ஆண்டாள் (பாடகி)
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஆண்டாள் (பாடகி) |
---|---|
பிறந்ததிகதி | 19 ஜூன் 1939 |
இறப்பு | 2 ஜூலை 2016 |
ஆண்டாள் (பிறப்பு: 19 ஜூன் 1939 - இறப்பு 2 ஜூலை 2016) ஓர் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகியும், இசை ஆசிரியையுமாவார்.
இளமைக்காலம்
இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி (பழைய பெயர் குருகூர்) என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் அழகியசிங்கம் ஐயங்கார். தந்தை வசதி படைத்தவர். இசைப்பிரியர் என்பதால் வீட்டில் கிராமபோன் கருவியும் இசைத்தட்டுகளும் வைத்திருந்தார். அந்த இசைத்தட்டுப் பாடல்களை கேட்டுக்கேட்டு ஆண்டாள் பாடுவதில் நல்ல பயிற்சி பெற்றார். இதைப் பார்த்த தகப்பனார் இவரை ஓர் உள்ளூர் இசை ஆசிரியரிடம் பயிற்சி பெற அனுப்பினார். அவர் இவருக்கு கீர்த்தனைகளைப் பாடக் கற்றுக் கொடுத்தார். பின்னர் சென்னையில் என். சி. வசந்தகோகிலம் அவர்களிடம் இசைப்பயிற்சி பெற்றார்.
பின்னணிப் பாடகி
டி. கே. எஸ். நாடகக் குழு, ஆர். எஸ். மனோகரின் நேஷனல் தியேட்டர்ஸ், சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ், ஆகிய நாடகக் கம்பெனிகளினதும், கோமல் சுவாமிநாதன், டி. எஸ். துரைராஜ், வி. கே. ராமசாமி, எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோரின் நாடகக் குழுக்களினதும் நாடகங்களில் பின்னணி பாடி வந்தார். டி. கே. எஸ். நாடகக் கம்பெனியாரின் கள்வனின் காதலி நாடகத்தில் இவர் ஏ. எம். ராஜாவுடன் சேர்ந்து பாடிய "வானம்பாடிகள் போலே" என்ற பாடல் இசைத்தட்டாக வெளிவந்து இலங்கை வானொலியில் அதிகம் ஒலிபரப்பாகி பிரபலமடைந்தது. சேவா ஸ்டேஜ் கம்பெனி பாரதியாரின் குயில்பாட்டை நாடகமாக்கியபோது அதில் இவரும் மகாராஜபுரம் சந்தானம் இருவரும் பின்னணி பாடினார்கள். 1954 ஆம் ஆண்டு வெளியான பொன்வயல் திரைப்படத்தில் "வாங்க வாங்க மாப்பிள்ளே" என்ற பாடலைப் பாடினார். அதன்பின் 1954 இல் வெளியான நல்லகாலம் , 1956 இல் வெளியான குடும்பவிளக்கு, 1959 இல் வெளியான நாலுவேலி நிலம் ஆகிய படங்களில் பின்னணி பாடியுள்ளார்.
சொந்த வாழ்க்கை
1950 களில் இவர் பிரபலமடைந்து வந்த காலத்தில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. ஆனால் இவரது மணவாழ்க்கை சுமுகமாக அமையவில்லை. இதனால் பாடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கணவனிடமிருந்து பிரிந்து வாழ்ந்தபோதும் ஒதுங்கியே இருந்தார். இவரது மகள் கமலா, மகன் ராஜ்பாலா ஆகியோருக்கு நல்ல இசைப்பயிற்சி அளித்து அவர்களை இசைத்துறையில் ஈடுபடுத்தினார். இசை பயிலும் மாணவர்களுக்கு இசை கற்றுக்கொடுத்து வந்தார்.
இறப்பு
ஆண்டாள் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2-ஆம் நாள் சென்னையில் காலமானார்.
உசாத்துணை
- வாமனன் (டிசம்பர் 2014). திரை இசைக் களஞ்சியம் (முதல் ed.). சென்னை: மணிவாசகர் பதிப்பகம் 044 25361039. pp. 762–765.
{{cite book}}
: Check date values in:|publication-date=
(help) - ஜி. நீலமேகம் (டிசம்பர் 2014). திரைக்களஞ்சியம் – தொகுதி 1 (முதல் ed.). சென்னை: மணிவாசகர் பதிப்பகம் 044 25361039. pp. 74, 77, 104, 174–175.
{{cite book}}
: Check date values in:|publication-date=
(help)
வெளி இணைப்புகள்
- யூடியூபில் வாழ்வின் கடமையை - நல்லகாலம் படத்தில் ஆண்டாள் பாடிய பாடல்
- யூடியூபில் வானம்பாடிகள் போலே - கள்வனின் காதலி நாடகப் பாடல்