கல்யாணி மேனன்

கல்யாணி மேனன் (Kalyani Menon) (23 ஜூன் 1941 - 2 ஆகஸ்ட் 2021) ஓர் இந்திய பின்னணிப் பாடகி ஆவார். இவர் இந்தியத் திரைப்படத் துறையில் பணியாற்றினார். 1970களில் பாரம்பரிய பாடகியாக தொடங்கிய பிறகு, கல்யாணி திரைப்படத் துறையில் ஒரு பாடகியாக தன்னை நிறுவிக் கொண்டார். 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் ஏ.ஆர்.ரகுமானுடன் விரிவாகப் பல படங்களில் பணியாற்றினார். 2010இல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. மேலும் கேரள சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றுள்ளார்.[1]

கல்யாணி மேனன்
கல்யாணி மேனன்.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1941-06-23)23 சூன் 1941
எர்ணாகுளம் மாவட்டம்,கேரளம், பிரித்தானியாவின் இந்தியா
இறப்பு2 ஆகஸ்ட் 2021
(வயது 80)
இசை வடிவங்கள்பின்னணிப் பாடுதல்
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1977–2021

தொழில்

கல்யாணி மேனன், எம்.ஆர்.சிவராமன் நாயரிடமிருந்து பாரம்பரிய இசையைக் கற்றுக் கொண்டு பாரம்பரியப் பாடகராக முத்திரை பதித்தார். படிப்படியாக திரைப்படங்களுக்குப் பாட ஆரம்பித்தார். இராமு கரியத்தின் இயக்கத்தில் இசையமைப்பாளர் பாபுராசுவின் இசையில் 1977இல் வெளிவந்த திவீபு என்ற படத்தில் இடம்பெற்ற "கண்ணீரின் மழையத்தும்" என்ற இவரது ஆரம்பகால மலையாளத் திரைப்படப் பாடல் வெகுவாக பாராட்டைப் பெற்றது.[2] இவர் 1977ஆம் ஆண்டில் சென்னையில் பணி செய்யத் தொடங்கினார். வள்ளத்தோள் நாராயண மேனனின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நடனமாடப்பட்ட தனஞ்செயனின் மக்தலானா மரியம் என்ற மலையாள நடன நாடகத்தில் வள்ளத்தோளின் வரிகளை இவர் பாடினார். தமிழில் இவரது முதல் திரைப்படப் பாடல் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கே. பாலாஜியின் நல்லதொரு குடும்பம் (1979) படத்தில் இடம்பெற்ற "செவ்வானமே பொன்மேகமே" என்ற பாடலாக இருந்தது. பின்னர், சுஜாதா (1980) படத்தில் "நீ வருவாயென" என்ற பாடலையும், சவால் (1981) படத்தில் ம. சு. விசுவநாதன் இசையில் "தண்ணிய போட்டா சந்தோசம் பிறக்கும்" போன்ற பாடல்களும் ஒரு பெரிய வெற்றி பெற்றது.

பிரபல தயாரிப்பாளர் கே. பாலாஜி 1980களின் ஆரம்பத்தில் தனது சில படங்களில் இவருக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்தார். வாழ்வே மாயம் (1982) படத்தில் "ஏ ராஜாவே உன் ராஜாத்தி" என்ற பாடலையும், விதி (1984) படத்தில் "விதி வரைந்த பாதை வழியே" (1984) என்ற பாடலையும் பாடினார். "சுப முகூர்த்தம்" (1983) படத்தில் இடம்பெற்ற "நான் இரவில் எழுதும் கவிதை முழுதும்", திரைக்கு வராத "மூக்குத்தி மீன்கள்" என்ற படத்தில் இடம்பெற்ற "தேரில் வந்தாள் தேவதை" போன்ற பிற பிரபலமான பாடல்களையும் கல்யாணி பாடியுள்ளார்.[3]

திரைப்படத் துறையிலிருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்ட இவர், 1990கள், 2000களின் முற்பகுதியில் ஆர். ஏ.ஆர்.ரகுமானுக்காக பல இசைத் தொகுப்புகளில் பணியாற்றினார். புதிய மன்னர்கள் (1993) படத்தில் இடம்பெற்ற "வாடி சாத்துக்குடி" உள்ளிட்ட பாடல்களை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து இரசினிகாந்து நடிப்பில் வெளிவந்த முத்து (1995) படத்தில் இடம்பெற்ற "குலுவாலிலே" என்ற பாடினார்.[3] பின்னர் அலைபாயுதே (2000) படத்தின் தலைப்புப் பாடல், பார்த்தாலே பரவசம் (2001), "தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்ட கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா (2010) படத்தின் மூன்று பதிப்புகளுக்காகவும் பணியாற்றினார். இந்திய சுதந்திரத்தின் 50வது ஆண்டு பொன்விழாவைக் குறிக்கும் விதத்தில் ஏ. ஆர். ரகுமானால் வெளியிடப்பட்ட வந்தே மாதரம் என்ற பாடல் தொகுப்பிலும் இவர் இடம் பெற்றார். மேலும் பாடகர் ஸ்ரீநிவாசின் உசேலே என்ற படல் தொகுப்பில் இடம்பெற்ற கோபாலகிருஷ்ண பாரதியின் "எப்போ வருவாரோ" என்ற பாடலை பாடகர் பி. உன்னிகிருஷ்ணனுடன் இணைந்து பாடினர்.[3]

குடும்பம்

எர்ணாகுளத்தில் பாலகிருஷ்ண மேனன் - கரக்கட் ராஜம் ஆகியோருக்கு ஒரே மகளாக கல்யாணி மேனன் பிறந்தார். இவரது கணவர் கே. கே. மேனன், இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தார். அவர் 37 வயதில் மாரடைப்பால் இறந்தார். இந்தியத் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் பணியாற்றும் ராஜீவ் மேனன், இந்திய ரயில்வே சேவையில் அதிகாரியாக பணியாற்றி வரும் கருண் மேனன் ஆகியோர் இவரது மகன்கள் ஆவர். [4] [5] ராஜிவ் இசை இயக்குனர் ஏ. ஆர். ரகுமான், இயக்குனர் மணிரத்னம் ஆகியோருடன் தொழில் ரீதியாக பணியாற்றுகிறார்.[6] ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000) படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனிடம் முதல் இசைத் தட்டைப் பெற மரியாதை நிமித்தமாக கல்யாணி மேனன் அழைக்கப்பட்டார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயின் இசை பயிற்றுவிப்பாளராக தோன்றினார்.[3]

இறப்பு

கல்யாணி மேனன் 2 ஆகஸ்ட் 2021 அன்று தனது 80 வயதில் இறந்தார்.[7] [8]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கல்யாணி_மேனன்&oldid=8803" இருந்து மீள்விக்கப்பட்டது