழில் இந்திய தேசிய காங்கிரசை எதிர்த்து காரசாரமான கருத்துக்கள் எழுதப்பட்டன.
நகர தூதனுக்கு ஒரு போட்டியாகவும், அதற்குப் பதில் அளிக்கவும், காங்கிரசு ஆதரவு அரசியல் பத்திரிகையாக திருச்சினாபள்ளி மாவட்டக் காங்கிரசு பிரமுகர்கள் ஒரு வார இதழை துவக்கினார்கள். அது கிராமப்புறத்திலிருந்து வந்ததால் கிராம ஊழியன் என்று பெயர் பெற்றது. பூர்ணம் பிள்ளை என்ற துறையூர் காங்கிரசுகாரர் இதன் ஆசிரியரானார். ஊழியன் பிரஸ் என்ற அச்சகத்தில் அது அச்சிடப்பட்டது. பின்னர் லிமிடெட் நிறுவனம் அமைக்கப்பட்டு அச்சகமும், இதழும் அதன் நிர்வாகத்தில் இயங்கின.
இதழ் தொடங்கிய சில மாதங்களில் இதழின் ஆசிரியர் பூர்ணம் பிள்ளை மரணம் அடைந்தார். இதன் பிறகு ‘கிராம ஊழியன்' ஏடு அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் நிர்வாக மேற்பார்வையில், திருலோக சீதாராம் ஆசிரியராக வெளிவந்தது. அது தேசிய விடுதலைப் போராட்ட உணர்வு பொங்கி எழுந்த காலகட்டம். 1942இல் பத்திரிகை சுதந்திரத்தை அதிகமாகப் பாதிக்கும் அளவில், அந்நாளைய பிரித்தானிய அரசாங்கம், பல நடவடிக்கைகளை எடுத்தது. அரசின் அந்தப் போக்கைக் எதிர்த்து அகில இந்திய அளவில் பல பத்திரிகைகள் தங்கள் பிரசுரத்தை நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தன.
இலக்கிய இதழாக
அப்போது திருச்சியில் கலாமோகினி தோன்றி வளர்ந்து கொண்டிருந்தது. அது திருலோக சீதாராம், அ. வெ. ர. கி. இருவர் உள்ளத்திலும் தாக்கம் ஏற்படுத்தியது. அவர்கள் ஒரு இலக்கிய இதழை நடத்த ஆசைப்பட்டார்கள். அது இரண்டாம் உலகப் போருக்கு பிற்பட்ட காலம். போரினால் காகிதத் தட்டுப்பாடு இருந்த்துவந்தது. அதனால் புதிய பத்திரிகைகள் நடத்துவதற்கு அரசால் அனுமதி மறுக்கப்பட்டு வந்த காலமாக இருந்தது.
எனவே, அரசியல் பத்திரிக்கையாக இருந்த கிராம ஊழியனை இலக்கிய இதழாக மாற்ற அவர்கள் திட்டமிட்டார்கள். அதன்படி கு. ப. ராஜகோபாலனை 'கௌரவ ஆசிரியர்' ஆகக்கொண்டு கிராம ஊழியன் மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறை வெளியீடாக வரத் தொடங்கியது. புதிய வடிவம், புதிய தோற்றம், புதிய உள்ளடக்கத்துடன் ‘கிராம ஊழியன்' 1943 ஆகத்து 15 அன்று இலக்கிய இதழாக வெளிவரத் தொடங்கியது.
கிராம ஊழியன் இலக்கிய இதழாக மாறிய பிறகு அதன் முதல் இதழில் எழுதியது:
தமிழ்நாட்டில் பாரதியை மூலபுருஷனாகக் கொண்ட மறுமலர்ச்சி துவக்கின. இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு, அதன் உன்னத யௌவனப் பருவத்தில் ஊழியன் தோன்றுகிறான். இலக்கியம் மதவுணர்ச்சித் துறைகளில் பாரதி முதலில் காட்டின வழியைப் பணிவுடன் பின்பற்றி, தன்னாலியன்ற வரையில் பணிபுரிவான்
ஒரு இலக்கியப் இதழுக்கு கிராம ஊழியன் என்ற பெயர் சற்றும் பொருத்தமற்றது. இதை ஊழியன் நிர்வாகிகள் துவக்கம் முதலே உணர்ந்துதான் இருந்தார்கள். வேறு பெயர் வைப்பதற்கு அவர்கள். முயன்றதும் உண்டு. ஆனால், 'புதிய பத்திரிகைகளுக்கு டிக்ளரேஷன்' கிடையாது என்றிருந்த அக்காலத்திய நிலை, வேறு வழி இல்லாது செய்து விட்டது. எனவே, 'கிராம' என்ற எழுத்துக்களை மிகச் சிறிதாகவும், ‘ஊழியன்' என்பதைப் பெரிதாய் எடுப்பாகவும் அச்சிட்டு வெளியிட்டனர்.
கிராம ஊழியன் பிரஸ் லிமிடெடுக்காக அ. வெ. ர. கிருஷ்ணசாமி வெளியீட்டாளராகவும், ஆசிரியராக திருலோக சீதாராமும், கௌரவ ஆசிரியராக கு.ப. ராஜகோபாலனும் இருந்தனர். 1943ஆம் ஆண்டு 15 முதல் நான்கு மாத காலம் இப்படி இருந்து. பிறகு 1944 சனவரி முதல் நாள் இதழிலிருந்து, கு. ப. ராஜகோபாலன் ஆசிரியர் என்றும், திருலோக சீதாராம் நிர்வாக ஆசிரியர் என்றும் அச்சிடப்பட்டது.
இலக்கியப் பணிகள்
கு. ப. ரா. கும்பகோணத்தில்தான் இருந்தார். அங்கிருந்தபடியே, ஒவ்வொரு இதழுக்கும் தேவையானதை எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார். கதை, கட்டுரை ஓரங்க நாடகம் இப்படி ஒவ்வொரு இதழுக்கும் இரண்டு மூன்று உள்ளடக்கங்களை எழுதினார். மராட்டிய மன்னன் சிவாஜியின் வரலாற்றைக் கதைபோல் தொடர்ந்து ‘பரத்வாஜன்' என்ற புனைபெயரில் எழுதிவந்தார். கு. ப. ரா. கரிச்சான் என்ற பெயரிலும் எழுதினார். கும்பகோணத்தில் வசித்த தி. ஜானகிராமன், எம். வி. வெங்கட்ராம், ஆர். நாராயணசுவாமி ( ‘கரிச்சான் குஞ்சு' ), கி. ரா. கோபாலன், ஸ்வாமிநாத ஆத்ரேயன் ந. பிச்சமூர்த்தி மற்றும் சில நண்பர்களிடமிருந்தும் கதைகள் வாங்கி கு. ப. ரா. ஊழியனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். அக் காலத்தில், கு. ப. ரா. சில சிறுகதைகளும், 'பாமதி' போன்ற சில ஒற்றையங்க நாடகங்களும், சில கட்டுரைகளும் எழுதியுள்ளார். ந. பிச்சமூர்த்தியும் நிறைய எழுதியிருக்கிறார். தி. ஜானகிராமனின் முதல் புதினமான 'அமிர்தம்' தொடர் கதையாக வெளிவந்தது. உலகத்துச் சிறுகதைகளை என் அண்ணா அசோகன் (ரா. சு. கோமதிநாயகம்) 'மகாயன்' என்ற பெயரில் மொழிபெயர்த்துத் தந்தார். ஈழத்து எழுத்தாளர்கள் ஊழியனில் அதிகமாக எழுதினார்கள். புத்தக மதிப்புரை ‘நமது தராசு' என்ற தலைப்பில் வெளியாயிற்று. கோபுலு, சாரதி ஆகிய ஓவியர்கள் அப்பொழுதுதான் பத்திரிகை உலகத்தில் நுழைந்னர். கிராம ஊழியன் அவர்களுக்குப் பெரிதும் உதவியது.
1944 சனவரியில், 'கிராம ஊழியன்' பொங்கல் மலர் ஒன்றைப் பெரிய அளவில் தயாரித்து வெளியிட்டது. இலக்கியத் தரம் உள்ள சிறப்பு மலராக அமைந்திருந்த அதில்தான் புதுமைப்பித்தன் முதல் முதலாக வேளூர் வெ. கந்தசாமிக் கவிராயர் என்ற பெயரில் ஒரு கவிதை எழுதினார். ‘உண்டுண்டு கடவுளுக்குக் கண் உண்டு, கண்ணோ நெருப்பு வைக்க' என்று தொடங்கும் கவிதை அது. மற்றும் அந்நாளைய பிரபல எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. ந. பிச்ச மூர்த்தியின் நீண்ட கவிதை 'மழை அரசி காவியம்' மலருக்குத் தனிச் சிறப்பு அளித்தது.
பொதுவாக, ஒவ்வொரு இதழுக்கு தேவைப்பட்ட கதைகள், கவிதைகள், கட்டுரைகள் முதலியவற்றைத் தேர்ந்தெடுத்து திருலோக சீதாராம்தாராம் நிர்வாக ஆசிரியராக செயல்பட்டு வந்தார். 1944 பிப்ரவரியில் வல்லிக்கண்ணனை உதவி ஆசிரியாராக நியமிக்கப்பட்டார்.
கிராம ஊழியன் கிரவுன் அளவில்- சிறிய வடிவத்தில் வந்து கொண்டிருந்தது. 1944 மே மாதம் இதழிலிருந்து இதழை டிம்மி அளவில் ('ஆனந்த விகடன்' பழைய அளவில்) வெளியிடுவது என்று திட்டமாயிற்று.
கு. ப. ரா. 1944 ஏப்ரல் கடைசியில் மரணமடைந்தார். ஆகவே, 'கிராம ஊழியன்' வரலாற்றில் கு. ப. ராஜகோபாலன் பெயர் எட்டு மாதங்களில் நான்கு மாத காலம் கௌரவ ஆசிரியர் என்றும், நான்கு மாதங்கள் ஆசிரியர் என்றும்-இடம் பெற்றது. டிம்மி அளவில் வெளியான முதலாவது இதழ் கு. ப. ரா. நினைவு மலராக அமைந்தது. 1944 நவம்பரில் திருலோக சீதாராம் 'கிராம ஊழியன்' தொடர்பை விட்டு விட்டு விலகினார். திசம்பர் முதல் நாள் இதழிலிருந்து 'ஆசிரியர் : வல்லிக்கண்ணன்' என்று பெயர் அச்சிடப்பட்டது.
கு. ப. ரா. வின் மறைவுக்குப் பிறகு, அவருக்காக எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் ஊழியனுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை. ஆகவே வல்லிக்கண்ணன் பலப்பல பெயர்களில் ஒவ்வொரு இதழிலும் அதிகம் எழுதத்தொடங்கினார். திறமையுள்ள புதிய எழுத்தாளர்கள் ஊழியன் எழுத்தாளர்கள் ஆனார்கள்.
விமர்சனங்கள்
இதழின் பெயரான கிராம ஊழியன் என்பது 'கிராம நலம்', 'கிராம ராஜ்யம்' போன்ற கிராம சீர்திருத்தம் பற்றிப் பேசக்கூடிய ஒரு பத்திரிகை என்ற எண்ணத்தையே ஏற்படுத்தி வந்தது. அதனால் 'கிராம ஊழியன்' என்று பெயரை வைத்துக் கொண்டு, என்னென்ன விஷயங்களை எல்லாமோ போட்டுப் பத்திரிகையைப் பாழ்படுத்துவதாக ஒரு சாரார் குறைகூறிக் கொண்டிருந்தார்கள். சில எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணனே பலப்பல பெயர்களில் எழுதிப் பத்திரிகையின் வளர்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தனர்.
நிறுத்தம்
பத்திரிகை விற்பனையில் இலாபம் இல்லாத நிலை ஏற்பட்டதால் அச்சு இயந்திரங்களைப் பெருத்த இலாபத்தோடு விற்க முடியும் என்ற நிலை வந்ததும், பத்திரிக்கையின் உரிமையாளரான அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் இயந்திரங்களை விற்று பத்திரிகை நிறுத்திவிட்டார். ‘கிராம ஊழியன்' 16-5-1947 இதழ் அதன் கடைசி இதழாக அமைந்தது.[1]
இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
உசாத்துணைகள்
- ↑ வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல் (மணிவாசகர் பதிப்பகம்): pp. 34-43. https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D. பார்த்த நாள்: 13 நவம்பர் 2021.