வீரமாமுனிவரின் தமிழ்க் கையெழுத்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வீரமாமுனிவரின் தமிழ்க் கையெழுத்து என்னும் இக்கட்டுரை ”இத்தாலியத் தமிழ் வித்தகர்” என்னும் சிறப்புப் பெயர் பெற்ற தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் (1680-1747) கைப்பட எழுதிய சில மூல ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. இது குறித்த ஆய்வை மேற்கொண்ட முனைவர் சி. இராசமாணிக்கம் அவர்களின் முடிவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகிறது.

செம்பகனூர்ப் பழஞ்சுவடி நூலகக் கண்டுபிடிப்பு

தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் கல்விப் பணி புரிவதில் ஊக்கமுடம் செயல்பட்டு வருகின்ற கிறித்தவக் குழுவினருள் சேசு சபை துறவிகள் சிறப்பிடம் வகிக்கின்றனர். தலைசிறந்த தமிழறிஞரான வீரமாமுனிவர் சேசு சபைத் துறவியாகவே இந்திய நாட்டை வந்தடைந்து, தமிழகத்தில் பணியாற்றினார். சேசு சபையினருக்கு உரித்தான செம்பகனூர்ப் பழஞ்சுவடி நூலகத்தில் முனிவரின் நூல்கள் தம் மூல வடிவத்தில் உள்ளன.

கொடைக்கானல் மலைமீது அமைந்த செம்பகனூர்ப் பழஞ்சுவடி நூலகத்தில் வீரமாமுனிவர் இயற்றிய தமிழ்-இலத்தீன் அகராதிப் பிரதி ஒன்று உள்ளது. பார்த்தாலே பழங்கால ஏடு என்ற முறையில் அதன் தோற்றமும் வடிவும் அமைந்துள்ளன. அந்த ஏட்டில் அகராதிப் பகுதிக்குப் பின்னிணைப்பாக வீரமாமுனிவர் பரமார்த்த குருவின் கதை என்னும் புனைவை இணைத்துள்ளார்.

இந்த அகராதி நூலை முனிவர் 1744இல் (அதாவது தாம் இறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னால்) இயற்றினார். ஆனால் பரமார்த்த குருவின் கதையை அவர் ஏற்கெனவே 1728இல் எழுதிய "வேத விளக்கம்" என்னும் நூலில் பயன்படுத்தியிருந்தார். ஆகவே அக்கதை 1728க்கு முன் தோன்றியிருக்க வேண்டும். முனிவர் அதைச் செம்மைப்படுத்தி, 1744இல் இயற்றிய தமிழ்-இலத்தீன் அகராதியில் இணைத்திருப்பார் என்று தெரிகிறது.

அகராதி என்றால் சொல்லுக்குச் சொல் பொருள் தருகின்ற கருவி என்பது இன்றைய பார்வை. ஆனால், வீரமாமுனிவர் தாம் வகுத்த அகராதியில் தரும் சொற்கள் எவ்வாறு பயன்பாட்டில் வருகின்றன என்பதை எடுத்துக்கூற விரும்பினார். எனவே, நகைச்சுவை மிகுந்த பரமார்த்த குருவின் கதையைப் பின்னிணைப்பாக அளித்தார்.

தாம் இயற்றிய பரமார்த்த குருவின் கதையை வீரமாமுனிவரே இலத்தீனிலும் மொழிபெயர்த்தார். முனிவர் அக்கதையை ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பாதி தமிழும் மறு பாதி அதன் மொழிபெயர்ப்பாக இலத்தீனும் என்று அமைத்தார். அக்கதையைத் தமிழ்-இலத்தீன் அகராதியின் பின்னிணைப்பாகப் பதித்தார். இலத்தீனில் அமைந்த பரமார்த்த குரு கதைப் பகுதியின் கையெழுத்தும், முனிவர் தம் கைப்பட இலத்தீன் மொழியில் எழுதி உரோமைக்கு அனுப்பிய கடிதங்களில் காணப்படும் கையெழுத்தும் ஒன்றே என்பதை இராசமாணிக்கம் கண்டறிந்தார்.

அதுபோலவே, தமிழ்-இலத்தீன் அகராதியில் வருகின்ற கையெழுத்து எழுத்தர் ஒருவரின் கையெழுத்தாக இருந்த போதிலும், அதில் வருகின்ற எண்ணற்ற திருத்தங்கள் வீரமாமுனிவரே கைப்படச் செய்தவை என்பதும் புலனாயிற்று. மேலும், இத்திருத்தங்களில் முதலில் தமிழ்ச்சொல் வர, அதன் விளக்கம் அதே கையெழுத்தில் இலத்தீனில் வந்தபடியால், முனிவரது தமிழ்க் கையெழுத்து பிடிபட்டது.

இதே தமிழ்க் கையெழுத்தில் பரமார்த்த குருவின் ஆறாம் கதை அமைந்திருப்பதும், அதே கையெழுத்தில் இலண்டனில் உள்ள சுவடியில் தேம்பாவணி மூலமும் உரையும் அமைந்திருப்பதும் தெளிவாயிற்று.

வீரமாமுனிவரின் தமிழ்க் கையெழுத்து அடங்கிய நூல் மூலங்கள்

ஆகவே, நம்மிடம் வீராமாமுனிவரின் (இலத்தீன் மற்றும்) தமிழ்க் கையெழுத்து அடங்கிய கீழ்வரும் மூலங்கள் கிடைத்துள்ளன:

  • முனிவர் கைப்பட எழுதி உரோமைக்கு அனுப்பிய இலத்தீன் கடிதங்கள்
  • தேம்பாவணி மூலமும் உரையும்
  • பரமார்த்த குருவின் ஆறாம் தமிழ்க் கதை
  • பரமார்த்த குருவின் கதைகள் 2, 3, 4, 5, 6, இலத்தீன் மொழியில்.

தமிழக அரசின் தடயவியல் துறை வழங்கிய சான்று

வீரமாமுனிவரின் தமிழ்க் கையெழுத்தும் இலத்தீன் கையெழுத்தும் நம்மிடம் கிடைத்திருப்பதை உறுதிசெய்யும் வண்ணம் அறிஞர் இராசமாணிக்கம் அவர்கள் தமிழக அரசின் தடயவியல் துறையினரிடம் ஏடுகளை அளித்து சோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவர்களும் பல மாதங்களாக ஆராய்ந்து, அவை முனிவர் கைப்பட எழுதியவையே என்று சான்றிதழ் அளித்தனர்.

ஆய்வு முடிவுகள்

இராசமாணிக்கம் அவர்களின் ஆய்விலிருந்து தெரிய வருபவை:

  • வீரமாமுனிவர் கைப்பட எழுதிய ஏடுகளாக நம்மிடம் இருப்பவை அவர் உரோமைக்கு இலத்தீனில் எழுதிய கடிதங்கள்;
  • அவர் பாடிய தேம்பாவணி அவர்தம் கையெழுத்தில் உள்ளது;
  • அவர் இயற்றிய தமிழ்-இலத்தீன் அகராதியும் அதன் பின்னிணைப்பாக அவர் சேர்த்த பரமார்த்த குருவின் கதையும் பெருமளவில் அவர்தம் இலத்தீன் மற்றும் தமிழ்க் கையெழுத்தில் உள்ளது.

மேலும் காண்க

ஆதாரம்

முனைவர் மறைத்திரு ச. இராசமாணிக்கம், சே.ச., வீரமாமுனிவர்: தொண்டும் புலமையும், தே நொபிலி ஆராய்ச்சி நிலையம், இலயோலாக் கல்லூரி, சென்னை 600 034. முதல் பதிப்பு: 1996; இரண்டாம் பதிப்பு: 1998.