யூ. எல். அலியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

உதுமா லெவ்வை அலியார் (பிறப்பு: பெப்ரவரி 21 1946) இலங்கையின் மூத்த எழுத்தாளரும், கல்வியாளரும், ஊடகவியலாளருமாவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில், சம்மாந்துறையைச் சேர்ந்த உதுமா லெவ்வை தம்பதியினரின் புதல்வரான அலியார் சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயம், மட்டக்களப்பு அரசினர் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியாவின் மக்குவாரி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். கல்வித்துறை டிப்ளோமா, ஊடகத்துறை டிப்ளோமா, கல்வியியல் முதுமாணி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர் மக்குவாரி பல்கலைகழகத்தில் Dip. in. EMIS பட்டத்தினையும் பெற்றுள்ளார். வடக்கு-கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றித் தற்போது ஓய்வுபெற்றுள்ள அலியாரின் மனைவி பெயர் பௌசியா. இவர்களுக்கு முகம்மது ஹசீன், முர்சிதா செரீன், முகம்மது பிர்னாஸ் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

எழுத்துத்துறை

பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே எழுத்துத்துறை ஈடுபாடு மிக்கவராகவும், 1961, 1962 ஆம் ஆண்டுகளில் 'கலைமுரசு' மாத இதழில் உதவியாசிரியராகவும் செயற்பட்டுள்ளார். இவரின் முதலாவது ஆக்கம் 1965 அக்டோபர் 10 'சுதந்திரன்' பத்திரிகையில் 'ஈழநாடும் கண்ணகி வழிபாடும்' எனும் தலைப்பில் பிரசுரமானது. ஆக்க இலக்கியங்களை இவர் படைக்காவிடினும் கூட அறிவுசார் கட்டுரைகள் முன்னூற்றுக்கும் மேல் எழுதியுள்ளார்.

எழுதியுள்ள அச்சு ஊடகங்கள்

சுதந்திரன், ஈழநாடு, ஈழகேசரி, தினபதி, வீரகேசரி, சிந்தாமணி, தினகரன், மணிவிளக்கு(சென்னை), வீக்கண்ட் எக்ஸ்பிரஸ், இஸ்லாமிய சிந்தனை, புது ஊற்று, கலாமதி, கலை அமுதம் போன்றவற்றில் எழுதியுள்ளார்.

ஊடகத்துறை ஈடுபாடு

  • 1968, 1969, 1970, 1971 தினகரன் சம்மாந்துறை நிருபராக இவர் பகுதி நேரமாகப் பணியாற்றினார்.
  • 1997, 1998, 1999, 2000 ஆம் ஆண்டுகளில் வீக்கண்ட் எக்ஸ்பிரஸ் வாராந்தப் பத்திரிகையின் அம்பாறை / கல்முனை செய்தியாளராகப் பணியாற்றினார்.
  • கொழும்புப் பல்கலைக்கழத்தில் 1997 இல் பத்திரிகையியல் டிப்ளோமா நெறியைப் பூர்த்தி செய்து விசேட சித்தி பெற்றார்.
  • தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பத்திரிகையியல் டிப்ளோமா நெறிக்கு 2002-2003ஆம் ஆண்டுகளில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

ஆய்வுக் கட்டுரைகள்

யூ. எல். அலியார் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அனைத்துலக மகாநாடுகளில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டதும், வாசிக்கப்பட்டதுமான சில கட்டுரைத் தலைப்புகளாவன

  • அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மகாநாடு, புதுக் கல்லூரி, சென்னை: 1974, ஆய்வுக்கட்டுரை வாசிக்கப்பட்டது. "தமிழ்ப் பெருங்காப்பிய வரிசையில் மணியென மிளிரும் கவினுறு சீறா"
  • அனைத்துலக தமிழிலக்கிய ஆராய்ச்சி மகாநாடு மட்டக்களப்பு: 1976. ஆய்வுக்கட்டுரை வாசிக்கப்பட்டது. "மட்டக்களப்பு தென்பிரதேசத்தில் பாரம்பரிய உழவுத் தொழிலில் மொழி வழக்கு"
  • அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மகாநாடு, காயல்பட்டணம், தமிழ்நாடு: 1978. ஆய்வுக் கட்டுரை சமர்ப்பணம். "இலங்கையில் முஸ்லிம் குடியிருப்புக்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள்"
  • அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மகாநாடு. கொழும்பு : 1979. ஆய்வுக்கட்டுரை வாசிக்கப்பட்டது. "இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்று நுன் முயற்சிகள் பற்றிய கண்ணோட்டம்"
  • அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மகாநாடு. சென்னை, தமிழ்நாடு: 1999. ஆய்வுக்கட்டுரை வாசிக்கப்பட்டது. "இலங்கை பாடசாலைப் பொதுக் கலைத்திட்டத்தில் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தின் செல்வாக்கு வளர்ச்சி"

கல்விசார் நடவடிக்கைகளின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தலைப்புகள்

  • கல்வியியல் முதுமாணிப் பட்டத்துக்காக செய்யப்பட்ட ஆய்வு (1981-83) யாழ் பல்கலைக்கழகம். "இலங்கையில் மத்ரசாக் கல்வி முறையின் தோற்றமும் வளர்ச்சியும்".
  • கல்விப் பட்டபின் டிப்ளோமாவுக்காக செய்யப்பட்ட ஆய்வு. கொழும்புப் பல்கலைக்கழகம் 1976 "கிழக்கிலங்கையில் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி"
  • EMIS நெறிக்காக சமர்ப்பிக்கப்பட்ட செயற்திட்டம் 1996. அவுஸ்திரேலியா மக்குவாரி பல்கலைக்கழகம், சிட்னி "Introducing EMIS in school in the North Eastern Province In SriLanka”

எழுதிய நூல்கள்

இவர் இதுவரை நான்கு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

  • கல்வியியல் நோக்கு. (1995) ISBN 955-95831-0-7
  • சர்வதேச நினைவு தினங்கள் (1998) ISBN 955-95831-1-5
  • இரு நூற்றாண்டுகளில் இலங்கையிற் கல்வி (2000) ISBN 955-95831-2-3
  • நாவலர் ஈழமேகம் பக்கீர்தம்பி நினைவு சுவடுகள் (2005) ISBN 955-95831-3-1

பெற்ற விருது

இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு இலங்கை அரசு 2001ஆம் ஆண்டில் 'கலாபூஷணம்' விருது வழங்கி கௌரவித்துள்ளது

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=யூ._எல்._அலியார்&oldid=15366" இருந்து மீள்விக்கப்பட்டது