வி. மணிவண்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விஸ்வலிங்கம் மணிவண்ணன்
20-வது யாழ்ப்பாண முதல்வர்
பதவியில்
30 திசம்பர் 2020 – 31 திசம்பர் 2022
முன்னையவர்இம்மானுவேல் ஆர்னோல்ட்
யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
பெப்ரவரி 2018
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

விசுவலிங்கம் மணிவண்ணன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் ஆவார். இவர் 2020 திசம்பர் முதல் 2022 திசம்பர் 31 வரை யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராகப் பதவியில் இருந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

1983 இல் கொக்குவிலில் பிறந்த மணிவண்ணன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியைப் பெற்றார். பாடசாலையில் சகலதுறைத் துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்று, பின்னர் கொழும்பு சட்டக் கல்லூரி மூலம் வழக்கறிஞரானார்.

அரசியல் வாழ்க்கை

ஈழப்போரின் முடிவின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 2010 இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்து 2010, 2015 நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது. ஆனாலும், எந்தவொரு இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.[2] மணிவண்ணன் இக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இக்கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் 85,198 வாக்குகளைப் பெற்று கணிசமான அளவு உள்ளூராட்சி உறுப்பினர்களைப் பெற்றது. யாழ்ப்பாண மாநகர சபையில் வி. மணிவண்ணன் சபை உறுப்பினரானார். ஆனாலும், யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவரை உறுப்பினராக தேர்ந்தெடுத்தமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என சனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்ததை அடுத்து மணிவண்ணன் சபை அமர்வுகளில் பங்கெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.[3]

2020 நாடாளுமன்றத் தேர்தல்

2020 ஆகத்து 5 இல் நடைபெற்ற 2020 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் மணிவண்ணன் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரக் காலப் பகுதியில் மணிவண்ணனுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையில் சர்ச்சைகள் ஆரம்பித்தன. இத்தேர்தலில் மணிவண்ணன் 22,741 வாக்குகளைப் பெற்று கட்சி விருப்பு வாக்குகளின் அடிப்படையில் மூன்றாவதாக வந்தார். ஆனாலும், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவில்லை. தேர்தல் முடிந்த சில நாட்களில் மணிவண்ணனும், அவரைச் சார்ந்த சிலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.[4]

மாநகர முதல்வர்

எம். ஏ. சுமந்திரன் மணிவண்ணனுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை 2020 அக்டோபர் 13 இல் மீளப் பெற்றுக்கொண்டதை அடுத்து, மணிவண்ணன் மீண்டும் மாநகரசபை அமர்வுகளில் கலந்து கொண்டார். அப்போது மாநகர சபை முதல்வராக இருந்த தமிழத் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் சமர்ப்பித்த 2021-ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை இரு தடவைகள் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டதை அடுத்து ஆர்னோல்ட் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.[5] 2020 திசம்பர் 30 இல் முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.[6] இவருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் சனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்கள், இலங்கை சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பினர்கள் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.[7][8][9]

கைது

யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் கண்காணிப்பு, மற்றும் தண்டப்பணம் அறவிடும் பணிகளுக்காக 5 பேரடங்கிய பணியாளர்கள் மாநகரசபையால் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டது. 2021 ஏப்ரல் 7 இல் இவர்கள் தமது பணிகளை ஆரம்பித்தனர். இந்த சீருடைகள் விடுதலைப் புலிகளின் காவல்துறை சீருடைகளை ஒத்ததாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் முன் வைக்கப்பட்டன. இதனை அடுத்து, மணிவண்ணன் ஏப்ரல் 8 அன்று பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு வவுனியாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.[2] மணிவண்ணனின் கைது இலங்கையின் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் விமர்சனங்களைத் தூண்டியது. ஐக்கிய தேசியக் கட்சி இந்த நடவடிக்கையை கண்டித்து, குற்றச்சாட்டு தொடர்பாக தெளிவான ஆதாரங்களை முன்வைக்குமாறு அரசாங்கத்தை கோரியது. “யாழ்ப்பாண முதல்வரின் கைது கவலை அளிக்கிறது,” என இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்சு டுவீட் செய்திருந்தார்.[10][11] அடுத்த நாள் இரவு மணிவண்னனை காவல்துறையினர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர், சனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் வழக்கறிஞர்கள் மணிவண்ணன் சார்பில் முன்னிலையாகினர். நீதிமன்றம் மணிவண்ணனைப் பிணையில் செல்ல அனுமதித்தது.[10]

முதல்வர் பதவியில் இருந்து விலகல்

முதல்வர் மணிவண்ணன் 2022 திசம்பர் இறுதியில் 2023 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாநகர சபைக்கான பாதீட்டை சபையில் சமர்ப்பித்தார். ஈழமக்கள் சனநாயகக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதனால் பாதீடு 7 வாக்குகளால் தோல்வியடைந்ததை அடுத்து மணிவண்ணன் முதல்வர் பதவியில் இருந்து 2022 திசம்பர் 31 அன்று விலகினார்.[1][12]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Jaffna Mayor resigns after 2023 budget was defeated, தமிழ் கார்டியன், 3 சனவரி 2023
  2. 2.0 2.1 யார் இந்த மணிவண்ணன்?, தினகரன் வாரமஞ்சரி, 11 ஏப்ரல் 2021
  3. உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கம், தினகரன், 21 அக்டோபர் 2020
  4. முன்னணியின் பதவிகளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணி!, Tamil Ceylon, 15-08-2020
  5. யாழ் மாநகரசபையின் வரவு-செலவுத் திட்டம் தோல்வி, வீரகேசரி, 16-12-2020
  6. New Mayor for Jaffna, டெய்லி நியூஸ், திசம்பர் 31, 2020
  7. யாழ் மாநகர சபை மேயராக த.தே.ம.மு. உறுப்பினர் வி. மணிவண்ணன், தினகரன், 30 திசம்பர் 2020
  8. Former TNPF member Manivannan wins Jaffna mayoral elections with EPDP support, Tamil Guardian, 5 சனவரி 2021
  9. யாழ் மாநகர சபையின் புதிய மேயர் போட்டியில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் வெற்றி, IF தமிழ், 30 திசம்பர் 2020
  10. 10.0 10.1 Jaffna Mayor Visvalingam Manivannan Who was Arrested Under PTA for Allegedly Promoting Pro-LTTE symbols Is Granted Bail by Jaffna Magistrate பரணிடப்பட்டது 2021-04-19 at the வந்தவழி இயந்திரம், டி. பி. எஸ். ஜெயராஜ், 9 ஏப்ரல் 2021
  11. Need in New Year is to heal the divides, ஜெகான் பெரேரா, தி ஐலண்டு, 13 ஏப்ரல் 2021
  12. தோற்கடிக்கப்பட்ட பாதீடு, ஐபிசி தமிழ்
"https://tamilar.wiki/index.php?title=வி._மணிவண்ணன்&oldid=24226" இருந்து மீள்விக்கப்பட்டது