நம்பெருமாள் மும்மணிக்கோவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நம்பெருமாள் மும்மணிக்கோவை [1] என்னும் சிற்றிலக்கியம் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் பாடப்பட்டது. மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியம் பொதுவாக 30 பாடல்களைக் கொண்டிருக்கும். இந்த நூல் முழுநூலாகக் கிடைக்கப் பெறவில்லை. உரைநூல்களில் மேற்கோள் பாடல்களாச் சில பாடல்களே கிடைத்துள்ளன.

'நம்பெருமாள்' என்னும் தொடர் திருவரங்கப் பெருமானைக் குறிக்கும்.

மாறன் அலங்காரம் என்னும் நூல் இந்த மும்மணிக்கோவையின் ஆசிரியரான திருக்குருகைப் பெருமாள் கவிராரால் படைக்கப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ள அணிகளுக்கு மேற்கோள் பாடல்களையும் இவரே குறிப்பிட்டுள்ளார். இவை பழைய நூல்களிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை. அல்லது இவரே பாடிச் சேர்த்தவை. பாடல் கிடைக்காத அணிகளைக் காட்ட இந்த மும்மணிக்கோவை நூலைப் பாடிச் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

நம்பெருமாள் மும்மணிக்கோவை என்னும் நூல் இருந்ததை "ஒழிந்த அகலம் நம்பெருமாள் மும்மணிக்கோவை விருத்தியில் காண்க" என மாறனலங்கார உரையாசிரியர் குறிப்பிடுவதிலிருந்து அறிய முடிகிறது. [2]

பாடல்கள் - எடுத்துக்காட்டு

(பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டவை) வெண்பா

நாவலன் பின் போந்த நறு நீர்த் தாருவரங்கன்
காவலன் பொன் தாளாம் கமலத்தே - பாவலர் தம்
பா மாலை சூட்டாது அப் பாமாலையை எவனோ
தாம் மானிடர்க்கு அளிக்கும் சால்பு [3]

ஆசிரியப்பா

மலை முழை வைகலும் வைகினர் ஆகியும்
கனி கிழங்கு அடகு கண்டன மாந்தியும்
மூலர் ஆயும் முதல் கடவுள்
காவல் நீயே காத்தல் வேண்டுவமே [4]

கட்டளைக் கலித்துறை

பனிப் பிறைப் பற்று உளைக் கட்செவித் துத்திப் பணாடவி மேல்
குணித்த பொன் சிற்றடிச் சித்திரக் கார் குருகோன் வெற்பில்
துணித்து அழல் கண் களிற்றைக் கொடும் சீயம் துரந்து இருள் வாய்த்
தனித்து உறற்கு உய்த்து உணர்ந்தும் கதிர் வேலன் தாழ்குழலே [5]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 79. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. மாறனலங்காம் பாடல் 274, 275, 276, 281 உரை
  3. மாறனலங்காரம் மேற்கோள் பாடல் 60
  4. மாறனலங்காரம் மேற்கோள் பாடல் 62
  5. கிளவிமாலை என்னும் இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ள மூன்று பாடல்களில் ஒன்றான இதுவும் நம்பெருமாள் மும்மணிக்கோவைப் பாடல் எனக் கொற்றத்தக்கது - என்பது மு. அருணாசலம் கருத்து