சி. இராமசேசன்
சிவராஜ் இராமசேசன்' | |
---|---|
பிறப்பு | சென்னை | 10 அக்டோபர் 1923
இறப்பு | 29 திசம்பர் 2003 | (அகவை 80)
தேசியம் | இந்தியர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | இந்திய அறிவியல் கழகம் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் |
ஆய்வு நெறியாளர் | ச. வெ. இராமன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | இராஜாராமன் நித்யானந்தா |
விருதுகள் | பத்ம பூசண் |
சிவராஜ் இராமசேசன் (Sivaraj Ramseshan)(10 அக்டோபர் 1923 - 29 டிசம்பர் 2003) என்பவர் படிகவியல் துறையில் ஆற்றிய பணிக்காக அறியப்பட்ட இந்திய விஞ்ஞானி ஆவார். இராமசேசன் இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநராகப் பணியாற்றி பத்ம பூசண் விருது பெற்றவர். இராமசேஷன் இந்திய விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான சர். ச. வெ. இராமனின் மருமகன் மற்றும் சுப்ரமணியன் சந்திரசேகரின் உறவினர் ஆவார்.
ஆரம்பக்கால வாழ்க்கை
இராமசேசன் 1923ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் நாள், இந்திய அறிவியலாளர் செ. வெ. இராமனின் சகோதரியான சீதாலட்சுமியின் மகனாகச் சென்னையில் பிறந்தார். நாக்பூரில் பள்ளிப்படிப்பை முடித்து நாக்பூர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியினை முடித்தபின்னர் இவர், தனது மாமா ச. வெ. இராமனின் மேற்பார்வையில் ஆராய்ச்சி மாணவராக அறிவியலில் தனது பணியினைத் தொடங்கினார்.
ஆராய்ச்சிப் பணி
முனைவர் பட்டத்தை முடித்த இராமசேசன் இந்திய அறிவியல் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். இந்த நேரத்தில், ஊடுகதிர் படிகவியலில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு தேசிய விண்வெளி ஆய்வகங்களில் பொருள் அறிவியல் பிரிவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.[1] இராமசேசன் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
வகித்த பதவிகள்
1979-ல், இராமசேசன் இந்திய அறிவியல் கழகத்தின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1981-ல் இதன் இயக்குநரானார். இவர் 1981 முதல் 1984 வரை இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநராகவும், இந்திய அறிவியல் கழக தலைவராகவும் (1983-1985) பணியாற்றினார். மேலும் இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் (1984-2003) கௌரவப் பேராசிரியராகவும் இருந்தார்.
விருதுகள்
1966-ல், இராமசேசனுக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1980ல் வாஸ்விக் விருதும், 1985ல் இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின், ஆர்யபட்டா பதக்கமும் வழங்கப்பட்டது. இராமசேசன் இந்திய அரசின் பத்ம பூசண் விருதினையும் பெற்றவர் ஆவார்.[2]
வெளியீடுகள்
இராமசேசன், ச. வெ. இராமனின் வாழ்க்கை வரலாற்றை இராமனுடன் இணைந்து எழுதியுள்ளார். மேலும் இராமனின் கட்டுரைகளின் இரண்டு தொகுப்புகளையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.[2]
குடும்பம்
இவரது மனைவி கெளசல்யா, வி. எசு. சீனிவாச சாசுதிரியின் கொள்ளுப்பேத்தியாவார். கௌசல்யா இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
மறைவு
இவர் தனது 80வது வயதில் 29 டிசம்பர் 2003 அன்று இறந்தார்.[2][2]
மேற்கோள்கள்
- ↑ "Sivaraj Ramaseshan (1923-2003)". International Union of Crystallography 2 (3). http://www.iucr.org/news/newsletter/volume-12/number-3/sivaraj-ramaseshan-1923-2003.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Prof. Ramaseshan passes away". தி இந்து. 30 December 2003 இம் மூலத்தில் இருந்து 9 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040109123500/http://www.hindu.com/2003/12/30/stories/2003123001531200.htm.