தெல்லிப்பழை
தெல்லிப்பழை
Tellippalai | |
---|---|
ஆள்கூறுகள்: 9°47′0″N 80°2′0″E / 9.78333°N 80.03333°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ. பிரிவு | வலிகாமம் வடக்கு |
தெல்லிப்பழை[1] (Tellippalai) என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இது யாழ்ப்பாண நகரில் இருந்து 15 கிமீ வடக்கே அமைந்துள்ளது. இது வலிகாமம் வடக்கில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் மாவிட்டபுரம், வீமன்காமம், வறுத்தலைவிளான் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் கட்டுவன், ஏழாலை ஆகிய ஊர்களும், தெற்கில் மல்லாகம், ஏழாலை என்னும் ஊர்களும், மேற்கில் அளவெட்டி, பன்னாலை என்பனவும் உள்ளன. யாழ்ப்பாண நகரில் இருந்து தொடங்கும் காங்கேசன்துறை வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தெல்லிப்பழை நகரம் அம்பனை, கொல்லங்கலட்டி, வீமன்காமம், வறுத்தலைவிளான், மாத்தனை போன்ற கிராமங்களின் நிர்வாக, வணிக மையமாக மாறியது. தெல்லிப்பழை தொடருந்து நிலையம் தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து கிழக்கே ஏறத்தாழ 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தொண்டைமான் மன்னன் காலத்தில், தெல்லிப்பழையில் சம்பக மாப்பாணன், சந்திரசேகர மாப்மாணன், கனகராயன் ஆகிய குடும்பப் பெயர்களைக் கொண்ட மூன்று குடும்பங்கள் குடியேறியதாகத் தெரிகிறது.[2] இலங்கைத் தமிழர் அரசியலில் நீண்டகாலம் செல்வாக்குச் செலுத்தியவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவியவருமான சா. ஜே. வே. செல்வநாயகம் இவ்வூரைச் சேர்ந்தவர். இவ்வூர் அடங்கியிருந்த காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் நீண்ட காலம் இருந்தவர்.
யாழ் மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் துர்க்கை அம்மன் கோவில் இவ்வூரில் அமைந்துள்ளது.
தெல்லிப்பழையைச் சேர்ந்த குறிப்பிடத்தக்கவர்கள்
- சா. ஜே. வே. செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர்
- சு. வித்தியானந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர்
- தெ. வ. இராசரத்தினம், முன்னாள் நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்
- ஐ. பி. துரைரத்தினம், யூனியன் கல்லூரியின் முன்னாள் அதிபர் (1935-1964)[3]
- தெ. அ. துரையப்பாபிள்ளை, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் நிறுவனர், புலவர்
- தெ. து. ஜயரத்தினம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் அதிபர்
- பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி[4][5]
- சி. சிவமகராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ தெல்லிப்பழை பெயர்க் காரணம், தமிழ்நெட் - (ஆங்கில மொழியில்)
- ↑ யாழ்ப்பாணச் சரித்திரம், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1912
- ↑ "the Memoirs of I.P.Thurairatnam". Tamilnation.org. பார்க்கப்பட்ட நாள் April 2, 2015.
- ↑ "Thangamma Appakutty". Valai Tamil. பார்க்கப்பட்ட நாள் 6 April 2015.
- ↑ "Profile: Dr Thangamma Appakutti". Daily News Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 6 April 2015.