மலேசியாவில் தமிழில் கல்வி
மலேசியாவில் 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 2,019,600 மலேசிய இந்தியர் வாழ்கின்றனர். அதாவது 6.8 விழுக்காட்டினர். இருப்பினும் ஒவ்வோர் ஆண்டும் இந்த எண்ணிக்கை விகிதம் குறைந்து வருகிறது. இவர்களில் பெரும்பான்மை மக்களின் அடிப்படைக் கல்வி மொழியாகத் தமிழ் மொழியே இன்று வரை இருந்து வருகிறது.
உலகில் தமிழைக் கல்வி மொழியாக வழங்கும் மூன்று நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்., மற்றவை இந்தியா, இலங்கை.
மலேசியாவில் தமிழ்க்கல்வியின் தோற்றம்
மலேசியாவில் தமிழ்க்கல்வி வரலாறு 19 நூற்றாண்டில் தொடங்கியது. தமிழ்நாட்டிலிருந்து மலாயாவுக்கு தமிழர்கள் ஒப்பந்த கூலிகளாக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டனர்.
மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இரப்பர் தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர். அக்காலகட்டத்தில் 1816-ஆம் ஆண்டில் பினாங்கு மாநிலத்தில் ‘ரெவரண்ட் ஹாட்சிங்ஸ் (Rev.Hutcings) என்பவரின் முயற்சியால் பினாங்கு பொதுப்பள்ளி (Penang Free School) தோற்றுவிக்கப்பட்டது.[1]
செந்தூல் ஆங்லோ தமிழ்ப்பள்ளி
பினாங்கு பொதுப் பள்ளியில் 21.10.1816-இல் தமிழ்வகுப்பு ஒன்று முதன் முதலாக தொடங்கப்பட்டது. இதுவே மலேசிய நாட்டின் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து 1834-இல் சிங்கப்பூரில் மற்றும் ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. 1895-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் செந்தூல் எனும் இடத்தில் ஆங்லோ தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. பின் அது மெதடிஸ் ஆண்கள் பள்ளியாக மாற்றம் கண்டது.
லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி
1898-ஆம் ஆண்டு லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. 1900-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பேராக் மாநிலத்தில் பாகன் செராய் அரசினர் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் பல்வகை தாய்மொழிக் கல்வியை விரும்பவில்லை. குடியேற்றக்காரர்களின் பிள்ளைகள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அவர்களுக்கென தனிப்பள்ளிகள் தேவை இல்லை என ஆங்கிலேயர்கள் கருதினர்.[2]
திண்ணைப்பள்ளி
1912-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அமல்படுத்தப்பட்ட தொழிலாளர் சட்டமானது (Labour Ordinance) தமிழ்ப் பள்ளிகளின் கட்டாய வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கியது. 7 முதல் 14 வயதில் 10 மாணவர்கள் இருந்தால் ஒவ்வொரு தோட்டத்திலும் தனித்தனி பள்ளிகள் அமைக்கப்பட்டன. இதன் விளைவு 1920-ஆம் ஆண்டில் 122 தமிழ்ப்பள்ளிகள் உருவாகின.
இதனைத் தொடர்ந்து இரப்பர் தோட்டங்கள் அதிகரிக்க தொடங்கின. இக்காலக் கட்டத்தில் திண்ணைப்பள்ளி அமைப்பில் தோட்டங்கள் தோறும் தமிழ்ப்பள்ளிகள் உருவாகின. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இவ்வகைப் பள்ளிகள் வீடுகளிலும்; சில பொது இடங்களிலும் செயல்பட்டன.
527 தமிழ்ப்பள்ளிகள்
அன்றைய நாளில் நான்கு வகையான தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டன.
- தோட்டப்புறப் பள்ளிகள்
- அரசுப் பள்ளிகள்
- சமய இயக்கப் பள்ளிகள்
- தனியார் பள்ளிகள்
1957-ஆம் ஆண்டுத் தொடக்கம் தோட்டங்கள் தோறும் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் படப்படியாக வளரத் தொடங்கி, இன்று 527 தமிழ்ப்பள்ளிகள் நாட்டிலே இயங்கி வருகின்றன.
இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழி
இடைநிலைப் பள்ளிகளில் புதுமுக வகுப்பு தொடங்கி படிவம் ஐந்து வரையிலும் தமிழ் பயிற்றுவிக்கப் படுகிறது. 1989-ஆம் ஆண்டு இடைநிலைப் பள்ளிகளுக்கான புதிய கலைத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. பின்னர் இடைநிலைப் பள்ளிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட கலைத் திட்டமும் அமுல்படுத்தப்பட்டது.
2017-ஆம் ஆண்டு தொடங்கி இடைநிலைப் பள்ளிகளுக்கான தர அடிப்படையிலான கலைத் திட்டமும் முதலாம் படிவத்தில் அமல்படுத்தப் படவும் உள்ளது.
ஐந்தாம் படிவத்தில் எஸ்.பி.எம்
தற்போது தமிழ்மொழி மாணவர்களின் தாய்மொழிக் கல்வி (POL) முறையிலும் முழுநேரமாகவும் வகுப்பில் போதிக்கப்பட்டு வருகின்றது. மூன்றாம் படிவத்தில் பிடி3 (PT3) தேர்விலும் ஐந்தாம் படிவத்தில் எஸ்.பி.எம் (SPM) தேர்விலும் அங்கீகரிக்கப்பட்ட பாடமாகவும் தமிழ் விளங்குகின்றது.
ஐந்தாம் படிவ மாணவர்கள் தமிழைத் தவிர்த்து தமிழ் இலக்கியத்தையும் தேர்வுப் பாடமாக பயிலும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர். ஆறாம் படிவ உயர்நிலைக் கல்வியிலும் தமிழ்மொழி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆறாம் படிவத்தில் தமிழைத் தேர்வுப் பாடமாக எடுத்துச் சிறந்த தேர்ச்சியினைப் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியையும் பெறுகின்றனர். தமிழ்மொழியில் சிறந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழை முதன்மைப் பாடமாகப் பயிலும் வாய்ப்பும் வழங்கப் படுகின்றது.[3]
பல்கலைக்கழகங்களில் தமிழ்
நாட்டின் முதல் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1956 முதல், கலை சமூகவியல் புலத்தில் இந்திய ஆய்வியல் துறையின்கீழ் தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்திய ஆய்வியல் துறையில் தற்காலத் தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், இலக்கணம் ஆகியவை கற்பிக்கப் படுகிறது.
தமிழ்மொழியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பு
மேலும், மலாய்மொழியில் தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், ஆகியவற்றைப் பற்றியும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி, மொழியில் புலத்தில் தமிழ்மொழியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பு 1998ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இத்துறையில் தமிழ் மொழித்திறன், ஒலியியலும் ஒலியணியலும், உருபணியல், தொடரியல், மொழியும் இலக்கியமும், மொழியும் பண்பாடும், தமிழ் வட்டார வழக்கு, பனுவலாய்வியல், இருவழி மொழியாக்கம் முதலிய பாடங்கள் தமிழில் கற்பிக்கப் படுகின்றன.
சபா மலேசிய பல்கலைக்கழகம்
மலேசியாவிலுள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம், புத்ரா பல்கலைக்கழகம், சபா மலேசிய பல்கலைக்கழகம் ஆகிய அரசுப் பல்கலைக்கழகங்களில் இரண்டாம் மொழியாக எளிய தமிழ் கற்பிக்கப்படுகிறது.
1996ஆம் ஆண்டு முதல் புத்ரா பல்கலைக்கழகத்தில் வேற்றுமொழித் துறையில் (Jabatan Bahasa Asing) தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது.
தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகள்
1870-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியர்கள் பணியாற்றிய பல இடங்களில், குறிப்பாக புரோவின்ஸ் வெல்லஸ்லி, ஜொகூர், மலாக்கா, போன்ற இடங்களில் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகள் தோன்றின.
1800 - 1900 காலகட்டத்தில் கிறிஸ்துவச் சமய அமைப்புகள் தோற்றுவித்த ஆங்கில-தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்த்துத் தனிப்பட்டவர்களும் தமிழ்ப்பள்ளிகளை அமைத்தனர். பொதுவாக இந்தப் பள்ளிகள் யாவும் சிறியவை. ஓர் அறை, ஓராசிரியர் வகுப்பு என்ற நிலையிலேயே அவை இயங்கின. மேலும், நிதி வளம் இல்லாமலும் முறையான பராமரிப்பு இல்லாமலும் அவை செயல் பட்டன.[4]
தமிழ் தகவல் தொழில்நுட்பம்
மலேசியாவில் உள்ள இரு தமிழ்ப்பள்ளிகளில் உபுண்டு இயங்குதளத்தைப் பயன்படுத்துகின்றன. அந்தப் பள்ளிகளின் இரண்டு கணினிக் கூடங்களில் ஏறத்தாழ 500 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இக்கூடங்கள் தமிழைத் தொடர்பு மொழியாகக் கொண்டு உள்ளன. மென்பொருள்களும் ஓரளவிற்கு தமிழிலேயே உள்ளதால், பாடங்களைத் தமிழில் நடத்துவது சிக்கலாக இல்லை. தற்போது, நான்கு படிநிலைகளிலான தகவல் நுட்பியல் பாடத் திட்டமொன்றை ஆசிரியர் குழு மேம்படுத்திக் கொண்டு இருக்கின்றது.
இந்த இரண்டு கூடங்களும் சிறப்பாக நடப்பதால், இன்னும் 8 கணினிக் கூடங்களை அமைக்கத் திட்டங்கள் உள்ளன. இந்தக் கணினிக் கூடங்களினால் ஆண்டுக்கு 4,000-க்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி பெறும் மாணவர்கள் பயன்பெறுவர்.
புள்ளி விவரங்கள்
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் புள்ளிவிவரங்கள்[1] | ||
---|---|---|
ஆண்டு | பள்ளிகள் | மாணவர்கள் |
1938 | 547 | 22,820 |
1947 | 741 | 33,945 |
1956 | 877 | 47,407 |
1957 | 888 | 50,766 |
1958 | 874 | 53,098 |
1959 | 840 | 56,297 |
1960 | 815 | 60,726 |
1961 | 784 | 63,917 |
1962 | 745 | 66,604 |
1963 | 720 | 67,649 |
1964 | 704 | 69,362 |
1965 | 700 | 72,828 |
1966 | 695 | 76,350 |
1967 | 686 | 79,203 |
1968 | 666 | 81,428 |
1969 | 662 | 80,750 |
1970 | 657 | 79,278 |
1971 | 647 | 77,192 |
1972 | 635 | 78,758 |
1973 | 631 | 78,854 |
1974 | 618 | 79,674 |
1975 | 612 | 80,404 |
1976 | 606 | 80,103 |
1977 | 606 | 78,841 |
1978 | 600 | 77,525 |
1979 | 596 | 77,013 |
1980 | 589 | 73,958 |
1981 | 583 | 73,513 |
1982 | 579 | 73,897 |
1983 | 575 | 74,255 |
1984 | 571 | 75,028 |
1985 | 566 | 76,653 |
1986 | 555 | 81,051 |
1987 | 553 | 83,228 |
1988 | 548 | 87,837 |
1989 | 548 | 92,243 |
1990 | 547 | 96,120 |
1991 | 544 | 99,876 |
1992 | 543 | 102,493 |
1993 | 541 | 104,638 |
1994 | 539 | 103,963 |
1995 | 538 | 102,776 |
1996 | 531 | 99,525 |
1997 | 530 | 98,072 |
1998 | 530 | 94,907 |
1999 | 526 | 92,120 |
2000 | 524 | 89,175 |
2006 | 523 | 101,972 |
2007 | 523 | 105,618 |
2011 | 523 | 102,642 |
வெளி இணைப்புகள்
- State of Tamil Schools பரணிடப்பட்டது 2009-10-31 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "மலேசியாவில் தமிழ்க்கல்வி வரலாறும் வளர்ச்சியும்". https://malaysiatamilkalvi.com/archives/199. பார்த்த நாள்: 12 March 2022.
- ↑ "மலேசியாவில் தமிழ்க்கல்வி வளர்ச்சி". http://tamilfoundation.org/tam/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-2/. பார்த்த நாள்: 12 March 2022.
- ↑ "“மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா” – ப.கமலநாதன் வாழ்த்துச் செய்தி - Selliyal - செல்லியல்". https://selliyal.com/archives/220383. பார்த்த நாள்: 12 March 2022.
- ↑ DS, Dass (1972-01-01). "Tamil Education in West Malaysia and Singapore, 1860 - 1870". M.Ed.Thesis, University Malaya: 22.