குறுந்தொகை

குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.


-செம்புலப் பெயனீரார்.

(குறுந்தொகை - பா.40 குறிஞ்சி)

தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. இந்நூல் எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்துச் சுட்டும் பழம்பாடலில் "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுகிறது. இந்நூல் குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக அதாவது 235 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புகளை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ எனினும் தொகுப்பித்தவர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சங்க இலக்கிய பாடல்

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்துங் கலியோடு அகம் புறம் என்
றித்திறத்த எட்டுத் தொகை

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி- மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து[1]

பாடியோர்

இத்தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர்.[2] இந்நூலில் அமைந்துள்ள 10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அதில் அமைந்த சிறப்புத் தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். அவர்களில் 'அணிலாடு முன்றிலார்' (குறுந்.பா.41), 'செம்புலப்பெயல் நீரார்' (குறுந். பா.40), 'குப்பைக் கோழியார்'(குறுந்.பா.305), 'காக்கைப் பாடினியார்'(குறுந்.பா.210), 'விட்ட குதிரையார்'(குறுந்.பா.74) 'மீனெறி துாண்டிலார்'(குறுந்.பா.54) ' ஓரேருழவனார்' (குறுந்.பா.131.), 'காலெறி கடிகையார்' (குறுந்.பா.267),கல்பொரு சிறுநுரையார்' (குறுந்.பா.290), முதலானோர் உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

நூலமைப்பு

குறுந்தொகை நான்கு முதல் எட்டு வரையான (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூல் அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுகின்ற போதும் முதற்பொருள் மற்றும் கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தந்துள்ளது. இதில் வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளைச் சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.

குறுந்தொகை பழைய உரைகள்

இந்த நூலின் முதல் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை எழுதாத அடுத்த 20 பாடல்களுக்கு ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார்.[3] நச்சினார்க்கினியர் தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் (அகத்திணையியல் நூற்பா 46) பேராசிரியரின் குறுந்தொகை உரையை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை.

குறுந்தொகை காட்டும் செய்திகள்

குறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி, தருமி என்ற புலவருக்குப் "பொற்கிழி" வழங்கச் செய்தது சிறந்த வரலாற்றுச் சான்றாகும்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே. (குறுந்.பா.3.)

என்ற பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது.
"வினையே ஆடவர்க்கு உயிரே"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது.

பதிப்பு வரலாறு

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன், தான் இயற்றிய புத்துரையுடன் 1915-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்."[4]

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்


அடிக்குறிப்புகள்

  1. மது.ச. விமலானந்தம் (2020) (in தமிழ்). தமிழ் இலக்கிய வரலாறு. தி-நகர், சென்னை.: முல்லை நிலையம். பக். பக்க எண். 39. 
  2. உவமைகளால் பெயர்பெற்ற புலவர்கள். தினமணி நாளிதழ். 11 அகத்து 2016. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2016/aug/11/உவமைகளால்-பெயர்பெற்ற-புலவர்கள்-3299.html. 
  3. இதனை விளக்கும் பழம்பாடல்
    நல் அறிவுடைய தொல் பேராசான்
    கல்வியும் காட்சியும் காசினி அறிய
    பொருள் தெரி குறுந்தொகை இருபது பாட்டிற்கு
    இது பொருள் என்று அவன் எழுதாது ஒழிய
    இது பொருள் என்று அதற்கு ஏற்ப உரைத்ததும்-
  4. சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 33
"https://tamilar.wiki/index.php?title=குறுந்தொகை&oldid=9825" இருந்து மீள்விக்கப்பட்டது