சம்மாந்துறை
சம்மாந்துறை
Sammanthurai සමන්තුරේ பழைய மட்டக்களப்பு | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | அம்பாறை |
பிரதேச செயலகம் | சம்மாந்துறை |
மக்கள்தொகை | 60,596 |
அரசு | |
• வகை | பிரதேச சபை |
பரப்பளவு | |
• மொத்தம் | 132.8 km2 (51.3 sq mi) |
• நிலம் | 131.6 km2 (50.8 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 69,601 (2,010) |
நேர வலயம் | ஒசநே+5:30 (நேர வலயம் #UTC + 6, F) |
இலங்கை அஞ்சல் குறியீடு | 32200 |
இடக் குறியீடு | 067 (SLT) |
சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். புவியியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை இலங்கையின் கிழக்குப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள்.
வரலாறு
அரேபியர்கள் இலங்கையில் வர்த்தகர்களாக அறிமுகமாவதற்கு முன்னர் ஆதம் மலையை (Adams Peak) தரிசிக்க வருகின்ற யாத்திரிகர்களாகவே அறியப்பட்டனர். அப்படி வந்தவர்கள் இங்குள்ள வாசனைத்திரவியங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளதை அறிந்தனர். அதனால் பின்னாட்களில் அவர்களின் வருகை வர்த்தக நோக்கத்தைக் கொண்டதாக அமைந்தது. அரேபியர் மத்தியதரைக்கடல் மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கூடாகச் செய்து வந்த வர்த்தகமும் அவர்களுக்குப் பரிச்சயமான வர்த்தகப் பாதைகளும் இந்தியாவினதும், இலங்கையினதும் அறிமுகத்தைக் கொடுத்தன. அவர்கள் காற்று வீசும் காலத்திற்கேற்ப வங்காள விரிகுடாவினூடாக இலங்கையின் கிழக்குக் கரையை அடைந்தனர். (அரேபியரின் முதல் பிரவேசம் இலங்கையின் எப்பகுதியில் இடம் பெற்றது என்பதில் வரலாற்று ஆசிரியளுக்கிடையில் கருத்து முரண்பாடு நிலவுகிறது.) இவர்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் காலங்களில் கட்டுமரக் கப்பல்கள் (பாய்க்கப்பல்), 'சம்பன்' எனப்படும் ஒருவகை வள்ளம், சிறிய படகுகள் ஆகியவை மூலம் வங்காள வரிகுடாவின் ஊடாகப் பயணித்து இலங்கையின் கிழக்குக் கரையை அடைந்து, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கின் சம்மாந்துறை வரையும் இயற்கையாக விரிந்து சென்ற வாவியினூடாகச் சென்று வாவியின் தென்திசையில் அமைந்திருந்த சம்பன்துறையில் தரைதட்டி, அங்கு வள்ளங்களைக் கட்டிவிட்டு தரைமார்க்கமாகச் சென்று ஆதம் மலையைத் தரிசித்தனர்.[1]
அரேபியரும் பாரசீகரும் துலுக்கர்களும் பட்டாணியர்களும் தென்கிழக்கில் மட்டக்களப்பு வாவி அல்லது ஆற்றின் உதவிகொண்டு வந்திருக்கின்றனர் என்பதற்கு 12 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டிருக்கும் அல்-இத்ரீசி, அல்-பூர்பானி, அபூசெய்யது என்னும் புகழ் பெற்ற அரேபிய புவியியலாளர்களின் குறிப்புக்கள் சான்றுகளாக உள்ளன.[2] அண்மைக்காலம் வரை தென்கிழக்கு மட்டக்களப்பு என்றே அழைக்கப்பட்டு வந்தது.
மட்டக்களப்பு வாவியின் தென்கோடிக்கப்பால் உள்ள பகுதியே ஒல்லாந்தர் காலம் வரைக்கும் மட்டக்களப்பு என்னும் பெயரால் அழைக்கப்பட்டதென்றும், ஒல்லாந்தர் தமது கப்பற் பிரயாண வசதிக்கேற்றதாக வாவியின் வடக்கேயுள்ள கடல் வாயினைத் தெரிந்து, அவ்விடத்திலிருந்த புளியந்தீவிலே கோட்டையினை அமைத்த பின்னரே மட்டக்களப்பென்ற பெயர் வாவியின் வடபகுதிக்கும் சென்றதென்று அறிகிறோம். இலங்கையின் சிறப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலிருந்து திரண்டு வந்த முற்குகர் கூட்டத்தினர், ஈழத்தின் கிழக்குக் கடல் வழியாக வந்து உப்புநீர் ஏரியொன்றின் ஊடாக நாட்டினுள் புகுந்து தமது ஓடங்களைச் செலுத்தினர் என்றும், தெற்கு நோக்கி நீண்ட தூரம் சென்ற அவரகளது ஓடங்கள் தரைதட்டியதும் அவ்வேரியின் எல்லைக்குத் தாம் வந்து விட்டதை அறிந்து அப்பகுதிக்கு மட்டக்களப்பு (களப்புமட்டம் - வாவியின் எல்லை) என்று பெயரிட்டனர் என்றும் வழங்குகின்ற கேள்விச் செய்தி இக் கருத்தையே வலியுறுத்துவதாகும்.[3]
15 ஆம் நூற்றாண்டு வரையும் வாவியின் தென்பகுதியே மட்டக்களப்பு எனப் பெயர் பெற்றிருந்த வரலாற்றை வீரமுனைச் செப்பேடு, சீர்பாதர்வரன்முறைக் கல்வெட்டு, கண்ணகி வழக்குரை காதை என்பன குறித்துள்ளன.[4]
மட்டக்களப்பின் துறையாக சம்மாந்துறையே விளங்கியது. சம்மாந்துறை என்ற பெயர் 'ஹம்பன்' என்னும் சுமேரிய மொழிச் சொல்லின் திரிபாகும். அதன் பொருள் 'கப்பல் கட்டுமிடம்' என்பதாகும்.[5]
இலங்கையில் இப்போதும் சம்மன்காரர்கள் என்று அழைக்கப்படும் மக்கள் இருக்கின்றனர். இவர்களை சிங்களவர்கள் 'ஹம்பாங்காரயா' என்று அழைக்கின்றனர். ஹம்பாந்தோட்டை என்னும் ஊரும், சம்மாந்துறை என்னும் ஊரும் இலங்கையின் தென்பகுதியில் நிலரீதியாகத் தொடர்புபட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கொழும்பில் ஆதியில் முஸ்லிம்கள் வாழ்ந்த இடம் சம்மான்கோட்டை என்று அழைக்கப்பட்டு வருகிறது. அங்கு அமைந்திருக்கும் அழகிய பள்ளிவாசல் 'சம்மான்கோட்டைப் பள்ளி' என்றும் அழைக்கப்படுகிறது.[6]
காசியப்ப மன்னன் இலங்கையின் வடக்கில் வல்லிபுரம், கிழக்கில் சம்மாந்துறை, மேற்கில் களனி போள்ற இடங்களில் இருந்த துறைமுகங்களைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தான் என அறியமுடிகிறது. சம்மாந்துறை கப்பல் கட்டும் துறைமுகமாகத் திகழ்ந்தது என சேர் எமெர்சன் டெனன்ட் குறிப்பிட்டிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கதாக உள்ளது. இன்றும் கூட சம்மாந்துறையில் இரண்டு கிராமசேவகர் பிரிவுகள் மட்டக்களப்புத் தரவை-01, மட்டக்களப்புத் தரவை-02 என்று அழைக்கப்படுகின்றமை இதற்குச் சிறந்த ஆதாரமாகும். சம்மாந்துறை பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், தபால் நிலையம், மாவட்ட வைத்தியசாலை ஆகியன மட்டக்களப்புத் தரவையிலேதான் அமைந்துள்ளன. மட்டக்களப்புத் தரவை, முக்குவர் வட்டை ஆகிய பிரதேசங்களைத் தாண்டி சம்மாந்துறையின் அல்லை களப்புப் பகுதியை நோக்கிச் செல்லும் போது அங்கு சேறடர்ந்த களப்பகுதி காணப்படுகிறது. இது மட்டக்களப்பு வாவியுடன் இணையும் பகுதியாகவும் உள்ளது. அல்லை சதுப்பு நிலப்பகுதியும் அதனை அண்டிய சேவகப்பற்று வயற்காணிகளும் முன்னர் நிலப்பரப்பாகவே இருந்தன. பின்னர் காலப்போக்கில் வண்டல் மணலால் மூடப்பட்டுள்ளன. இந்த வயற்காணிகளில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தற்போதும் வழமையாகக் காணப்படுகிறது. இன்று சம்மாந்துறை தூர்ந்துபோன, கைவிடப்பட்ட துறைமுகமாக இருப்பதற்கு அந்நிய ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணமாகும். அத்துடன் இது நேரடியாகக் கடலுடன் சேராத களப்புசார் துறையாகக் காணப்பட்டதையும் குறிப்பிடலாம். முதியோர்களின் வாய்வழித் தகவல்களின்படி, சம்மாந்துறையையும் காரைதீவையும் ஒரு காலத்தில் களப்பில் சேரும் நீர் பிரித்திருந்ததாகவும், மாவடிப்பள்ளி வரையிலும் தரைவழித் தொடர்பு இருந்ததாகவும், அதற்கப்பால் காரைதீவை அடைய ஓடங்களைப் பயன்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.[7]
சம்மாந்துறை கப்பல் கட்டும் துறைமுகமாகவும், பழுதுபார்க்கும் இடமாவும் விளங்கியதனால், ஆதம் மலையைத் தரிசித்து விட்டுத் திரும்பியவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்றை எதிர்பார்த்து சம்மாந்துறையை அண்மித்த பகுதிகளில் அல்லது இறங்குதுறையாகவும், பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் விளங்கிய கிட்டங்கி, பட்டினமாகத் திகழ்ந்த மண்டூர் ஆகிய இடங்களில் தங்கியிருந்தனர் எனத் தெரிய வருகிறது.
குடி வரலாறு
1940 களில் சம்மாந்தறையில் 16 குடிகள் காணப்பட்டன [8]. பிற்காலத்தில் சம்மாந்துறையில் 33க்கு மேற்பட்ட குடிகள் காணப்பட்டிருந்தாலும் தற்போது 31 குடிகளே வழக்கில் உள்ளன.
- சுல்த்தான் பிள்ளை குடி
- ஆதம் பட்டானி குடி
- செட்டிப்புள்ள குடி
- மாந்தரா குடி
- மாப்பிள்ளை மரைக்கார் குடி
- கோசப்பா குடி
- சின்னப்படையான குடி
- நெய்ன ஓடாவி குடி
- சாயக்காரன் குடி(உலவிப் போடி குடி)
- குறைசிக் குடி (தேன்முதலிக் குடி) - கொஸ்கொட குடி
- கணக்கன் கத்தர குடி
- மாமனாப் போடி குடி
- மலையாளத்து லெவ்வை குடி (அழகு வெற்றிலை குடி)
- மூத்த நாச்சியார் குடி
- பட்டிசிங்கி பவள ஆராய்ச்சி குடி
- மடத்தடி குடி
பள்ளிவாசல்களின் வரலாறு
சம்மாந்துறையில் ( சாம்பான் துறை) 40ற்கும்மேற்பட்ட பள்ளிவாயில்களும் ஸியாரங்களும் இருக்கின்றன.
- முகையதீன் பள்ளி (12ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது) (சின்னப்பள்ளி)
- பெரிய பள்ளி (15ஆம் நூற்றாண்டு) கோஸப்பா பள்ளி)
- கலந்தரப்பா பள்ளி (8ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது)
- குருந்தையடியப்பா பள்ளி
- காட்டவுலியா பள்ளி
- வீரையடியப்பா பள்ளி
- மஸ்ஜிதுல் தைக்கிய்யா
- மஸ்ஜதுல் உம்மா (புதுப்பள்ளி , மதரஜா பள்ளி)
- மஸ்ஜிதுல் ஸலாம்
- மஸ்ஜிதுல் அழ்பர்
- மஸ்ஜிதுல் ஜாரியா
- மஸ்ஜிதுல் ஜலாலியா
- மஸ்ஜிதுல் கைர்
- 2 மஸ்ஜிதுல் நகர்
- மஸ்ஜிதுல் பதஹ்
- மஸ்ஜிதுல் நூரிய்யா
இசுலாமும் இசுலாமிய கலாச்சாரமும்
சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள 51 பள்ளிவாசல்களையும் மற்றும் மத்ரசதுல் தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியும்[9], அல் ஹசனாத் குர் ஆன் மனனக்கல்லூரியும் ஒரு நம்பிக்கையாளர் சபையூடாக நிருவாகித்து வருகின்றது. மஜ்லிஸ் அஷ்ஷரா ஊராளுமன்றமாகவும், நம்பிக்கையாளர் சபை ஒரு மந்திரிசபை போன்றும் ஒவ்வொரு ஜமாஅத் நிருவாகங்களும் மாநில அமைப்பாகவும் செயற்பட்டுவருவதை அவதானிக்கலாம். மஜ்லிஸ் அஷ்ஷராவின் அமீர் (தலைவர்) சம்மாந்துறையில் அதியுயர் சபையின் அமீர் ஆகையால், இவர் சம்மாந்துறையின் சமூகத் தலைவராகவும் கணிக்கப்படுகின்றார். மஜ்லிஸ் அஷ்ஷரா அமைப்பு நம்பிக்கையாளர் சபையைத் தெரிதல், வரவு செலவுத் திட்டங்களை அங்கீகரித்தல், கணக்காய்வு அறிக்கைகளைப் பரிசீலித்தல், சமய நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லல், சமூகங்களுக்கிடையில் இன நல்லுறவை ஏற்படுத்தல், மிக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளல் என்பனவாகும்.
கல்வி
சம்மாந்துறையில் ஆரம்பப் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகம் வரை பலவகையான கல்விக்கூடங்கள் உள்ளன. அவையாவன:
- தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பிரிவின் வளாகம்[10]
- சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரி[11]
- தொழில் பயிற்சி நிலையம்
- சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்[12],
- பல ஆரம்ப பாடசாலைகள்
- பல உயர்தர பாடசாலைகள்
- சம்மாந்துறை வலய கல்வி அலுவலகம்.[13]
- ஆறு பொது நூலகங்கள்
விளையாட்டு
பொது விளையாட்டு மைதானம் ஒன்றும், நீச்சல்தடாகம், உடல்வலுவூட்டல் நிலையம், பெட்மின்டன், மேசைப்பந்து, கூடைப்பந்து மைதானங்களுடன் ஜனாதிபதி விளையாட்டரங்கத் தொகுதி, பொது சிறுவர் பூங்காக்கள் மூன்று ஆகியன காணப்படுகின்றன.
தொழிற்துறைகள்
பிரதான தொழில் நெல் விவசாயம், செங்கல் உற்பத்தி, நன்னீர் மீன்பிடி, கல்லுடைத்தல் மற்றும் சிறு கைத் தொழில்களும் உள்ளன.
இங்கு பிறந்தவர்கள்
உசாத்துணை
- ↑ தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு (2001), மருதூர் ஏ மஜீத், மருதூர் வெளியீட்டுப் பணியகம், பக்.22
- ↑ அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், கலாசார சமய அலுவல்கள் அமைச்சு (1997) 24, மலே வீதி, கொழும்பு-02, பக்.09
- ↑ மட்டக்களப்புத் தமிழகம், இரண்டாம் பதிப்பு, (2002), வி.சி.கந்தையா, ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, யாழ்ப்பாணம், பக்.391-392
- ↑ வரலாற்றில் வாழும் சம்மாந்துறை(2004), எஸ்.அப்துல் றாஸிக், சம்மாந்துறை செந்நெல் கிராமம் குடிநீர் விநியோகத்திட்ட அங்குரார்ப்பண மலர், பக்.1
- ↑ மத்தியகிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை (1995) மருதூர் ஏ மஜீத், பக்.133
- ↑ சோனகத்தேசம்-மிகச் சுருக்கமான அறிமுகம், ஏ.பி.எம்.இத்ரீஸ், பக்.105
- ↑ சம்மாந்துறை பெயர் வரலாறு, எம்.ஐ.எம்.சாக்கீர் (2012) வாழும் கலை இலக்கிய வட்டம், பக்.43-44
- ↑ அப்துல் றாஸிக், முஸ்லிம்களிடையே குடி வழிமுறை
- ↑ http://srilankalaw.lk/revised-statutes/volume-vii/1091.html பரணிடப்பட்டது 2013-07-30 at Archive.today Sammanthurai Thableekul Islam Arabic College
- ↑ http://www.seu.ac.lk/fas/ Faculty applied sciences
- ↑ "Department of Technical Education & Training". Archived from the original on 2013-11-12. பார்க்கப்பட்ட நாள் 2013-07-30.
- ↑ http://www.smmmmvns.sch.lk/web/ பரணிடப்பட்டது 2013-07-09 at the வந்தவழி இயந்திரம் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம்
- ↑ http://www.strzeo.org/Template/aboutus.html பரணிடப்பட்டது 2013-04-29 at the வந்தவழி இயந்திரம் வலய கல்வி அலுவலகம் சம்மாந்துறை