கும்பகோணம் சக்கரபாணி கோயில்
சக்கரபாணி கோயில் | |
---|---|
சக்கரபாணி கோயில், கும்பகோணம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவு: | கும்பகோணம் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
சக்கரபாணி கோயில் (Chakrapani Temple) கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில் ஆகும். இந்த கோவில் கும்பகோணம் தொடருந்து நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது. சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை. ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார்.[1] இந்தியத்துணைக்கட்டணத்தில் சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயில் இதுவேயாகும்.[2] இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார்.வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.
பாஸ்கர சேத்திரம்
ஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீளவும் கிடைக்க ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி மாத பௌர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து ஸ்ரீசக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும் அருட்காட்சி தந்து ஆதவனின் ஒளியை மீளவும் தந்துஅருள் செய்தார். தன் பெயரில் பாஸ்கர சேத்திரம் என இத்தலம் அமையப்பெறவேண்டும் என வரம் பெற்ற சூரியன் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு கோயில் நிர்மாணித்து பாஸ்கர சேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான்.[3]
மூலவர், தாயார்
இத்தலத்தில் உள்ள மூலவர் சக்கரபாணி எனப்படுகிறார். மூலவருக்கு எட்டு கைகள் உள்ளன. தாயார் விஜயவல்லி எனவும் சுதர்சனவல்லி எனவும் அழைக்கப்படுகிறார்.
12 கருட சேவை
கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.[4][5]
ஊஞ்சல் உற்சவம், சூரிய பிரபை
இக்கோயிலில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு 31 டிசம்பர் 2017 அன்று ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.[6] 97 ஆண்டுகளுக்குப் பிறகு ரத சப்தமி நாளான 12 பிப்ரவரி 2019 அன்று சுழலும் சூரிய பிரபையில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.[7]
குடமுழுக்கு
இக்கோயிலில் நவம்பர் 8, 2015 அன்று குடமுழுக்கு நடைபெற்றது.[8][9]
முதலாம் சரபோஜி
முதலாம் சரபோஜியின் காலத்தில் (பொ.ஊ. 1712–1728) இக்கோயில் ஆக்கம் பெற்றுத் திகழ்ந்தது. இக்கோயில் மண்டபத்தில் சுமார் 6 அடி உயரமுடைய, நின்ற நிலையிலான அவருடைய பித்தளைச் சிற்பம் உள்ளது. அதற்கு அருகே சுமார் 3 அடி உயரமுடைய ஒரு பெண்ணின் உருவமும் பித்தளையில் உள்ளது. மராட்டியர் பாணியிலான தலைப்பாகை, நீண்ட அங்கிகளோடு கூடிய மராத்திய அரச உடை அணிந்து வலக் கையில் மலர் ஒன்றை ஏந்திய நிலையில் உள்ளார். மீசை மெலிந்து உள்ளது. அருகிலுள்ள பெண் இவருடைய மகளாக இருக்க வாய்ப்புள்ளது.[10]
மேற்கோள்கள்
- ↑ மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்.
- ↑ அருள்மிகு ஸ்ரீசக்கரபாணி சுவாமி திருக்கோவில், கும்பகோணம், மகாமகம் சிறப்பு மலர், 2004
- ↑ அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாறு, பாஸ்கர ஷேத்திரம், கும்பகோணம் 612 001
- ↑ 12 கருட சேவை தரிசனம், தி இந்து, 5 மே 2016
- ↑ "கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே பந்தலில் 12 பெருமாள் கோயில்களின் கருட சேவை உற்சவம் நடைபெற்றது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம், தினச்சங்கு, 10 மே 2016" இம் மூலத்தில் இருந்து 2018-05-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180514162807/http://www.dhinasangu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/.
- ↑ 70 ஆண்டுகளுக்கு பிறகு சக்கரபாணி சுவாமி கோயிலில் ஊஞ்சல் உற்சவம், தினமணி, 1 ஜனவரி 2018
- ↑ 97 ஆண்டுகளுக்குப் பிறகு சுழலும் சூரிய பிரபையில் சக்கரபாணி சுவாமி வீதியுலா, தினமணி, 13 பிப்ரவரி 2019
- ↑ குடந்தை ஸ்ரீசக்கரபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு, கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் தரிசனம், தினமணி, நவம்பர் 9, 2015
- ↑ "சக்கரபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம், தினகரன், நவம்பர் 9, 2015" இம் மூலத்தில் இருந்து 2021-07-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210727181235/https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=506913&cat=504%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.
- ↑ குடவாயில் பாலசுப்பிரமணியன், சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987, முதல் பதிப்பு, ப.307