1989 வல்வெட்டித்துறைப் படுகொலைகள்
1989 வல்வெட்டித்துறை படுகொலைகள் | |
---|---|
இடம் | வல்வெட்டித்துறை, இலங்கை |
நாள் | ஆகத்து 2–3, 1989 (+6 கிநே) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | இலங்கைத் தமிழ்ப் பொதுமக்கள் |
தாக்குதல் வகை | துப்பாக்கிச்சூடு, எரிப்பு, எறிகணைகள் |
ஆயுதம் | துப்பாக்கிகள், பீரங்கிகள், கிரனேடுகள், தீ |
இறப்பு(கள்) | 64[1] |
காயமடைந்தோர் | 43 [1] |
தாக்கியோர் | இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த இந்தியத் தரைப்படை |
1989 வல்வெட்டித்துறைப் படுகொலைகள் (1989 Valvettiturai massacre) இலங்கை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமுனையில் கரையோர நகரான வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2 முதல் 3 வரை இடம்பெற்றன. இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த இராணுவத்தினரால் நடத்தப்பட்ட இப்படுகொலைகளில் குறைந்தது 64 இலங்கைத் தமிழர் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப்படைகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு அதிகாரி உட்பட ஆறு இராணுவத்தினரைக் கொன்றதை அடுத்து, இப்படுகொலைகள் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே இடம்பெற்ற சண்டையில் சிக்கியே பொதுமக்கள் இறந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் பன்னாட்டு ஊடகவியலாளர்கள் ரீட்டா செபஸ்தியான் (இந்தியன் எக்சுபிரசு),[1] டேவிட் உசேகோ (பைனான்சியல் டைம்ஸ்) மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு ஆகியன நேரில் கண்டவர்களின் சாட்சியத்தைக் கொண்டு இவை பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களும், படுகொலைகளும் என உறுதிப்படுத்தினர்.[2] இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பின்னர் பணியாற்றிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் இப்படுகொலைகளை இந்தியாவின் மை லாய் என வர்ணித்தார்.[3]
தாக்குதல்
1989 ஆகத்து 2 புதன்கிழமை, முற்பகல் உள்ளூர் நேரம் 11:15 அளவில் 30 பேரடங்கிய இந்திய இராணுவத்தினர் வல்வெட்டித்துறை சந்தைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, துப்பாக்கிச்சூட்டு சப்தம் கேட்டது. சந்தை அப்போது கூடியிருந்த வேளையில் பெருமளவான பொதுமக்கள் அங்கு காணப்பட்டனர். பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் நடையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியமை அங்குள்ள மக்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. ஆறு இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
ஆரம்ப சமரை அடுத்து, பெருமளவிலான படையினர் நகரத்தை நோக்கி நகர்ந்தனர், தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் தப்பியோடி விட்டனர். இராணுவத்தினரின் தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், சிலர் கடைகளுக்குள் வைத்து எரிக்கப்பட்டனர். அனைத்து வயதினரையும் கொண்ட பொதுமக்கள் சுற்றிவளைக்கப்பட்டு நகர மத்தியில் நிறுத்தப்பட்டனர். அவர்களை நோக்கி மூன்று சுற்றுத் தோட்டாக்கள் சுடப்பட்டன. இதில் நால்வர் கொல்லப்பட்டனர். நகரில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்புத் தேடி ஓடினர். இவர்களில் பலர் அருகில் இருந்த சுப்பிரமணியம், சிவகணேசு ஆகியோரின் வீடுகளில் தஞ்சமடைந்தனர். இவ்விரு வீடுகளிலும் கிட்டத்தட்ட 300 பேர் வரை தங்கினர்.[2]
பிற்பகல் 1:30 மணியலவில் இராணுவத்தினர் சுப்பிரமணியம் என்பவரின் வீட்டினுள் நுழைந்து, சுப்பிரமணியத்தையும் மேலும் எட்டுப் பேரையும் சுட்டுக் கொன்றனர்.[1][2] மாலை 4:00 மணியளவில் சிவகணேசு என்பவரின் வீட்டுக்குச் சென்ற இராணுவம் அங்கிருந்து 8 ஆண்களை அருகில் இருந்து மாட்டுத் தொழுவத்திற்குக் கொண்டு சென்று சுட்டனர். இவர்களில் நால்வர் உயிர் தப்பினர். அன்றைய நாளில் மொத்தம் 52 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக வல்வெட்டித்துறை பிரசைகள் குழு அறிவித்தது. அடுத்தநாள் ஆகத்து 3 வியாழனன்று, நகரில் ஊரடங்கு உத்தரவை இந்திய இராணுவம் பிறப்பித்து, சுற்றிவளைப்பில் ஈடுபட்டது. கிட்டத்தட்ட 75 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வீதியில் உருட்டிச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டனர். இவர்களில், நால்வர் உயிரிழந்தனர். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஊரடங்கு பற்றி அறியாமல் அங்கு வந்தவர்களும் தாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.[2]
காயமடைந்த பலருக்கு உள்ளூர் மருத்துவர்களால் முதலுதவி மொடுக்கப்பட்டு, அருகில் உள்ள ஊறணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த பலர் 5 மைல்கள் தூரத்தில் உள்ள பருத்தித்துறை மருத்துவமனைக்குக் கால்நடையாகவே சென்றனர். பருத்தித்துறை மருத்துவமனையில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த எல்லைகளற்ற மருத்துவ அணியைச் சேர்ந்த ஜாக்குலின் என்ற தாதி உடனடியாக வல்வெட்டித்துரைக்கு நோயாளர் ஊர்தி ஒன்றை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். ஆனாலும், அவருக்கு அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஆகத்து 4 இல் ஊரடங்கு தளர்த்தப்படதை அடுத்து, காயமடைந்த பலர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.[2]
இவற்றையும் பார்க்க
- 1985 வல்வை நூலகப் படுகொலைகள்
- 1987 யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்
- பொது மக்கள் மீதான இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 Sebastian, Rita (August 24, 1989). "Massacre at Point Pedro". இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 2007-07-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070701050648/https://www.ltteps.org/mainpages/images/2006/08/Massacre_at_Valvetti_-_Indian_Express.pdf. பார்த்த நாள்: 2008-12-24.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 ராஜன் ஹூல். "Vadamaratchi: April/August 1989". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. http://www.uthr.org/Reports/Report3/chapter3.htm. பார்த்த நாள்: 2008-12-24.
- ↑ Sharma, Sitaram (1998). Contemporary political leadership in India: George Fernandes- The defense minister. APH Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7024-999-3. ப.211–212
- India's Mylai : Massacre at Valvettiturai. Hind Mazdoor Kissan Panchayat. 1989. இணையக் கணினி நூலக மையம்:153279135.
வெளி இணைப்புகள்
- By George,He's still an activist பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Valvai Massacre 29th Year பரணிடப்பட்டது 2018-08-02 at the வந்தவழி இயந்திரம்
- தமிழர் படுகொலைகள் : 2. வல்வைப் படுகொலை| Massacre of Tamils Series: Valvettithurai (காணொளி)
Coordinates: 9°49′N 80°10′E / 9.817°N 80.167°E
- இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை, பரணிடப்பட்டது 2023-08-02 at the வந்தவழி இயந்திரம்