இந்து சாதனம்
இந்து சாதனம் (Hindu Organ) என்பது 1889 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் இதழ் ஆகும். இது தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளியிடப்பட்டதோடு இன்றும் சைவபரிபாலன சபையினரால் மாதமொரு முறை வெளியிடப்பட்டு வருகின்றது.
வரலாறு
இந்து சாதனம் பத்திரிகை செப்டம்பர் 11, 1889ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து சைவ பரிபாலன சபையினரால் அவர்களது சைவப்பிரகாச அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் 'டெமி' பிரமாணங் கொண்ட தாளிலே அகத்தில் தமிழும் புறத்தில் ஆங்கிலமும் (Hindu Organ) கொண்ட ஒரு கூட்டுப் பத்திரிகையாக மாதம் இருமுறை புதன்கிழமைகளில் வெளிவந்தது.
இந்த இரு மொழிப் பத்திரிகை ஜூலை 5, 1899 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலப் பத்திரிகை வாரம் ஒரு முறையும், ஜூலை 11, 1906 இலிருந்து தமிழ்ப் பத்திரிகை தனியாக மாதம் இரு முறையும் வெளிவர ஆரம்பித்தன. அதன் பின்னர் ஜூலை 10, 1913 இல் இருந்து ஆங்கிலப் பத்திரிகை மாதமிரு முறையும் தமிழில் வாரம் ஒரு முறையும் வெளிவந்தன.
ஆசிரியர்கள்
ஆரம்பத்தில் ஆங்கிலப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர் திருவனந்தபுரம் பிரதம நீதியரசராக முன்பு விளங்கியவரும் பிரபல கணிதவியலாளரும், ஆங்கிலம், வடமொழி மற்றும் தமிழ் ஆகியவற்றில் புலமை பெற்றவருமாகிய தா. செல்லப்பாபிள்ளை அவர்கள். இவர் 1891 இல் சுகவீனம் காரணமாக விலகவே வழக்கறிஞர் ஏ.கதிரவேலு மற்றும் அ.சபாபதி ஆகியோர் ஆங்கிலப் பதிப்புக்கு இணை-ஆசிரியர்களாயினர். ஜூலை 1892 முதல் அ.சபாபதி ஆசிரியரானார். அ.கதிரவேலு தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வந்தார். இவர்களைத் தொடர்ந்து ச.சிவகுருநாதர், தெ.அ.துரையப்பாபிள்ளை, எம்.எஸ்.இராஜரத்தினம், எம்.எஸ்.இளையதம்பி, வி.நாகலிங்கம், ஏ.வி.குலசிங்கம், த.முத்துசாமிப்பிள்ளை என்போர் ஆங்கிலப் பத்திரிகாசிரியர்களாக விளங்கியுள்ளனர்.
தமிழ்ப் பத்திரிகைக்கு நவம்பர் 25, 1896 வரையில் ஆசிரியராகவும் பொறுப்பாளராகவும் விளங்கியவர் ஆறுமுகநாவலரின் பெறாமகன் நல்லூர் த. கைலாசபிள்ளை. அவரை அடுத்து தமிழ்ப் பத்திரிகாசிரியர்களாகப் பெ. கார்த்திகேசபிள்ளை, எஸ்.கந்தையாபிள்ளை, கு.சிற்சபேசன், மு.மயில்வாகனம் என்போர் விளங்கியுள்ளனர்.
அ.சபாபதி, நம.சிவப்பிரகாசம் ஆகியோர் இரு பத்திரிகைகளுக்கும் ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர்.
சமயப் பிரசாரம்
இவ்விரு பத்திரிகைகளும் சைவ சமயம் சம்பந்தமான கட்டுரைகளையும் செய்திகளையும் கருத்துகளையும் தாங்கி வந்தன. சமய சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசாரஞ் செய்தன. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் முதலிய தேவாரம் பெற்ற திருத்தலங்களின் புனருத்தாரணத் திருப்பணிகளுக்கு இவை அளித்து வந்த ஊக்கம் குறிப்பிடத் தக்கது.
உசாத்துணை
- மார்ட்டின், ஜோன் எச்., Notes on Jaffna, American Ceylon Mission, தெல்லிப்பழை, 1923 (இரண்டாம் பதிப்பு: 2003)
- பூலோகசிங்கம், பொ., இந்துக் கலைக்களஞ்சியம் (முதற் தொகுதி), கொழும்பு, 1990
வெளி இணைப்புகள்
* இந்து சாதனம் வலைத்தளம் பரணிடப்பட்டது 2012-03-04 at the வந்தவழி இயந்திரம்