ஏ. எச். எம். அஸ்வர்
ஏ. எச். எம். அஸ்வர் | |
---|---|
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1989–2004 | |
பதவியில் 2010 – 28 நவம்பர் 2014 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை | பெப்ரவரி 8, 1937
இறப்பு | ஆகத்து 29, 2017 கொழும்பு | (அகவை 80)
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | ஆசிரியர், ஊடகவியலாளர் |
ஏ. எச். எம். அஸ்வர் (A.H.M. Azwer, பெப்ரவரி 8, 1937 - ஆகத்து 29, 2017) இலங்கை அரசியல்வாதியும்,[1] இலக்கியவாதியும், ஊடகவியலாளரும் ஆவார். இவர் ஆரம்பத்தில் லங்கா சமசமாஜக் கட்சியிலும், பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவற்றிலும் உறுப்பினராக இருந்துள்ளார். கொழும்பு தெகிவளையில் வசித்து வந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
எம். எச். எம். அசுவர் 1937 பெப்ரவரி 8 ஆம் நாள் பிறந்தார். கொழும்பு சாஹிரா கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் மகரகமை கபூரிய்யா அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வி கற்றார்.[2] மகரகமை செய்தியாளராக பத்திரிகைகளுக்கு செய்திகள் வழங்கி வந்தார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் புலமை பெற்ற அசுவர்[3] மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்காரின் தனிப்பட்ட செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[2]
அரசியலில்
1950களின் ஆரம்பத்தில் லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 1955 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். முன்னாள் அரசுத் தலைவர் ஆர். பிரேமதாசாவின் மொழிபெயர்ப்பாளராக நீண்ட காலம் பணியாற்றினார்.[2] 1989 தேர்தலை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். முசுலிம் சமய விவகார இராசாங்க அமைச்சராகவும், 2002-2004 காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் நாடாளுமன்ற விவகார இராசாங்க அமைச்சராகவும் பதவி வகித்தார்.[2]
2008 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சேர்ந்து முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தார்.[2] 2010 ஆம் ஆண்டு அக்கட்சியினூடாக தேசியப் பட்டியல் உறுப்பினராக மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[4] 2014 நவம்பர் 28 இல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.[5] அதன் பின்னர் இறக்கும் வரை கூட்டு எதிர்க்கட்சியின் முசுலிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபராக இருந்து பணியாற்றினார்.[2]
கலை இலக்கியப் பங்களிப்பு
வாழ்வோரை வாழ்த்துவோம் எனும் மகுடத்தின் கீழ் ஏராளமான இலக்கியவாதிகளைக் கெளரவப்படுத்தியுள்ளார்.[2] ஊடகங்களின் துடுப்பாட்ட வர்ணனையாளராக இருந்துள்ளார்.[2] முசுலிம் லீக் வாலிப முன்னணியின் தலைவராகவும் அகில இலங்கை முசுலிம் கல்வி மாநாட்டின் உபதலைவராகவும் ஆலோசகராகவும் பணியாற்றினார்.[2] மேலவை உறுப்பினர் மசூர் மௌலானா, அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீட் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு உட்படப் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.[2]
மேற்கோள்கள்
- ↑ கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ., இலங்கை நாடாளுமன்றம்
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9 "அரசியல் களத்தில் தனக்கென தனியிடம் பிடித்த அஸ்வர்.!". வீரகேசரி. 30-08-17. http://www.virakesari.lk/article/23751. பார்த்த நாள்: 30-08-2017.
- ↑ "முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் காலமானார்". தமிழ்வின் இம் மூலத்தில் இருந்து 2017-09-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170901024547/http://www.tamilwin.com/politics/01/156798. பார்த்த நாள்: 30-08-2017.
- ↑ "இலங்கை : முன்னாள் அமைச்சர் அஸ்வர் மறைவு". பிபிசி. 29-08-2017. http://www.bbc.com/tamil/sri-lanka-41087438. பார்த்த நாள்: 30-08-2017.
- ↑ அஸ்வர் எம்.பி இராஜினாமா பரணிடப்பட்டது 2014-12-15 at the வந்தவழி இயந்திரம், தினகரன், நவம்பர் 29, 2014