வை. அநவரத விநாயகமூர்த்தி
வைத்திலிங்கம் அநவரத விநாயகமூர்த்தி | |
---|---|
முழுப்பெயர் | வைத்திலிங்கம் அநவரத விநாயகமூர்த்தி |
பிறப்பு | 31-08-1923 இணுவில், யாழ்ப்பாணம் |
மறைவு | 07-12-2009 கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பணி | அரசுப்பணி |
பெற்றோர் | அ.க.வைத்தியலிங்கம், செல்லம்மா |
வைத்திலிங்கம் அநவரத விநாயகமூர்த்தி (ஆகஸ்ட் 31, 1923 - டிசம்பர் 7, 2009) தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தில் வந்தவர். முதுபெரும் ஈழத்து எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இணுவில் கிராமத்தில் 'தணிகைப் புராண' உரையாசிரியர் மகாவித்துவான் பொ. அம்பிகைபாகரின் புதல்வர் அ.க.வைத்தியலிங்கம், செல்லம்மா தம்பதியினரின் கடைசிப் புதல்வராகப் பிறந்த அநவரத விநாயகமூர்த்தி, இணுவில் அம்பிகைபாகர் சைவப்பிரகாச வித்தியாலயம் (தற்போது இணுவில் இந்துக்கல்லூரி), கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர் சென்னைப் பல்கலைக்கழக 'தமிழ் வித்துவான்' முதலாவது தேர்வுப் பரீட்சையிலும் சித்தியடைந்திருந்தார். 1956ஆம் ஆண்டில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஆசிரியை அருளம்பலம் சிவயோகம் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்குச் சிவகுமார், சிவகௌரி, சிவானுசாந்தன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.
தொழில்
1944 ஆம் ஆண்டில் அரசாங்க சேவையில் எழுது வினைஞனாகச் சேர்ந்த அநவரத விநாயகமூர்த்தி படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று இறுதியாகக் கல்வி அமைச்சில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி 1983ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.
இலக்கியத்துறை
யாழ் இந்துக் கல்லூரியில் 1939ல் உயர்தர வகுப்பு மாணவனாகக் கல்வி கற்று வரும்போது 'அந்தி மாலைக் காட்சி' என்ற கட்டுரை எழுதி 'இந்து இளைஞன்' (Young Hindu) என்ற கல்லூரிச் சஞ்சிகையில் வெளியிட்டதுடன் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தார். 1939 ஆம் ஆண்டில் தொடங்கிய எழுத்துப் பணி அவர் இறக்கும் வரை தொடர்ந்து கொண்டேயிருந்தது. கடைசிக் காலத்தில் தனது பதினோராவது நூலாக 'ஆனந்த நடனம்' என்னும் நூலை எழுதிக் கொண்டிருந்தார்.
இந்தியா தில்லியில் அமைந்துள்ள ‘ASIA INTERNATIONAL’ என்ற நிறுவனம் 1984ம் ஆண்டில் 'LEARNED INDIA' என்னும் நூலை ஆங்கில மொழியில் தொகுத்து வெளியிட்டது. இந்த நூலில் இணுவை மூர்த்தியின் இலக்கிய சமயப் பணிகள்பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்', வள்ளுவன் தந்த தமிழ் மறை, நற்றமிழ் வல்ல நாவலன், மக்கள் கவிஞன் பாரதி, சாகுந்தலத்தில் ஓர் இனிய காட்சி போன்ற பல இலக்கியக் கட்டுரைகளை இவர் எழுதியிருக்கிறார். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் அவருக்குள்ள தொடர்பு அவரது கட்டுரைகளில் பரந்து விளங்கின.
தமிழ் நாட்டுப் பாடசாலைகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட 'திரிவேணித் தமிழ்ச் செல்வம்' என்ற பாடநூலில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் இருவரின் படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. 'ஞயம்படவுரை' என்ற பொருளில் அநவரத விநாயகமூர்த்தி எழுதிய படைப்பு அவற்றில் ஒன்று. அநவரத விநாயகமூர்த்தி தான் மரணிக்கும் வரை ஐநூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரைகளை எழுதியிருந்தார்.
பத்திரிகைத்துறை
இலங்கையில் தமிழ்பேசும் மக்களிடையே தமிழ் பண்பாடு, கலாசாரம் முதலியவைகளைப் பரப்புவதற்கும். காலத்திற்கேற்ப புதிய கருத்துக்களைப் படைத்துத் தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் இலக்கிய சஞ்சிகைகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் தமிழ் இலக்கிய சஞ்சிகைகள் வெளிவர வேண்டும் என்ற ஆவலில் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ஜயவருஷம், சித்திரை மாதம்) 'உதயம்' மாத சஞ்சிகையின் முதலாவது இதழை வெளியிட்டார்.
1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் வெளிவந்த இச்சஞ்சிகையை எத்தனையோ சோதனைகளுக்கும், தனது தனிப்பட்ட அரச பணிப்பழுவுக்கும் மத்தியில் அரசாங்கத்தின் அனுமதியுடன் கௌரவ ஆசிரியர் பொறுப்பை ஏற்று வெளியிட்டு வந்தார். உதயம் இரண்டு ஆண்டு மலர்களையும் கண்டது. 'உதயம்' ஈழத்தில் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியது.
சமய, சமூகப் பணிகள்
இவரது இலக்கியப் பணி, சமய, சமூகப் பணிகளுடன் இணைந்ததாகவே காணப்பட்டது. இலக்கியத்தை வேறாகவும் சமயத்தை வேறாகவும் பிரித்து எழுதாமல் இலக்கியத்தினூடாகவே சமயத்தையும் இணைத்து எழுதினார்.
1948ஆம் ஆண்டு தொடக்கம் 1951ஆம் ஆண்டுவரை கொழும்பின் புறநகரான வத்தளை, உணுப்பிட்டி இந்து சன்மார்க்க சங்கத்தின் உதவிச் செயலாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் கல்வி அமைச்சில் கடமையாற்றிய காலப்பகுதியில் இந்துமன்றத்தின் செயலாளராகவும், துணைத் தலைவராகவும், தலைவராகவும் சைவ சமய வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றியுள்ளார். சங்கத்தின் சார்பில் சமய நூல்களை வெளியிட்டது மட்டுமன்றி பாடசாலை மாணவர்களிடையே சமய அறிவைப் பேச்சுப் போட்டிகள்மூலம் பரப்புவதில் முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளார். பல ஆண்டுகள் கலைமகள் விழாக்களை நடத்துவதற்கு அச்சாணியாகச் செயற்பட்டவர் இணுவை மூர்த்தி. இணுவை மூர்த்தி தனது இறுதிக்காலங்களில் சர்வதேச சமய சுதந்திரத்திற்கான நிறுவனத்தின் (International Association for Religious Freedom) கொழும்புப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
சமயத்துறை ஈடுபாட்டினைப் போலவே சமூகத்துறையிலும் இவர் ஈடுபாடு மிகைத்திருந்தது. கல்வி அமைச்சில் இவர் பணியாற்றிய இரண்டு தசாப்த காலகட்டத்தில் இந்து, முஸ்லிம் சமூக வேறுபாடு பாராமல் ஆசிரிய குழாத்திற்கு கணிசமான சேவைகளை வழங்கியுள்ளார். அத்துடன் கல்வி அமைச்சினால் நிறுவப்பட்ட 'ஆசிரியர்களின் சம்பள மீளாய்வுக் குழுவிலும்' அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
எழுதிய நூல்கள்
இவர் மரணிக்கும்வரை பத்துப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
- நவராத்திரியும், கலைமகள் வழிபாடும்- 1975
- கல்விச் செல்வி - 1978
- நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை- 1978
- யாழ் திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வரலாறு - 1994
- தேவியர் மூவர் தோத்திரப்பாடல்கள் - 1997
- சிவயோக சுவாமிகளும்ää அவர் அருளிய போதனைகளும் -1998
- திருநெல்வேலி பழங்கிணற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வரலாறு (இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் - 1999
- சிவநெறிச் சிந்தனைகள் - 2000
- யாழ்ப்பாணம் இணுவில்அருள்மிகு ஸ்ரீபரராஜ சேகரப்பிள்ளையார் திருக் கோயில் - 2003
- இலங்கை இலக்கியத்தில் இனிய முத்துக்கள், மணிமேகலைப் பிரசுரம், 2004
பெற்ற விருதுகள்
- சமய, சமூகப்பணிகளைப் பாராட்டி 1995.02.12ம் திகதி நல்லைத் திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாவது குரு மஹா சந்தானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் 'சிவநெறிச் செம்மல்' எனும் விருது வழங்கிக் கௌரவித்தமை.
- இலங்கை அரசின் சார்பாகக் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற 'கலாபூஷணம்' விருது - 2005