ராஜன் சோமசுந்தரம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ராஜன் சோமசுந்தரம் |
---|---|
பிறந்தஇடம் | திருவாரூர், இந்தியா |
பணி | இசையமைப்பாளர் வயலின் கலைஞர் |
அறியப்படுவது | இசையமைப்பாளர் வயலின் கலைஞர் |
ராஜன் சோமசுந்தரம் அமெரிக்காவில் ராலேயில் உள்ள இசையமைப்பாளர், வயலின் கலைஞர் மற்றும் இசை தயாரிப்பாளர் ஆவார். கம்போஸர் ராஜன் என்று இசை உலகில் அறியப்படுகிறார். 2000 வருடங்களுக்கு முன்பாக தமிழில் இயற்றப்பட்ட சங்க கால கவிதைகளுக்கு முதன்முறையாக சிம்பொனி முறையில் இசைக்கோர்வைகளை உருவாக்கிய பெருமை பெற்றவர். இந்த இசைக்கோர்வையை டர்ஹாம் சிம்பொனி மற்றும் முக்கிய சர்வதேச இசைக்கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கினார். இந்த ஆல்பம் ஜூலை 2020 இல் அமேசானில் 'சர்வதேச இசை ஆல்பங்கள்' பிரிவின் கீழ் சிறந்த #10 ஆல்பமாக விளங்கியது. தமிழகத்தின் முன்னணி நாளேடான தி ஹிந்து இந்த இசைக்கோர்வை உலக இசையில் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வு என்று பாராட்டியுள்ளது. ராஜன் ஜிங்கிள்ஸ், கார்ப்பரேட் விளம்பரங்கள் மற்றும் 'வெல்கம் டு நார்த் கரோலினா' உள்ளிட்ட ஆவணப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தமிழ்நாட்டில் சங்கீத மும்மூர்த்திகளும் தோன்றிய திருவாரூரில் பிறந்த ராஜன், 9 வயதிலிருந்தே கர்நாடக இசை கற்கத் தொடங்கினார். பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். [1]
இசைப்பணிகள்
ஸ்வாத்யா
2017 ல், ராஜன் 'ஸ்வாத்யா' என்ற கர்நாடக சங்கீதத்தில் ஒரு புதிய ராகத்தை உருவாக்கினார். 'மாயா- தி ரிப்ளெக்ஷன் ஆஃப் செல்ஃப்' என்ற பாடலை இந்த புதிய ராகத்தில் உருவாக்கி வெளியிட்டார். 2018 ல், அத்வைத இலக்கியமான அஷ்டவக்ர கீதா என்ற சமஸ்கிருத மொழியில் அமைந்த பாடலுக்கு 'ஸ்வாத்யா' ராகத்தில் சாக்சி I என்ற இசைக்கோர்வையை வெளியிட்டார்.
யாதும் ஊரே
சிகாகோவில் 2019 ஆம் ஆண்டு நடந்த 10வது உலகத் தமிழ் மாநாட்டின் அதிகாரப்பூர்வ பாடலுக்கு சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் எழுதிய 2000 ஆண்டு பழமையான யாதும் ஊரே என்ற கவிதைக்கு இசை வடிவத்தை உருவாக்கினார். [2] ஒற்றுமை மற்றும் சமத்துவத்திற்கு அழைப்பு விடுக்கும் மிகவும் முற்போக்கான பழங்காலக் கவிதைகளில் ஒன்றிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல வகையான இசையை உள்ளடக்கியதாக பாடலை உருவாக்கினார். பல்வேறு இசை வடிவங்கள், இனங்கள் மற்றும் மொழிகளின் பல சர்வதேச இசைக்கலைஞர்களை கொண்டு பாடலை உருவாக்கினார். பாடகர்கள் கார்த்திக் , பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் பல்வேறு சர்வதேச கலைஞர்களுடன் இணைந்து பாடலைப் பாடினர். [3] தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தைச் சித்தரிக்கும் வகையில் யாதும் ஊரே கவிதையை பாடலாகத் தேர்ந்தெடுத்ததைத் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பாராட்டியுள்ளார். [4]
சங்க கால கவிதைகளுக்கு சிம்பொனி
ஜனவரி 2020 இல், சங்க கால கவிதைகளுக்கு முதன்முறையாக டர்ஹாம் சிம்பொனி மற்றும் முக்கிய சர்வதேச இசைக்கலைஞர்களுடன் இணைந்து Sandham-Symphony Meets Classical Tamil என்ற தலைப்பில் இசைத்தொகுப்பினை வெளியிட்டார். இந்த ஆல்பம் ஜூலை 2020 இல் அமேசானில் 'சர்வதேச இசை ஆல்பங்கள்' பிரிவின் கீழ் சிறந்த #10 ஆல்பமாக விளங்கியது. தமிழகத்தின் முன்னணி நாளேடான தி ஹிந்து இந்த இசைக்கோர்வை உலக இசையில் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வு என்று பாராட்டியுள்ளது. [5]
வெண்முரசுக்கு இசையாஞ்சலி
எழுத்தாளர் ஜெயமோகனால் தமிழில் எழுதப்பட்ட உலகின் மிக நீண்ட நாவலான வெண்முரசு நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்ட A Musical Tribute to Venmurasu என்ற திரைப்படத்திற்கு ராஜன் இசையமைத்துள்ளார். வெண்முரசு நாவல்களில் ஒன்றான நீலத்தில் இருந்து சில உயர்ந்த கவிதை வரிகளைத் தேர்ந்தெடுத்து இந்த இசைக்கோர்வையை உருவாக்கினார். கமல்ஹாசன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி மற்றும் ராஜன் சோமசுந்தரம் ஆகியோர் பாடிய 12 நிமிட இசை தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் ஒரு இணைய பொது நிகழ்வில் வெளியிட்டார். இயக்குனர் வசந்தபாலன் மற்றும் எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில் நாடன் ஆகியோர் இந்த தொகுப்பின் பாடல்களில் அமைந்த மெல்லிசை, தாளம் மற்றும் கம்பீரத்தின் தனித்துவமான கலவையைப் பாராட்டினர்.
பிற உருவாக்கங்கள்
ராஜனின் உருவாக்கத்தில் உக்ரேனிய பாடகர் கிரா மஸுர் பாடிய பாப்-ராக் பாடலான 'கேர்ல் பவர்' ஜூன் 2021 ல் சிகாகோ எஃப்எம்மில் அதிகம் கேட்கப்பட்ட டாப்#10 பாடலாக இருந்தது.
தமிழில் முக்கியமான சமகால கவிஞரான அபி பற்றிய ஆவணப்படமான 'அந்தர நடை' க்கு ராஜனால் உருவாக்கப்பட்ட பின்னணி இசை பெரும் வரவேற்பைப் பெற்றது.
மகாகவி பாரதியாரின் 'ஊழிக்கூத்து' என்ற பாடலுக்கு இசைவடிவம் வழங்கியுள்ளார். சத்யப்பிரகாஷ் அந்த பாடலைப் பாடியுள்ளார். அதை பரதக்கலைஞர் ரூபா பிரபு கிருஷ்ணனுடன் இணைந்து நாட்டிய வடிவத்திலும் வெளியிட்டுள்ளார்.
ஜனவரி 2023-ல், ராஜனின் இசையில் உருவான "கடவுள் தொடங்கிய இடம்" என்ற பாடல் வெளியிடப்பட்டது. புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வை மையமாகக் கொண்ட "கடவுள் தொடங்கிய இடம்" என்ற, ஆனந்த விகடனில் தொடராக வந்த நாவலை எழுதிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு உருவான இப்பாடலை பாடகர்கள் ஶ்ரீநிவாஸ், விதுசாயினி, சின்மயி சிவக்குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய ஆன்மீக, தத்துவ சாரம் கொண்ட மூன்று கவிதைகள் ராஜனின் இசையில், அவரின் 89- வது பிறந்தநாளன்று april 2023-ல் பாரதி பாஸ்கர், பவா செல்லத்துரை அவர்களால் இசைப்பாடலாக வெளியிடப்பட்டது. பாடகர் சத்யப்பிரகாஷ் பாடியிருக்கிறார்.
தமிழின் கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணன் அவர்களின் எழுத்துக்களை சிறப்பிக்கும் வகையில் கும்மிப் பாட்டு: கோபல்ல கிராமம் என்ற இசைக்கோர்வையின் உருவாக்கத்தில் இருக்கிறார்.
மேற்கோள்கள்
- ↑ "இணையத்தைக் கலக்கும் 'யாதும் ஊரே' கீதம்". பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
- ↑ "பூங்குன்றனார் பாடலை பூரிக்கவைத்த தமிழர்!". Kamadenu, Tamil Hindu. பார்க்கப்பட்ட நாள் 2019-10-07.
- ↑ "உலக கலைஞர்களின், கணீர் குரலில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு பாடல்". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
- ↑ "யாதும் ஊரே". Sramakrishnan.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
- ↑ "A Major event in the world of Music". The Hindu Music Review. The Hindu Tamil. பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.
வெளி இணைப்புகள்