போஜன் (திரைப்படம்)
போஜன் | |
---|---|
இயக்கம் | எல். எஸ். ராமச்சந்திரன் டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | ஜெயப்பிரகாஷ் பிக்சர்ஸ் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | பி. எஸ். கோவிந்தன் எம். ஜி. சக்கரபாணி காளி என். ரத்னம் ஆர். பாலசுப்பிரமணியம் கே. கே. பெருமாள் எஸ். வரலட்சுமி சி. டி. ராஜகாந்தம் பி. கே. சரஸ்வதி பி. எஸ். சிவபாக்கியம் லலிதா - பத்மினி |
பாடலாசிரியர் | பி. ஆர். ராஜகோபால் ஐயர் |
நடனம் | தாரா சௌத்ரி |
கலையகம் | மாடர்ன் தியேட்டர்ஸ் |
வெளியீடு | 31 சூலை 1948 |
நீளம் | 17549 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
போஜன் (Bhojan) 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். எஸ். ராமச்சந்திரன், டி. ஆர். சுந்தரம் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், எம். ஜி. சக்கரபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த வரலாற்றுப் படத்தில் லலிதா - பத்மினி சகோதரிகளின் வள்ளி திருமணம் நடனம், மற்றும் தாரா சௌத்ரியின் நடனக் காட்சி ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன.
கதைச் சுருக்கம்
தாரா நாட்டு வாரிசான போஜன் சிறுவனாக இருந்தமையால் அவனது சிறிய தந்தை முஞ்சன் (ஆர். பாலசுப்பிரமணியம்) அவனுக்குப் பதிலாக நாட்டை ஆண்டு வந்தான். முதலமைச்சர் புத்திசாகரிடம் வளர்ந்து வரும் போஜனைக் (பி. எஸ். கோவிந்தன்) கொல்ல முஞ்சன் பல சூழ்ச்சிகள் செய்கிறான். ஆனால் அவை தோல்வியிலேயே முடிகின்றன. அரசேற்கும் பருவம் வந்த போஜனுக்கு முடிசூடும் படி புத்திசாகர் முஞ்சனை வற்புறுத்துகிறார். ஆனால் முஞ்சன் முதலமைச்சரை பதவியில் இருந்து விலக்கி, தன் தங்கை மகள் விலாசவதியை போஜனுக்கு மணம் செய்து வைத்து விட்டு, அவளையும் தானே அடைய முயற்சிக்கிறான். அவனின் சூழ்ச்சிகளையெல்லாம் போஜனின் நண்பன் சஞ்சீவி (காளி என். ரத்னம்), சேனாதிபதி வத்சன், புத்திசாகர் ஆகியோர் இணைந்து முறியடிக்கின்றனர். போஜன் முஞ்சனின் சூழ்ச்சிக்குத் தப்பி காட்டில் ஒரு பில்லர் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்கிறான். ஆனால், பில்லர் கூட்டத்தின் தலைவரின் மகள் லீலாவதி அவன் மேல் காதல் கொண்டு அவனைக் காப்பாற்றித் தப்பிக்க வைக்கிறாள். இறுதியில், நண்பர்களின் உதவியுடன் போஜன் தாரை, உஜ்ஜயினி, பூபாளம் ஆகிய நாடுகளுக்குப் பேரரசனாக முடிசூடுகிறான். முஞ்சன் தற்கொலை செய்து கொள்கிறான்.[1]
பாடல்கள்
- வந்தார் இளம் சிங்கம் போல் பாங்கி (பாடியவர்: எஸ். வரலட்சுமி)[2]
- வருவார் என் இதயநாதன்.. (பாடியவர்: எஸ். வரலட்சுமி)[3]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "போஜனில் கூத்தும் கும்மாளமும்". பேசும் படம்: பக். 50-53. ஆகத்து 1948.
- ↑ வந்தார் இளம் சிங்கம்--BHOJAN. 10 July 2015. Retrieved 11 November 2016 – via YouTube.
- ↑ வருவார் என் இதயநாதன்--BHOJAN – via YouTube.