டி. டி. குசலகுமாரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

டி. டி. குசலகுமாரி (T. D. Kusalakumari) எனப்படும் தஞ்சாவூர் தமயந்தி குசலகுமாரி (திசம்பர் 6, 1937 - மார்ச் 7, 2019) என்பவர் ஒரு நடனக்கலைஞரும், தமிழ்த் திரைப்பட நடிகையுமாவார்.[1] இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக ‘பேபி டி.டி. குசலாம்பாள்’ என்ற பெயரில் சுமார் நூறு படங்களிலும், பின் ஐம்பதுக்கும் அதிகமான படங்களில் நடனமாடி, பிரபலமான நடன நட்சத்திரமாகப் புகழ்பெற்று, டி. டி. குசலகுமாரி என்ற பெயரில் கதாநாயகியாக உயர்ந்தவர்.இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.[2]

வாழ்க்கை

குசலகுமாரி தஞ்சையில் பிறந்தவர். இயற்பெயர் குசலாம்பாள். இவரது தாயார் டி. எஸ். தமயந்தியும் ஒரு நடிகை. குசலகுமாரி மூன்று வயதில் பரதநாட்டியம் பயிலத் தொடங்கினார். ஐந்து வயதாக இருக்கும்போது இவரது குடும்பம் சென்னைக்குக் குடியேறியது. சென்னை வித்யோதயா தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது திரைப்பட வாய்ப்பு வந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படம் மகா மாயா. நடிகை டி. ஆர். ராஜகுமாரி குசலகுமாரியின் அத்தை ஆவார். குசலகுமாரி எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஜெமினி படநிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துக்கொண்டிருந்த சந்திரலேகா படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் டி.ஆர். ராஜகுமாரி. பள்ளி விடுமுறையில் அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு அத்தை ராஜகுமாரியுடன் செல்வார் குசலகுமாரி. சந்திரலேகா செட்டில் குசலகுமாரியைக் கண்ட தயாரிப்பாளர் எஸ். எஸ். வாசன் ஜெமினி பட நிறுவனம் ‘அவ்வையார்’ படத்தைத் தொடங்கியபோது குமாரி அவ்வையாராக நடிக்க குசலகுமாரியைத் தேர்வு செய்தார்.

பராசக்தி திரைப்படம் குசலகுமாரியைப் புகழடையச் செய்தது. அதனைத் தொடர்ந்து சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளியில் சிவாஜியைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஏழைப் பெண் ‘சொக்கி’யாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். கொஞ்சும் சலங்கை படத்தில் இடம்பெற்ற போட்டி நடனத்தில் குமாரி கமலாவுடன் இணைந்து இவர் ஆடிய ஆட்டம் பிரபலமானது.

குசலகுமாரி ஐம்பதுக்கும் அதிகமான படங்களில் நடனமாடி, பிரபலமான நடன நட்சத்திரமாகப் புகழ்பெற்ற பிறகே கதாநாயகியாக உயர்ந்தார். அதற்கும் முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்தார்.

கூண்டுக்கிளியைத் தொடந்து கள்வனின் காதலி படத்தில் சிவாஜிக்குத் தங்கையாக நடித்தார் குசலகுமாரி. அடுத்து வெளியான ‘நீதிபதி’ படத்தில் கே. ஆர். ராமசாமியின் தங்கையாக நடித்தார்.

தெலுங்கில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்காராவ் நடித்த ‘ராஜூபேடா’ படத்தில் அறிமுகமான குசலகுமாரியை அங்கே ‘குசலகுமாரிகாரு’ என்று சிறப்பாக ரசிகர்கள் அழைத்தார்கள். அந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற, தெலுங்கில் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

குசலகுமாரி மலையாளத்தில் பிரேம் நசீருடன் சோடியாக நடித்த ‘சீதா’ 200 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் ஆகும். அடுத்து இவர் நடித்த ‘மரியக்குட்டி’ குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றது.

பிற்கால வாழ்க்கை

குசலகுமாரி சென்னை நந்தனத்தில் தனது ஒரே தம்பி டி.டி. சேகருடன் வசித்துவந்தார். குசலகுமாரி தன் அத்தை டி. ஆர். ராஜகுமாரி போலவே திருமணம் செய்து கொள்ளவில்லை. குசலகுமாரிக்கு தமிழக அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ. 5,000 உதவித் தொகையை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

நடித்த சில படங்கள்

  • பராசக்தி படத்தின் துவக்கப்பாடலான 'வாழ்க வாழ்கவே… வளமாய் எமது திராவிட நாடு வாழ்க வாழ்க வாழ்கவே' என்ற பாடலுக்கு ஆடினார்.
  • ஜெமினி பட நிறுவனத்தின் ‘அவ்வையார்’ படத்தில் குமாரி அவ்வையாராக நடித்தார்.
  • சிவாஜியும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளியில் சிவாஜியைக் காதலிக்கும் ஏழைப் பெண் ‘சொக்கி’யாக நடித்தார்.[3]
  • கள்வனின் காதலி’ படத்தில் சிவாஜிக்குத் தங்கையாக நடித்தார்
  • கொஞ்சும் சலங்கை படத்தில் இடம்பெற்ற போட்டி நடனத்தில் குமாரி கமலாவுடன் இணைந்து இவர் ஆடினார்.
  • நீதிபதி படத்தில் கே.ஆர். ராமசாமியின் தங்கையாக நடித்தார்.
  • தெலுங்கில் என். டி. ராமராவ், இரங்காராவ் நடித்த ‘ராஜூபேடா’ படத்தில் அறிமுகமானார்.
  • மலையாளத்தில் பிரேம் நசீருக்கு இணையாக ‘சீதா’ என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்து மலையாளத்தில் நடித்த ‘மரியக்குட்டி குடியரசு விருதை வென்றது.

விருதுகள்

கலைமாமணி, கலைச்செல்வம் விருதுகள் பெற்றுள்ளார்.

இறப்பு

குசலகுமாரி வயது மூப்பின் காரணமாக 2019 மார்ச் 7 ஆம் நாள் சென்னையில் காலமானார்.[4]

மேற்கோள்கள்

  1. "பழம்பெரும் நடிகை குசலகுமாரிக்கு ஜெ. நிதியுதவி". tamil.oneindia.com. 15 அக்டோபர் 2015 இம் மூலத்தில் இருந்து 2016-04-04 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20160404195255/http://tamil.oneindia.com/news/2004/09/09/actress.html. பார்த்த நாள்: 3 ஏப்ரல் 2016. 
  2. "மறக்கப்பட்ட நடிகர்கள் 3: தென்னகம் கொண்டாடிய திறமை! - குசலகுமாரி". தி இந்து (தமிழ்). 11 மார்ச் 2016 இம் மூலத்தில் இருந்து 2016-04-04 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20160404195136/http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/article8339997.ece. பார்த்த நாள்: 3 ஏப்ரல் 2016. 
  3. "கூண்டுக்கிளி நாயகி!". தினமணி. 4 மார்ச் 2010. http://www.dinamani.com/cinema/article1104359.ece?service=print. பார்த்த நாள்: 3 ஏப்ரல் 2016. 
  4. "எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் இணைந்து நடித்த பழம்பெரும் நடிகை காலமானார்!". newstm.in இம் மூலத்தில் இருந்து 2019-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191213140749/https://www.newstm.in/news/tamilnadu/general/57585-actress-kusala-kumari-died-today.html/. பார்த்த நாள்: 13 டிசம்பர் 2019. 
"https://tamilar.wiki/index.php?title=டி._டி._குசலகுமாரி&oldid=22879" இருந்து மீள்விக்கப்பட்டது