அம்மணி அம்மாள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அம்மணி அம்மாள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார். இவர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் கோபுரத்தினை கட்டிய பெருமை உடையவர். [1] இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. [1]

இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தவர்[2] திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, அதனைக் கட்ட எண்ணம் கொண்டார். இதற்காகப் பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினைக் கட்டி முடித்தார். அதனால் திருவண்ணாமலையின் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகின்றது. இவர் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர் என்று கூறிகின்றார்கள்.

இளமையும் வாழ்வும்

அம்மணியம்மாளின் இயற்பெயர் அருள்மொழியாகும். [3] இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற கிராமத்தில் நல்ல துளுவ வேளாளர்க்குடியில் பிறந்தவர். சைவக் கடவுளான சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். பெற்றோருடன் ஒரு முறை அண்ணாமலைக்கு வந்த போது, மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப மறுத்து அண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு பருவம் வந்த போதும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தார்.

அற்புதங்கள்

  • நமசிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார்.
  • அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டு மனம் வருந்தினார். பின் தாமே முன்வந்து கோபுரத்தினைக் கட்ட முடிவு செய்தார்.
  • அதற்கான பொருட் செலவுகளை நன்கொடைகள் மூலம் பெற்றார். ஒரு முறை செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கோபுரத்தினைக் கட்ட பணம் கேட்ட பொழுது, அச்செல்வந்தர் பணத்தினை வைத்துக் கொண்டு தன்னிடம் பணமே இல்லையென்றார். ஆனால் அண்ணாமலையாரின் அருள் பெற்ற அம்மணி அம்மாள், அச்செல்வந்தரிடம் இருக்கும் தொகையைச் சரியாகக் கூறி அப்பணத்தினை நன்கொடையாகக் கேட்டார். தன்னிடம் இருப்பதை அறிந்து சரியாகக் கூறும் அம்மாளை வணங்கி அச்செல்வந்தர் பணத்தினைக் கொடுத்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு.

அம்மணி அம்மாள் கோபுரம்

பல்வேறு ஆண்டுகள் பக்தர்களிடம் நன்கொடைப் பெற்று அம்மணி அம்மாள் வடக்குக் கோபுரத்தினைக் கட்டி முடித்தார்.[4] அதனால் நன்றியோடு அக்கோபுரத்தினை அம்மணியம்மாள் கோபுரம் என்று அழைக்கின்றனர்.

அம்மணி அம்மாள் மடம்

அம்மணி அம்மாள் 17ம் நூற்றாண்டின் இறுதியில் ஜீவ சமாதியடைந்தார்.[1] இவரது சமாதி ஈசான்ய லிங்க சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. [1]

இந்த மடத்தில் தீபத்திருவிழா வழிபாடு சிறப்பாகும்.[1] திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும், அம்மணி அம்மாளின் ஜீவசமாதியில் நெய்தீபம் ஏற்றப்படும். மடத்தின் முன்பு பக்தர்கள் தீபம் ஏற்படுத்தி வழிபடுகின்றார்கள்.[1] இம்மடத்தில் கொடுக்கப்படும் விபூதி பிரசாதம் புகழ்பெற்றது.[1]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அம்மணி_அம்மாள்&oldid=27920" இருந்து மீள்விக்கப்பட்டது