கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்
சந்திரப்பிரப பகவான் ஜினாலயம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சமணர் கோயிலாகும். சோழ நாட்டில் கரந்தட்டாங்குடி, மன்னார்குடி, தீபங்குடி ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.[1][2] இங்கு சுவேதாம்பரர் சமணக்கோயில் என்ற மற்றொரு சமணக்கோயிலும் உள்ளது.
கோயில் அமைப்பு
கருவறை, முகமண்டபம், மகாமண்டபம் ஆகிய அங்கங்களை இக்கோயில் கொண்டுள்ளது. கோபுரம் மொட்டை கோபுரமாகவே உள்ளது. கருவறை வாயிலின் இருபுறமும் சாசன தேவர்கள் காவலில் உள்ளனர். முகமண்டபத்தின் வெளிப்புறத்தில் வாயிற்காவலர்களின் சுதைச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. பிரகாரத்தில் மகாசாஸ்தாவின் தனிச்சன்னதி உள்ளது.[3]
மூலவர்
கோயிலின் மூலவராக சந்திரப்பிரபர் உள்ளார். அவர் சமண சமயத்தின் எட்டாம் தீர்த்தங்கரர் ஆவார். சந்திரப்பிரப பகவான் வழிபாடு தமிழகத்தில் பல இடங்களில் காணப்படுகிறது. திருநறுங்குன்றத்தில் உள்ள சந்திரப்பிரபர் கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும்.
வழிபாடு
இக்கோயிலின் கட்டிடப்பணிகள் 1903ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. பஞ்சகல்யாணப்பெருவிழா 1905ஆம் ஆண்டு நடைபெற்றது. மூலவருக்கு தினமும் காலை மாலை வேளைகளில் பூசை நடைபெறுகிறது. சாசன யட்சன் பிரம்ம தேவர் வழிபாடும், சாசன தேவதை ஜுவாலாமாலினி அம்மன் வழிபாடும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.[4]
விழா
மார்கழி மாதத்தில் நாள்தோறும் விளக்கு ஏற்றப்படுகிறது. அவ்விளக்கு முக்குடை பரிமாணத்தில் மரச்சட்டத்தில் வைக்கப்பெறும். முக்குடை என்பது தேர்முகப்பு போன்று உள்ளது. அதில் 366 விளக்குகள் உள்ளன. மார்கழியில் விளக்கேற்றினால் ஆண்டு முழுவதும் ஏற்றிய பலன் கிட்டும் என்று நம்பப்படுகிறது. வருடந்தோறும் மூலவருக்கு மோட்ச கல்யாணம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12
- ↑ மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000
- ↑ G.Thillai Govindarajan, Jainism in Thanjavur District Tamil Nadu, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, 110 001, May 2010
- ↑ சமணத் திருத்தலங்கள் (சோழ மண்டலம்), ஆதிபகவன் சமணர் சங்கம், 53/22, ஜவுளிசெட்டித்தெரு, தஞ்சாவூர் 613 009, 2009