வீரமாமுனிவர் நூல்களில் திருக்குறள்
வீரமாமுனிவர் நூல்களில் திருக்குறள் என்பது தமிழ்நாட்டில் வாழ்ந்த இத்தாலியரான வீரமாமுனிவர் (1680-1747) தமிழ்மறை திருக்குறளில் உள்ள அறநெறிகளை எவ்வாறு தமது நூல்களில் பயன்படுத்தினார் என்பதை விவரிக்கிறது. திருவள்ளுவரின் கருத்துகளைத் தமிழ் மக்களும் பிற நாட்டவரும் அறிந்து பயனடைய வேண்டும் என்னும் ஆர்வத்தால் வீரமாமுனிவர் திருக்குறளை ஆழ்ந்து கற்று, அதன் மெய்யறிவைத் தமது நூல்களில் புகுத்தினார்.
வீரமாமுனிவரின் திருக்குறள் பற்று
தமிழகத்தில் வீரமாமுனிவர் கத்தோலிக்க குருவாகத் திருப்பணி புரிந்த இடங்கள் பல.
- காமநாயக்கன்பட்டி
- குருக்கள்பட்டி
- வரதராசன் பேட்டை (ஐயம்பட்டி)
- ஆவூர்
- மதுரை
- மறவநாடு
- வடுகர்பட்டி
- திருக்காவலூர்
போன்ற பல இடங்களில் அவர் கிறித்தவ மறையை மக்களுக்கு அறிவித்தார். கோவில்கள் எழுப்பினார். மக்களின் ஆன்ம வளர்ச்சிக்குத் துணைபுரிந்தார். இயேசுவின் நற்செய்தியை எடுத்துரைத்தார். திருப்பலி நிறைவேற்றி, கிறித்தவ சமயச் சடங்குகள் வழி மக்களை இறையன்பிலும் பிறரன்பிலும் வளரச் செய்தார்.
திருக்காவலூர் திருமானூருக்குக் கிழக்கேயும் ஏலாக்குறிச்சிக்கு வடக்கேயுமுள்ளது. அங்குதான் முனிவர் பல்லாண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். அவர் தமிழிலும் இலத்தீனிலும் இயற்றி வெளியிட்ட நூல்கள் பல அங்கிருந்தே வந்தன. தேம்பாவணியும் அங்கிருந்தே வந்திருக்கலாம்.
இறைபணியில் ஈடுபட்டிருந்த முனிவர் தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாகிய திருக்குறளைப் பெரிதும் போற்றினார். குறளில் உள்ள அறநெறி அவரைக் கவர்ந்து இழுத்தது. முனிவர் வாழ்ந்த 18ஆம் நூற்றாண்டில் திருக்குறள் பொதுமக்களிடையே இன்று அடைந்துள்ள உயரிய நிலையை எய்தியிருக்கவில்லை. ஆனால் வள்ளுவரின் கருத்துகளைத் தமிழ் மக்களும் பிற நாட்டவரும் அறிந்து பயனடைய வேண்டும் என்னும் ஆர்வத்தால் வீரமாமுனிவர் திருக்குறளை ஆழ்ந்து கற்று, அதன் மெய்யறிவைக் கீழ்வரும் முறைகளில் உலகறியப் பறைசாற்றினார்:
- துறவு பூண்டிருந்த தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் காமத்துப் பாலை விட்டுவிட்டு, அறம், பொருள் என்ற இரு பால்களில் வரும் குறள் அனைத்தையும் இலத்தீனில் மொழிபெயர்த்து, அம்மொழியிலேயே ஒவ்வொரு குறளுக்கும் விளக்கம், அருஞ்சொற்பொருள் ஆகியவற்றை அளித்தார். குறளை அப்படியே இலத்தீன் அரிச்சுவடி முறையில் (transliteration) எடுத்து எழுதியிருக்கிறார். வீரமாமுனிவரின் இப்படைப்பை ஜி.யூ.போப் பதித்து வெளியிட்டார். ட்ரூ, கிரவுல், எல்லிஸ் போன்ற அறிஞரும் இம்மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தினர்.
- படித்த மேனாட்டு மக்கள் மட்டுமன்றி, புலவரல்லாத, செந்தமிழ் பயிலாத தமிழ் மக்களும் குறளைப் படித்துப் பயனடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், முனிவர் அக்காலப் பேச்சு நடையில் திருக்குறளுக்குப் பொருள், விளக்கவுரை மற்றும் அருஞ்சொற்பொருளுரை எழுதியுள்ளார்.
- குறளுக்குப் பரிமேலழகர் இயற்றிய உரையில் 200 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, செந்தமிழ் பயின்ற வேதியருக்குப் பயன்படும் வகையில் எளிய தமிழில் ஆக்கியுள்ளார். இந்நூலின் பிரதி ஒன்று சென்னை அரசு பழஞ்சுவடி நூலகத்தில் டி. 161 என்ற எண் பெற்றுள்ளதாக முனைவர் இராசமாணிக்கம் குறிப்பிடுகிறார்.
தமிழ் மறையாம் திருக்குறள் வீரமாமுனிவரோடு இரண்டறக் கலந்துவிட்டபடியால், அவர் இயற்றிய நூல்களில் அது மேற்கோளாய்ப் பல இடங்களில் வருவது வியப்பில்லை. இதைச் சற்று விரிவாகக் காண்போம்.
முனிவரின் நூல்களில் திருக்குறளும் திருக்குறள் கருத்துகளும்
வீரமாமுனிவர் திருக்குறளை மேற்கோள் காட்டுகின்ற நூல்களுள் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
- வேதியர் ஒழுக்கம்
- திருக்கடையூர் நிருபம்
- பரமார்த்த குருவின் கதை
- தமிழ்-இலத்தீன் அகராதி
- திருக்காவலூர்க் கலம்பகம்
- அடைக்கல நாயகி வெண்கலிப்பா
- கிளாவிஸ் இலத்தீன் இலக்கணம்
- தொன்னூல் விளக்கம்
- செந்தமிழ் இலக்கணம்
- தேம்பாவணி
முனிவர் திருக்குறளைப் போற்றியமைக்கு ஒரு சான்று
வீரமாமுனிவர் திருவள்ளுவர் மீதும் குறள் மீதும் கொண்ட ஈடுபாட்டைத் தொன்னூல் விளக்கத்தின் பொருளதிகாரத்தில் பதிகம் பற்றிப் பேசும்போது சூத்திரம் 149இல் அவர் கூறுவது நன்கு விளக்கும். அது வருமாறு:
“ | இதற்கெல்லாம் உதாரணம் ஆகும்படி திருவள்ளுவ நாயனார் பயன் ஒன்றெடுத்துத், தேற்றப் பொருள் வகைக்கு இயற்றமிழாய் விரித்துரைப்பப் பதிகமாவது. எவ்வகை நூலும் கல்லாது உணரவும், சொல்லாது உணர்த்தவும் வல்லவராகி, மெய்ஞ்ஞானத் திருக்கடலாகிய ஒரு மெய்க்கடவுள் தன் திருவடிமலரே தலைக்கு அணியெனக் கொண்டேத்தி, இருள் இராவிடத்து விளங்கிய ஒரு மீன் போலவும், மாலைச் சுரத்து அரிதலர்ந்த பதுமம் போலவும், மெய்யாம் சுருதி விளக்காது இருளே மொய்த்த நாட்டின் கண்ணும், கடவுள் ஏற்றிய ஞானத் திருவிளக்கு எறிப்பத் தெளிந்துணர்ந்து, எங்கும் ஒரு விளக்கென நின்று உயர்ந்த திருவள்ளுவர் உரைத்த பலவற்றுள் ஒன்றை நான் தெரிந்து உரைப்பத் துணிந்தேன்.
அந் நாயனார் தந்த பயன் என்னும் பெருங்கடல் ஆழத்தில் மூழ்கி, ஆங்குடை அருமணி எடுத்து ஒரு சிறு செப்பில் அடைத்தாற்போலத், திருவள்ளுவரது பயனெல்லாம் விரித்துப் பகரும்படி நான் வல்லவன் அல்லேன். ஆகையின், அக்கடற்றுறை சேர்ந்து ஒரு மணியெடுத்துக்காட்டல் உணர்ந்தேன். அவர் சொன்ன குறளின் ஒன்றே இங்ஙனம் நான் விரித்துரைப்பத் துணிந்தேன். அஃதாவது, மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன், ஆகுல நீர பிற என்பது. இல்லறம் துறவறம் என்றிவ் விரண்டினுள்ளும் அடங்கி நிற்கும், எல்லா அறங்களும், மனத்தின் தூய்மையாற் பெறும் பெருமையே தருமம் எனவும், மனத்தினுள் மாசு கொண்டவன் செய்யும் தவமும் தானமும், மற்றை யாவும் அறத்தின் அரவம் ஆவதன்றி, அறத்தின் பயனுள அல்ல எனவும், அக்குறள் இருபயன் இவை என விரித்துக் காட்டுதும். விரிப்பவே, மெய்யும் பொய்யும் விளக்கி, உட்பயன் தரும் மெய்யறத்தின் தன்மையே வெளியாய், இஃதொன்று உணர்ந்து நாம் அதற்கு ஒப்ப நடந்தால், இது வீடு எய்தும் வழியெனக் காணப்படும். பெரும் பொருள் நேர்ந்து பொய்ம்மணி கொள்வது கேடு அன்று ஆயினும், பொருளை நேர்ந்தும், உடலை வாட்டியும் உயிரை வருத்தியும் மேற்கதி வீட்டிற் செல்லாச் சில பொய் அறங்களை ஈட்டுவது, அதிலும் கேடு ஆம் அன்றே... |
” |
முனிவரின் நூல்களில் திருக்குறள் பயிலும் இடங்கள்
- வேதியர் ஒழுக்கம் நூலில் திருக்குறளின் பயன்பாடு
இந்த நூலில் கண்ணுடையர் (குறள் 393), அஞ்சுவது (குறள் 428), அகர முதல (குறள் 1), தன்குற்றம் (குறள் 436), சொல்லுக (குறள் 645) ஆகிய குறள்கள் முறையே 4,9,16 என்னும் அதிகாரங்களிலும், 3,6 என்னும் சோதனைகளிலும் வருகின்றன.
- திருக்கடையூர் நிருபத்தில் திருக்குறளின் பயன்பாடு
இதில் நன்றே தரினும் (குறள் 113), எனைப்பகை (குறள் 207), பல்லார்பகை (குறள் 450) என்னும் மூன்று குறள்கள் வருகின்றன.
- பரமார்த்த குருவின் கதையில் திருக்குறளின் பயன்பாடு
தமிழ் மொழியை வெளிநாட்டவர் எளிதாகக் கற்கும் வண்ணம் நகைச்சுவையோடு பேச்சுத் தமிழில் வீரமாமுனிவர் படைத்த பரமார்த்த குருவின் கதை என்னும் நூலில் அறத்தால் வருவதே இன்பம் (குறள் 39) என்னும் குறள் வருகிறது.
- தமிழ்-இலத்தீன் அகராதியில் திருக்குறளின் பயன்பாடு
இந்நூலில் அகர முதல (குறள் 1) என்னும் செய்யுள் அகரத்திலும், யாகாவாராயினும் (குறள் 127) என்பது காக்கிறது என்ற சொல்லிலும் வருகின்றன.
- திருக்காவலூர்க் கலம்பகம் நூலில் திருக்குறளின் பயன்பாடு
“ | யாழ்குரலே இனிதென்னா ஈன்றாட்டுத் தன்மகன்சொல் தாழ்குரலே இனிதென்ற தகைமைத்தோ மனமிரங்கி |
” |
என்ற தாழிசைப் பாடலில் குழலினிது (குறள் 66) என்னும் பாடல் ஒலிப்பதைக் கேட்கலாம்.
- அடைக்கல நாயகி வெண்கலிப்பா நூலில் திருக்குறளின் பயன்பாடு
“ | தேம்பியழும் கண்அருவி திருக்கையால் துடைத்தனையே ஓம்பியழுந் திட்டனபல் உயிர்வடுஉள் ஆற்றினையே |
” |
என்னும் பாடலில் தீயினால் சுட்டபுண் (குறள் 129) என்னும் பாடல் மிளிர்வதைக் காணலாம்.
- கிளாவிஸ் இலத்தீன் இலக்கணத்தில் திருக்குறளின் பயன்பாடு
இந்நூலில் 14 குறள்கள் வருகின்றன. அவை வருமாறு:
- அகர முதல (குறள் 1)
- கற்றதனால் (குறள் 2)
- சிறைகாக்கும்(குறள் 47)
- கொன்றன்ன (குறள் 109)
- யாகாவா (குறள் 127)
- பிறர்க்கின்னா (குறள் 310)
- வியவற்க (குறள் 439)
- பல்லார் (குறள் 450)
- நிலத்தியல்பால் (குறள் (452)
- கடல் ஓடா (குறள் 496)
- சலத்தால் (குறள் 660)
- ஒலித்தக்கால் (குறள் 763)
- ஏரினும் (குறள் 1038)
- எற்றிற்கு (குறள் 1080)
இவற்றுள் கடல் ஓடா இருமுறை வருகிறது. அகர முதல, கற்றதனால் ஆகிய இரண்டு மட்டும் இலத்தீன் மொழியாக்கம் பெறுகின்றன.
- தொன்னூல் விளக்க நூலில் திருக்குறளின் பயன்பாடு
இந்த நூலில் 28 குறள்கள் வருகின்றன.
- செந்தமிழ் இலக்கணம் நூலில் திருக்குறளின் பயன்பாடு
27 குறள்கள் இந்நூலில் வருகின்றன. அவற்றுள் பெரும்பான்மையும் இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- தேம்பாவணியில் திருக்குறளின் பயன்பாடு
தலைசிறந்த காப்பியமாகிய தேம்பாவணியில் 74 குறள்கள் பயின்று வருகின்றன. சில குறள்கள் பல முறை எடுத்தாளப்பட்டுள்ளன.
மேலும் காண்க
- வீரமாமுனிவரின் தமிழ்க் கையெழுத்து
- வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
- வீரமாமுனிவரின் பெயர்கள்
ஆதாரம்
முனைவர் மறைத்திரு இராசமாணிக்கம், சே.ச., வீரமாமுனிவர்: தொண்டும் புலமையும், தே நொபிலி ஆராய்ச்சி நிறுவனம், இலயோலாக் கல்லூரி, சென்னை 600 034. முதல் பதிப்பு: 1996. இரண்டாம் பதிப்பு: 1998.