கே. தவமணி தேவி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கே. தவமணி தேவி
Rajakumari1947.jpg
கே. தவமணி தேவிராஜகுமாரி திரைப்படத்தில்.
இறப்புபெப்ரவரி 10, 2001 (அகவை 76)
இராமேசுவரம், தமிழ்நாடு
வாழ்க்கைத்
துணை
கோடிலிங்க சாஸ்திரி (1962)

கே. தவமணி தேவி (K. Thavamani Devi, இறப்பு: பெப்ரவரி 10, 2001) இலங்கைத் திரைப்பட நடிகை. 1940களில் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணத்தில் இணுவிலில் பிறந்து கொழும்பில் வளர்ந்தவர். இவரின் தந்தை கார்த்திகேசு, ஒரு பிரபலமான வழக்கறிஞர். பெற்றோரின் விருப்பப்படி இவர் சிறு வயதிலேயே சென்னைக்குக் குடி பெயர்ந்தார்.[1]

திரைப்படங்களில்

கே. தவமணி தேவி எம். எஸ். சுப்புலட்சுமியுடன் சகுந்தலை (1940) திரைப்படத்தில்.

சென்னையில் இருக்கும் போது அவர் பரத நாட்டியம், கருநாடக இசை முறையாகப் பயின்றார். இதனால் இவருக்கு தமிழ்த் திரைப்படங்களில் பாடி நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1937 இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்தார். அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி.

இவரது முதல் படம் சதி அகல்யா மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1937 ஆம் ஆண்டில் வெளிவந்தது. முதல் படத்திலேயே அகலிகை வேடத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். படமும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இவர் நடித்து 1941 இல் வெளிவந்த வனமோகினியும் பெரும் வெற்றி பெற்றது. த ஜங்கிள் பிரின்செசு என்ற ஹாலிவுட் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் டொரத்தி லமூர் நடித்த வேடத்தில் தவமணி தேவி நடித்தார். மூலப் படத்தில் லமூர் உடுத்திய அவாய் நாட்டுப் பாணியிலான சாரத்தையே தவமணி தேவியும் உடுத்தி நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற 10 பாடல்களில் பெரும்பாலானவற்றை இவரே பாடியிருந்தார். இவரது பாடல் திறமையால் இவர் "சிங்களத்துக் குயில்" என அழைக்கப்பட்டார்.[1] 1941 இல் வெளியான வேதவதி (சீதா ஜனனம்) என்ற படத்தில் சீதை பாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார்.

1946 ஆம் ஆண்டில் வெளிவந்த வித்யாபதி இவரது மற்றொரு வெற்றிப் படம். இப்படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற வேடத்தில் தவமணி தேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தன.

கலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் 1947 இல் வெளிவந்த ராஜகுமாரி திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார்.[2] இது இவருக்கு பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்தது. தவமணி தேவிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில் நாயகனை மயக்கும் ராணி வேடம். இவரின் மெய்ப் பாதுகாவலராக சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பாதேவர் நடித்திருந்தார்.

பிற்காலம்

தவமணி தேவி 1962 ஆம் ஆண்டில் ராமேசுவரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சாஸ்திரி என்பவரைக் காதலித்து மணந்து கொண்டார். திருமணத்தின் பின்னர் திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இராமேசுவரத்தில் தனது இறுதிக் காலத்தைக் கழித்த அவர் தனது 76வது வயதில் 2001 பெப்ரவரி 10 இல் காலமானார்.

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Guy, Randor (28 மே 2011). "Blast from the Past — Vana Mohini 1941". த இந்து. http://www.thehindu.com/arts/cinema/article2057112.ece. பார்த்த நாள்: 27 திசம்பர் 2011. 
  2. "Thavamani Devi". Jointscene. Joint Scene Ltd. Archived from the original on 2011-03-03. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2011.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கே._தவமணி_தேவி&oldid=22613" இருந்து மீள்விக்கப்பட்டது