வள்ளுவரின் மெய்யியல் (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வள்ளுவரின் மெய்யியல் என்னும் ஆய்வு நூல் திருவள்ளுவர் பகுத்தறிவின் துணைகொண்டு உயிர் மற்றும் இயலுலகின் இயல்புகளை ஆய்ந்து எடுத்துரைக்கும் முடிவுகளைத் தொகுத்துரைக்கும் பாணியில் எழுதப்பட்டு, 1986இல் வெளியிடப்பட்ட தத்துவ நூல் ஆகும். இதன் ஆசிரியர் கு. ச. ஆனந்தன்.[1]

நூலின் மையக் கருத்து

இந்த ஆய்வு நூலில் ஆசிரியர் கு. ச. ஆனந்தன் வைதீகம், அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம், பக்தி இயக்கம், புத்தம், சமணம், சைவம், வைணவம், உலகாய்தம், சாங்கியம், யோகம், நையாயிகம், வைசீடிகம், மீமாம்சை போன்ற அனைத்து மெய்யியல் மற்றும் சமயவியல் கொள்கைகளுக்கெல்லாம் அப்பால் நின்று தனித்தன்மையுடன் எழுதப்பட்டதே திருக்குறள் என்று விளக்குகின்றார். அவர்தம் கருத்துப்படி,

திருவள்ளுவ மெய்யியல் சராசரி மனிதன் பின்பற்ற முடியாத வெறும் கனவார்வ கருத்துகளைக் கொண்டதல்ல. இறைக் கொள்கையை மையமாகக் கொண்ட மெய்ப்பொருள் வழியுமல்ல. பகுத்தறிவுக்குப் புறம்பான சமய முறையுமல்ல. மனிதன் படிப்படியாக அகநிலை வளர்ச்சியைப் பெற்று இவ்வுலகிலேயே இடையறாத இன்பத்தை அடைவதற்கு வழிகூறும் நடைமுறை மெய்யியல் (pragmatic philosophy) (பக். xviii-xix)

தனித்தன்மை வாய்ந்த மெய்யியல்

திருவள்ளுவரின் மெய்யியல் தனித்தன்மை வாய்ந்தது என்று கூறுகின்ற நூலாசிரியர், அதனைக் கீழ்வருமாறு விளக்குகிறார்:

திருவள்ளுவரின் தனித்தன்மை வாய்ந்த மெய்யியல், முதலில் சமண மெய்யியலாகவும், அடுத்து புத்த மெய்யியலாகவும், தொடர்ந்து வைதீக சமயங்களின் வீடுபேறுகளைக் காட்டக் கூடிய மெய்ப் பொருள் இயல்களாகவும் கொள்ளப்பட்டு, சைவர்களின் - சித்தாந்திகளின் - வைணவர்களின் வீடுபேறையும், கடவுள் கொள்கையையும் விளக்குகிற புகலிடமாகிவிட்டது; தற்போதைய நிலையில் அனைத்துச் சமயத்தவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் மாறிவிட்டது.

மதமும், மதச்சார்புக் கொள்கைகளுமற்ற ஒரு நடைமுறை மெய்யியலைத் திருவள்ளுவர் பரிந்துரைத்து, பல மறுமலர்ச்சிக் கருத்துக்களின் வாயிலாகப் புதியதொரு "சமுதாய மாற்றத்தை" (Social Revolution) உருவாக்க முனைந்தார். ஆனால் அந்தக் குறிக்கோள் இன்றுவரை நிறைவேறவேயில்லை (பக். xx)

நூல் பிரிவுகள்

வள்ளுவரின் மெய்யியல் என்னும் ஆய்வு நூலில் கீழ்வரும் உள்ளடக்கம் உள்ளது:

முதல் பகுதி
சமய மெய்யியல்

1) சங்கத் தமிழகத்தில் சமயமும், மெய்யியலும்
2) இடைக்காலத் தமிழகத்தின் சமயமும், மெய்யியலும்

இரண்டாம் பகுதி
திருவள்ளுவ மெய்யியல்

3) மரபுத் தொடர்களே! கருத்துத் தொடர்களல்ல
4) குறள் கூறாதவை
5) நில்லாதனவும் நிலையினவும்
6) உடம்பும் உயிரும்
7) துன்பமும் துறவும்
8) பற்றற்றான் பற்றும் பெரு பயனும்
9) மெய்யுணர்தலும் அவா அறுத்தலும்
10) முதற் குறள்
11) சாங்கியமும், ஆதிபகவனும்
12) "மன்னுயிரெல்லாம் தொழும்"
13) மூலவர்களும் முன்னோடிகளும்
14) குறள் கூறும் ஊழ் (விதியன்று)

நூலின் இறுதிப் பக்கங்களில் நூலின் சாரத்தை "திருவள்ளுவ மெய்யியல் சூத்திரங்கள்" என்று ஆசிரியர் சுருக்கமாக வழங்குகின்றார். தொடர்ந்து, அருஞ்சொல் அகரவரிசையும் கருவி நூற்பட்டியும் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு

  1. கு.ச. ஆனந்தன், வள்ளுவரின் மெய்யியல், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 1986, பக்கங்கள்: 294.