தருக்க நூல்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தருக்க நூல்கள் சமயக் கருத்துகளை உயர்ந்தது தாழ்ந்தது எனக் காட்டி வாதிடும் நூல்கள். திருஞான சம்பந்தர் சமணரை வென்றார். அப்பர் சமணராக இருந்து சைவராக மாறினார். இவர்களுக்குப் பின்னர் சமணமும் பௌத்தமும் ஒடுங்கிக் கிடந்தன. அக்காலத்தில் அவர்கள் பல தருக்க நூல்களைச் செய்தனர்.[1]

சிலப்பதிகாரம் சமண நூல். அதனோடு இணைந்துள்ள மணிமேகலை பௌத்த நூல். சிலப்பதிகாரம் முருகனையும் [2], திருமாலையும் [3], கொற்றவையையும் [4], கடல்-தெய்வத்தையும் [5] போற்றிப் பாடுகிறது. மணிமேகலை அக்காலத்தில் நிலவிவந்த ஆறு சமவாதிகளின் கருத்துக்களோடு மோதிப் பௌத்தத்தை உயர்த்திக் கூறுகிறது.[6] இவை கி. பி. 3 ஆம் நூற்றாண்டு நிலைமை. 7 ஆம் நூற்றாண்டில் தேவாரம், திவ்வியப் பிரபந்தம் முதலான நூல்கள் தோன்றிச் சைவத்தையும் வைணவத்தையும் தலைநிமிரச் செய்தன. இவற்றிற்குப் பின்னர், இந்தப் பின்னணியில் 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் தோன்றியவையே சமண, பௌத்த தருக்க நூல்கள்.

குண்டலகேசி ஒரு பௌத்த நூல். இதன் கருத்துகளை மறுத்துச் சமணர் செய்த நூல் நீலகேசி.

  • நீலகேசி – நீலநிறத் தலைமுடி
  • குண்டலகேசி – சுருட்டை நெளி முடி
  • பிங்கலகேசி – பொன்னிறத் தலைமுடி
  • அஞ்சனகேசி – மை போன்ற கருநிறத் தலைமுடி
  • காலகேசி (காளகேசி) – காளம் என்னும் கருமேகம் போன்ற கூந்தல்

இவை இந்தத் தலைமுடியை உடைய பெண்ணை உணர்த்துகின்றன.[7] யாப்பருங்கல விருத்தி உரையில் இந்த நூல்கள் கூறப்பட்டுள்ளன.

மேலும், வக்கினக் கிராந்தம் வக்காணித்தல் என்பது வாதம் செய்தல். இந்த நூல் வக்காணிக் கிரந்தம் என்னும் நூலாக இருக்கலாம். தத்துவ தரிசனம் என்னும் நூல்களும் யாப்பருங்கல விருத்தி உரையில் கூறப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. குன்றக்குரவை
  3. ஆய்ச்சியர் குரவை
  4. வேட்டுவ வரி
  5. கானல்வரி
  6. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
  7. அன்மொழித்தொகை.
"https://tamilar.wiki/index.php?title=தருக்க_நூல்கள்&oldid=17310" இருந்து மீள்விக்கப்பட்டது