யு டர்ன் (2018 திரைப்படம்)
யு டர்ன் | |
---|---|
இயக்கம் | பவன் குமார் |
தயாரிப்பு | ஶ்ரீனிவாச சித்தூரி இராம்பாபு பண்டாரு |
கதை | பவன் குமார் |
இசை | பூர்ணசந்திர தேஜஷ்லி அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | சமந்தா ஆதி ராகுல் ரவீந்திரன் பூமிகா சாவ்லா |
ஒளிப்பதிவு | நிகேட் பூமிரெட்டி |
படத்தொகுப்பு | சுரேஷ் ஆறுமுகம் |
கலையகம் | பி. ஆர் 8 கிரியேசன்ஸ் வி. ஒய். கம்பைன்ஸ் ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் |
வெளியீடு | 13 செப்டம்பர் 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
யு டர்ன் (U Turn) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் திகில் திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டது.[1] இத்திரைப்படத்தை பவன் குமார் எழுதி, இயக்கி ஶ்ரீனிவாச சித்தூரி மற்றும் இராம்பாபு பண்டாரு ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சமந்தா மற்றும் ஆதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 2016 ஆம் ஆண்டின் கன்னட மொழித் திரைப்படமான யு டர்ன் (U Turn) என்ற படத்தின் மறு தயாரிப்புப் படமாகும்.[2] பூர்ணசந்திர தேஜஷ்லி, அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோரால் இயற்றப்பட்ட இசை மற்றும் நிகேட் பூமிரெட்டியின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் செப்டம்பர் 13, 2018 அன்று வெளியானது.
நடிகர்கள்
- சமந்தா - ரட்சனா
- ஆதி - நாயக்
- ராகுல் ரவீந்திரன் - ஆதித்யா
- பூமிகா சாவ்லா - மாயா
- இரவி பிரகாஷ் - பிரபா
- நரேன் - ரித்திஸ்
- நரேன் - சந்திர சேகர்
- கீதா இரவிசங்கர்
- ஆஷிஷ் வித்யார்த்தி - இரகு
கதைச் சுறுக்கம்
ஒரு பத்திரிகை நிருபரான ரட்சனா (சமந்தா) மேம்பாலம் ஒன்றில் நடக்கும் விபத்து குறித்து கதை எழுதும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த மேம்பாலத்தில் சாலைக்கு நடுவே இருக்கும் தடுப்பு கற்களை சில இருசக்கர வாகன ஓட்டிகள் அகற்றிவிட்டு விதிமுயை மீறி யு டர்ன் எடுத்துச் செல்கிறார்கள். அப்படி யு டர்ன் எடுத்துச் செல்லும் வாகன ஓட்டிகளை பேட்டி எடுக்க நினைக்கும் ரட்சனா, அந்த சாலை ஓரத்தில் இருக்கும் பிச்சைக்காரர் ஒருவரிடம், சாலை தடுப்பு கற்களை அகற்றும் நபர்களது இருசக்கர வண்டி எண்ணை குறித்து கொடுக்குமாறும், அதற்கு பணம் தருவதாகவும் கூற, அவரும் ரட்சனாவுக்கு விதிமுறையை மீறி யு டர்ன் எடுத்துச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் வண்டி எண்ணை குறித்துக் கொடுக்கிறார். அதை வைத்து ஆர். டி. ஓ அலுவலகம் மூலம் அவர்களது விலாசத்தை பெறும் ரட்சனா, அவர்களில் ஒருவரை பேட்டி எடுக்க அவரது வீட்டுக்கு செல்லும் போது, வீடு பூட்டப்பட்டு இருப்பதால் திரும்ப வந்துவிடுகிறார். அதே நாள் இரவு ரட்சனா சந்திக்க சென்றவர் மர்மமான முறையில் இறக்க, காவல்துறை ரட்சனா மீது சந்தேகப்படுகிறது. காவல்துறை ரட்சனாவை விசாரணைச் செய்கிறது, ரட்சனாவோ தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுவதோடு, தான் அந்த நபரை எதற்காக சந்தித்தேன், என்ற காரணத்தை கூறி, அவரைப் போல மேலும் பத்து பேருடைய விலாசமும் தன்னிடம் இருப்பதாக கூறி அதை காவல்துறை அதிகாரியான நாயக்கிடம் (ஆதி) காண்பிக்கிறார். அந்த விலாசங்களை நாயக் ஆய்வு செய்ய, அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்ட தகவல் தெரிய வருகிறது. ஒட்டு மொத்த காவல்துறையும் அதிர்ச்சியடைந்தாலும், மேலதிகாரி இந்த வழக்கை தொட வேண்டாம் என்று நாயக்கிற்கு உத்தரவுபோடுவதால் அவரால் சட்டப்படி எதுவும் செய்ய முடியாமல் போகிறது. இதற்கிடையே, மேம்பாலத்தில் மீண்டும் இரண்டு நபர்கள் சாலை தடுப்பு கற்களை அகற்றிவிட்டு விதிமுறையை மீறி யு டர்ன் எடுத்துச் செல்ல, அவர்களை காப்பாற்ற நினைக்கும் ரட்சனா, நாயக்கிடம் உதவி கேட்கிறார், அவரும் அந்த இரண்டு பேரை சிறையில் அடைத்து வைக்கிறார். ஆனால், அந்த இரண்டு நபரும் சிறைக்குள்ளயே இறந்து போக, நாயக் பணி இடை நீக்கம் செய்யப்படுகிறார். என்னதான் நடந்தாலும், அந்த மேம்பாலத்தின் ரகசியத்தை அறிய வேண்டும் என்பதற்காக ரட்சனாவே, மேம்பால சாலை தடுப்பு கற்களை அகற்றிவிட்டு விதிமுறையை மீறி யு டர்ன் எடுத்துச் செல்ல, அவர் மரணம் அடைந்தாரா? அல்லது மேம்பாலத்தின் ரகசியத்தை கண்டுபிடித்தாரா? என்பதே இப்படத்தின் கதையாகும்.
வெளியீடு
இத்திரைப்படமானது விநாயக சதுர்த்தி நாளான செப்டம்பர் 13, 2018 அன்று வெளியானது.
மேற்கோள்கள்
- ↑ "வைரலாகும் யுடர்ன் படத்தின் தீம் பாடல் வீடியோ!". Archived from the original on 2018-09-06. பார்க்கப்பட்ட நாள் 2018-10-17.
{{cite web}}
: zero width space character in|title=
at position 1 (help)நியூஸ்7 தமிழ் (03 செப்டம்பர், 2018) - ↑ "'யுடர்ன்' ரீமேக்கில் நடிக்க இதுதான் காரணம்: சமந்தா".புதிய தலைமுறை (01 செப்டம்பர், 2018)