டி. எஸ். துரைராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
டி. எஸ். துரைராஜ்
TSDurairaj-1951.jpg
பிறப்பு(1910-12-31)31 திசம்பர் 1910
தஞ்சாவூர், சென்னை மாகாணம், இந்தியா
இறப்புசூன் 2, 1986(1986-06-02) (அகவை 75)
சென்னை, தமிழ்நாடு
பணிநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1940-1962

டி. எஸ். துரைராஜ் (T. S. Durairaj, 31 திசம்பர் 1910 - 2 சூன் 1986) 1940 - 1960 காலகட்டத்தில் நடித்த ஒரு மேடைநாடக, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.[1][2]. தமிழ்த் திரைப்படங்களில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவைக் கூட்டாளியாக பல படங்களில் நடித்தார்[3].

வாழ்க்கைச் சுருக்கம்

டி. எஸ். துரைராஜ் தஞ்சாவூரில் ராஜா நாயுடு, நாகலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர்.[4] மூத்தவர்கள் இருவரும் பெண்கள். தந்தை உள்ளூரில் ஒரு எழுத்தராகப் பணியாற்றியவர். மூத்த சகோதரி மதுரையில் திருமணம் புரிந்ததை அடுத்து இவரும் தனது ஏழாவது வயதில் தாயாருடன் மதுரைக்குக் குடிபெயர்ந்தார்.[4]

நாடகங்களில்

மதுரையில் அப்போது சங்கரதாசு சுவாமிகள் தனது நாடகக் கம்பனியை ஆரம்பித்து நடத்தி வந்தார். பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல் இருந்த துரைராஜ் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார். இவருக்கு நிறையப் பாடும் சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டன. கோமாளி, மற்றும் பெண்கள் வேடங்களிலும் நடித்து வந்தார்.

துரைராஜின் இரண்டாவது சகோதரிக்கு இலங்கையில் திருமணம் நடந்தது. சகோதரியுடன் இலங்கை சென்ற துரைராஜ் அங்கு சிங்கள நாடகக் கம்பனி ஒன்றில் சேர்ந்து நாடகங்கள் நடித்தார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர் மதுரை திரும்பி மீண்டும் சங்கரதாசு சுவாமிகளின் கம்பனியில் இணைந்து நடித்தார்.[4] சில ஆண்டுகளில் அவர் அக்கம்பனியில் இருந்து விலகி சொந்தமாக திருப்பூரில் "மதுரை ஒரிஜினல் மணிவாசக பால சபா" என்ற நாடகக் கம்பனியைத் தொடங்கினார். கோவை, திருப்பூர், கேரளம் ஆகிய பகுதிகளில் இக்கம்பனிக்கு நல்ல வரவேற்பிருந்தது. ஆனாலும் நான்கு ஆண்டுகளில் கம்பனி பெரும் நட்டத்துக்குள்ளாகி மூடப்பட்டது. பின்னர் அவர் வேலுக்குட்டி நாயர் என்பவரின் மலையாள நாடகக் கம்பனியில் சேர்ந்து நல்ல புகழ் பெற்றார்.[4] இவர் பிற்காலத்தில் சொந்தமாகப் பட நிறுவனம் தொடங்கி பிழைக்கும் வழி, பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958), ஆயிரங்காலத்துப் பயிர் (1963) போன்ற படங்களைத் தயாரித்தார். இதில் ஆயிரங்காலத்துப் பயிர், பானை பிடித்தவள் பாக்கியசாலி படங்களை இவரே இயக்கினார். பானை பிடித்தவள் பாக்கியசாலி படத்தில் சாவித்திரியின் அண்ணனாக நடித்தார். இப்படத்தில் இவர் மணமாகப்போகும் தன் தங்கை சாவித்திரிக்கு அறிவுரை கூறுவதுபோல் பாடுவது போல் அமைந்த புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே என்ற பாடல் இன்றும் புகழ் பெற்றதாக உள்ளது.[5]

நடித்த திரைப்படங்கள்

  1. திருநீலகண்டர் (1939)
  2. போலி சாமியார் ‎(1939)
  3. சகுந்தலை (1940)
  4. நவீன விக்ரமாதித்தன் ‎(1940)
  5. சாவித்திரி (1941)
  6. மதனகாமராஜன்‎ (1941)
  7. திருவள்ளுவர் ‎(1941)
  8. சதி சுகன்யா (1942)
  9. மாயஜோதி ‎(1942)
  10. கங்காவதார் ‎(1942)
  11. சிவலிங்க சாட்சி‎ (1942)
  12. தமிழறியும் பெருமாள் (1942)‎
  13. காரைக்கால் அம்மையார் (1943)
  14. உத்தமி ‎(1943)
  15. மீரா (1945)
  16. சகடயோகம் ‎(1946)
  17. தெய்வ நீதி ‎(1947)
  18. கடகம் (1947)
  19. பொன்னருவி ‎(1947)
  20. துளசி ஜலந்தர் (1947)
  21. தேவதாசி (1948)
  22. காமவல்லி (1948)‎
  23. பிழைக்கும் வழி ‎(1948)
  24. மங்கையர்க்கரசி (1949)
  25. ரத்தினகுமார் ‎(1949)
  26. ஏழை படும் பாடு ‎‎(1950)
  27. கலாவதி ‎(1951)
  28. மணமகள்‎ ‎(1951)
  29. காஞ்சனா ‎(1952)
  30. குமாரி (1952)
  31. அம்மா ‎(1952)
  32. ஜெனோவா ‎(1953)
  33. பணக்காரி (1953)
  34. திரும்பிப்பார் ‎(1953)
  35. வள்ளியின் செல்வன் (1955) ‎
  36. மாமன் மகள் ‎(1955)
  37. காலம் மாறிப்போச்சு ‎(1956)
  38. குடும்பவிளக்கு ‎(1956)
  39. மூன்று பெண்கள் ‎(1956)
  40. மணாளனே மங்கையின் பாக்கியம் (1957)‎
  41. கன்னியின் சபதம் ‎(1958)
  42. பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958)
  43. மரகதம் (1959)
  44. அருமை மகள் அபிராமி (1959) ‎
  45. நல்ல தீர்ப்பு (1959)
  46. நிச்சய தாம்பூலம் ‎(1962)

மேற்கோள்கள்

  1. "Rambayin Kaathal 1939". தி இந்து. 11 April 2008 இம் மூலத்தில் இருந்து 13 April 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080413002502/http://www.hindu.com/cp/2008/04/11/stories/2008041150511600.htm. பார்த்த நாள்: 2009-02-14. 
  2. "தி இந்து நாளிதழ்". தி இந்து. Archived from the original on 2013-09-09. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2013.
  3. "பாய்ஸ் நாடகக் குழுவில் நடிப்பு". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2013.
  4. 4.0 4.1 4.2 4.3 "காமெடியன் டி. எஸ். துரைராஜ்". பேசும் படம். நவம்பர் 1951. 
  5. ஆர்.சி.ஜெயந்தன் (2 செப்டம்பர் 2016). "மறக்கப்பட்ட நடிகர்கள் 10: டி.எஸ்.துரைராஜ் - நண்பனின் பாதையில் நகைச்சுவை விருந்து!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2016.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=டி._எஸ்._துரைராஜ்&oldid=21036" இருந்து மீள்விக்கப்பட்டது