தெ. வ. இராசரத்தினம்
நீதிபதி ரி. டபிள்யூ. இராசரத்தினம் T. W. Rajaratnam இலங்கை மீயுயர் நீதிமன்ற இளநிலை நீதிபதி பதவியில் 1972–1978 தேசியப் பட்டியல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் 1989–1994 |
|||
---|---|---|---|
முழுப்பெயர் | வனராஜா இராசரத்தினம் | ||
பிறப்பு | 21-12-1920 | ||
மறைவு | 15-01-1994 (அகவை 73) | ||
தேசியம் | இலங்கைத் தமிழர் | ||
அறியப்படுவது | அரசியல்வாதி | ||
கல்வி | கண்டி திரித்துவக் கல்லூரி | ||
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி | ||
பணி | வழக்கறிஞர் |
நீதிபதி தெல்லிப்பழை வனராஜா இராசரத்தினம் (Tellipalai Wanarajah Rajaratnam, 21 டிசம்பர் 1920 - 15 சனவரி 1994) இலங்கையின் ஒரு முன்னணித் தமிழ் வழக்கறிஞரும், நீதிபதியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பருவ நீதிமன்ற ஆணையராகவும், மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
ஆரம்ப வாழ்வு
இராசரத்தினம் யாழ்ப்பாண வழக்கறிஞர் டி. சி. இராசரத்தினம் என்பவருக்கு இரண்டாவது மகனாக 1920 டிசம்பர் 21 இல் பிறந்தார். தந்தை இலங்கை அமெரிக்க மிசனின் தலைவராகவும், மலாயன் இலங்கை புகையிலைக் கம்பனியின் தலைவராகவும் இருந்தவர். இராசரத்தினம் கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார். பாடசாலைப் படிப்பை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்தில் சட்டத்தின் சிறப்புப் பட்டம் பெற்றார்.
பணி
இராசரத்தினம் 1948 ஆம் ஆண்டில் வழக்குரைஞர் கழகத்தில் இணைந்தார். 1951 இல் இலண்டன் லிங்க்கன் இன் நீதிமன்றத்தில் சேர்ந்தார். ஐக்கிய இராச்சியத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய பின்னர் இலங்கை திரும்பி அங்கு பணியாற்றினார். மகாதேவன் சதாசிவம் வழக்கிலும், பிபிலை நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கிலும் பணியாற்றினார். இதன் பின்னர் நீதித் துறை சேவையில் இணைந்து, 1970 இல் பருவ நீதிமன்ற ஆணையராக நியமனம் பெற்றார். 1972 முதல் ஆறு ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியில் இருந்தார்.
அரசியலில்
1989 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றார்.
எழுதிய நூல்கள்
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இராசரத்தினம் A Manual of Industrial Law, Plantation Workers' Manual ஆகிய இரு நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். அத்துடன் இவர் எழுதிய A Judiciary in Crisis?: The Trial of Zulfikar Ali Bhutto என்ற நூலுக்கு பாக்கித்தானின் இலால்-இ-கைத்-இ-அசாம் விருது வழங்கப்பட்டது.