மா. இராசமாணிக்கம்
மா. இராசமாணிக்கம் அல்லது இராசமாணிக்கனார் (மார்ச் 12, 1907 - 26 மே, 1967) என்பவர் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார்.
இளமை வாழ்க்கை
இவரது தந்தையான மாணிக்கம், நிலம் அளந்து தரம் விதிக்கும் அலுவலகத்தில் ஒரு பிரிவின் மேலாளராக இருந்து, வட்டாட்சியராக உயர்ந்தவர். இவரது அன்னை தாயாரம்மாள். ஏழு பேர் பிறந்த குடும்பத்தில் இராசமாணிக்கனாரும் அவரின் அண்ணனான இராமகிருட்டிணன் என்பவருமே மிஞ்சினர். அரசுப் பணியாளரான தந்தையார் அலுவல் காரணமாகப் பல ஊர்களுக்கும் மாற்றப்பட்டதால் இராசமாணிக்கனாரின் கல்வியும் பல ஊர்களில் வளர்ந்தது. பல ஆண்டுகள் வரையில் தற்போதைய ஆந்திர மாநில கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் இருக்க நேரிட்டதால் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியே பயின்ற இவர், 1916 இல் தந்தையார் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிலக்கோட்டைக்கு மாற்றப்பட்ட பிறகே தமிழ் பயிலத் தொடங்கினார். 1921ல் பணி காரணமாகத் திண்டுக்கல் வந்த தமையனார் இராமகிருட்டிணருக்குத் துணையாகத் தாயாருடன் இராசமாணிக்கனாரும் வந்தார். அங்கு திண்டுக்கல் தூய மேரி உயர்நிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவராக அவர் சேர்ந்த நிலையில் தமிழ்க்கல்வி தொடர்ந்தது. இவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் தந்தையார் மறைந்ததால் திண்டுக்கல்லிலிருந்து நிலக்கோட்டைக்கு வந்த இராசமாணிக்கனாரின் கல்வி மீண்டும் தடைப்பட்டது. குடும்பப் பொறுப்பேற்ற தமையனாருடன் அவரும் அன்னையாரும் இருக்க வேண்டிய சூழல் அமைந்ததால் தமையனார் பணிமாற்றம் பெற்ற இடங்களுக்கெல்லாம் அவரும் செல்ல நேர்ந்தது. நன்னிலத்தில் நிலையாக ஓராண்டு தங்கிப் பணியாற்றும் வாய்ப்பைத் தமையனார் பெற்ற நிலையில் 1920 இல் இராசமாணிக்கனார் மீண்டும் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து பயின்று தேறினார்.
தமிழார்வம்
திண்டுக்கல் நகரவை உயர்நிலைப்பள்ளியில் அந்நாளில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஒருவர் இராசமாணிக்கனாருக்கு பள்ளி அருகிலிருந்த மௌனசாமி மடத்தின் இளந்துறவி ஒருவரை அறிமுகப்படுத்தினார். அத்துறவி சித்தர் பாடல்களையும் அருட்பாவையும் இவர் அறியுமாறு செய்தார். சித்தரிடம் பயின்றதால் இளமையிலேயே சாதி ஒழிப்பு குறித்தும் தமிழ் இலக்கியம் குறித்தும் இவருக்கு ஆர்வம் பிறந்தது.
மீண்டும் தமையனார் இராமகிருட்டிணருக்கு நன்னிலத்திலிருந்து தஞ்சாவூருக்குப் பணி மாற்றலாகிய நிலையில் அங்கு தம் படிப்பைத் தொடர விரும்பினார் இராசமாணிக்கனார். ஆனால் மாணிக்கனார் படிப்பு பலமுறை தடைபட்டதால் அவரை ஒரு தையல் கடையில் அவரது அண்ணன் வேலைக்குச் சேர்த்து விட்டார். ஆனால் படிப்பார்வம் கொண்ட இராசமாணிக்கனாரின் கல்வி தஞ்சாவூர் புனித பீட்டர் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தொடர்ந்தது. பள்ளியில் முதல் மாணவராக வந்ததால் இவரின் கல்வி தடையின்றி தொடர்ந்தது.
இவரது உயர்நிலைக் கல்வியின் போது இவரது அண்ணனுக்கு மீண்டும் ஆந்திர மாநிலத்திற்கு பணிமாற்றம் ஆனது. அவர் அனுப்பிய பணம் கல்வி செலவுக்குப் போதாததால் இவர் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குத் தனிப்பாடம் நடத்தி அதில் வரும் வருவாயை வைத்துக் கல்வியைத் தொடர்ந்தார்.
தஞ்சாவூர் பள்ளியின் பேராசிரியரான கரந்தை கவியரசு அ. வேங்கடாசலம் பிள்ளை என்பவராலும் அவரின் உதவியால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே. உமாமகேசுவரன், ந.மு.வேங்கடசாமி நாட்டார், உ.வே.சாமிநாதையர், இரா. இராகவையங்கார் போன்ற தமிழறிஞர்களாலும் இவரின் தமிழார்வமும் சமய ஆர்வமும் நெறிப்படுத்தப்பட்டது.
தமிழாசிரியர்
இவரது தந்தையாரின் நண்பரான கே.திருவேங்கடம் என்பாரின் உதவியுடன் 1928 ஆம் ஆண்டு சென்னை வந்து, வண்ணாரப் பேட்டையிலுள்ள தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். அங்கு கண்ணம்மாள் என்பவரைத் தன் 23ஆவது வயதில் மணந்தார். 1928 - 1936 வரையில் தியாகராயர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் மாணவர்க்கான பாடநூல்களையும் துணைப்பாட நூல்களையும் எழுதினார். அப்போது இவரின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே.
வரலாற்று நூலாசிரியர்
இவர் எழுதிய நாற்பெரும் வள்ளல்கள் என்ற நூல் 1930இல் வெளி வந்தது. 1935இல் இராசமாணிக்கனார் வித்துவான் பட்டம் பெற்றிருப்பினும் அதற்கு முன்னரே பல நூல்களை அவர் எழுதி வெளியிட்டிருந்தார். அவற்றுள்,
- ஹர்ஷவர்த்தனன் (1930)
- முடியுடை மூவேந்தர் (1931)
- பொற்கால வாசகம் (1932) பாடநூல்.
- ஏப்ரஹாம் லிங்கன் (1934)
- முசோலினி (1934)
- பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு, 1949, வர்தா பதிப்புக்கழகம், சென்னை.
போன்றவை குறிப்பிடத்தக்கவை.
பட்டப்படிப்பு
எட்டு ஆண்டுகள் தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய பிறகு, 1936ஆம் ஆண்டு முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்று பி.ஓ.எல், எல்.டி., எம்.ஓ.எல் ஆகிய பட்டங்களை முறையே 1939, 1944, 1945 ஆகிய ஆண்டுகளில் பெற்றார். எம்.ஓ.எல் பட்டத்திற்குப் பெரியபுராணத்தை நன்கு ஆய்வு செய்து, பெரியபுராண ஆராய்ச்சி என்ற தலைப்பில் இவர் எழுதிய ஆய்வு நூலே பெரிய புராண ஆராய்ச்சி என்னும் நூலாகப் பின்னாளில் வெளியாகியது. மேலும் பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, சிந்து சமவெளி நாகரிகம் போன்ற நூல்களையும் இக்காலத்திலேயே எழுதினார்.
சுயமரியாதை இயக்கம்
தியாகராயர் பள்ளியிலும் முத்தியாலுப்பேட்டை பள்ளியிலும் பணியாற்றிய காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் பற்று கொண்ட இவர் சுயமரியாதை சார் நூல்களையும் எழுதியுள்ளார். அக்காலத்தில் தமிழர் திருமணச் சடங்குகள் ரீதியில் பல தமிழ் குடும்பங்கள் கடன் சுமையால் துன்பப்பட்டதைக் கண்டு தமிழர் நல்வாழ்க்கைக் கழகம் கேட்டுக்கொண்டதன் பேரில் தமிழர் திருமண நூல் என்ற நூலை எழுதித் தமிழ் நாட்டு அறிஞர்களின் ஒருமுகமான போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் பாத்திரமானார்.
கல்லூரி ஆசிரியர் மற்றும் முனைவர் பட்டம்
இவர் 1947 முதல் 1953 வரை சென்னை விவேகானந்தர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் போதே 1951ல் சைவ சமய வளர்ச்சி என்னும் நூல் வெளியிட்டு முனைவர் பட்டத்தையும் பெற்றார். அதன்பின் 1953ல் மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராகவும் தலைமை பேராசிரியராகவும் பொறுப்பேற்றார்.
பல்கலைக்கழக பேராசிரியர்
1959 முதல் 1967 வரை சென்னைப் பல்கலைக்கழக துணைத்தமிழ் பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அக்காலத்தில் தமிழ் இலக்கியமான பத்துப்பாட்டை ஆய்ந்து இவர் எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூல் இவரது மறைவுக்குப் பின்னர் 1970ல் அப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.
இவர் மறைந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரான நெ. து. சுந்தரவடிவேலு சென்னைப் பல்கலைக் கழகத்தில் எங்கோ ஓரிடத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த இவ்வுரைகளைத் தற்செயலாகக் கண்டு எடுத்து பல்கலைக் கழகம் வெளியிட ஏற்பாடு செய்தார். [1]
நெ. து. சுந்தரவடிவேலுவின் கருத்துகள்
எதிர் நீச்சலிட்டு தம்மை வளர்த்துக் கொண்டாற்போலவே தமிழ்ச் சமுதாயத்தையும் வளர்க்கப் பாடுபட்டவர் இராசமாணிக்கனார் என்றும் காக்கை பிடிக்கத் தெரியாத உண்மைத் தமிழராக இருந்த காரணத்தால் ரீடர் பதவியிலேயே இருந்தார் என்றும் இதனை தமிழ்ச் சமுதாயத்திற்குக் களங்கமாகவும் தாம் சிரமப்பட்டு எழுதிய பத்துப்பாட்டு உரையை வெளியிட வேண்டி தாம் பணியாற்றிய சென்னைப் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்ததற்கு பதில் இராசமாணிக்கனாரே வெளியிட்டிருந்தால் பணமாவது கிடைத்திருக்கும் என்றும் சென்னைப் பல்கலைக் கழகம் இவர் எழுதிய பத்துப்பாட்டு உரை நூலை யாரும் காணாத வண்ணம் பூட்டி வைத்து விட்டது என்றும் பிறகு பதவியிலிருக்கும் போதே இராசமாணிக்கனார் மாரடைப்பால் இறந்தார் என்றும் குறிப்பிடுகின்றார்.[1]
சைவத்தமிழ் பட்டங்கள்
சைவ சமயத்தில் இவர் ஆற்றிய பணிகளைத் தொடர்ந்து இவருக்குச் சைவ சமயத் தலைவர்களின் வாயிலாகப் பல பட்டங்கள் வழங்கப்பட்டன. அவை,
- சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர் - 1951ல் திருவாடுதுறை ஆதீனம் வழங்கினார்.
- ஆராய்ச்சிக் கலைஞர் - 1955ல் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம் வழங்கினார்.
- சைவ இலக்கிய பேரறிஞர் - 1963ல் தருமபுர ஆதீனம் வழங்கினார்.
- சைவ நெறிக் காவலர் - சைவ சித்தாந்த சமாஜ்.
முதலாம் தமிழ் மாநாடு
இவரின் பணியைப் பாராட்டிய தமிழக அரசு 1966ல் இவரை மலேசியாவில் நடைபெற்ற முதலாம் உலகத்தமிழ் மாநாட்டிற்கு தேர்ந்தெடுத்தது. அங்கு இவர் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையான சங்க காலத் தமிழ்ச் சமுதாயம் அறிஞர்களால் ஏற்கப்பட்டது.
மறைவு
இவருக்குத் தன் 59ஆவது வயதில் முதல் இதயத்திசு இறப்பு ஏற்பட்டது. இருந்தும் மருத்துவ சிகிச்சைமூலம் பிழைத்துக் கொண்டார். மீண்டும் இரண்டாவது முறை இதயத்திசு இறப்பு ஏற்பட்ட போது 26 மே 1967ல் மரணம் அடைந்தார்.
நாட்டுடைமை நூல்கள்
தமிழக அரசின் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் திட்டத்தில் இவரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.[2] அவை,
- சோழர் வரலாறு (3 பாகங்கள்), 1959, எடுகேசனல் பப்ளிசிங் கம்பெனி, சென்னை.
- இலக்கிய அமுதம்
- கால ஆராய்ச்சி
- நாற்பெரும் புலவர்கள்
- பல்லவப் பேரரசர்
- பல்லவர் வரலாறு
- பெரியபுராண ஆராய்ச்சி[3]
- புதிய தமிழகம்
- சேக்கிழார் - ஆராய்ச்சி நூல்
- சேக்கிழார்
- சைவ சமய வளர்ச்சி
- சைவ சமயம்
- சிலப்பதிகாரக் காட்சிகள்
- மொஹஞ்சதரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம்
- தமிழ் அமுதம்
- தமிழ் இனம்
- தமிழ்நாட்டு வட எல்லை
- தமிழ்மொழி இலக்கிய வரலாறு
- தமிழக ஆட்சி
- தமிழகக் கலைகள்
மூலம்
வெளி இணைப்பு
- தமிழகம்.வலை தளத்தில் டாக்டர் மா.இராசமாணிக்கனார் எழுதிய நூல்கள் பரணிடப்பட்டது 2012-06-28 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 18
- ↑ "டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்". தமிழ் இணைய பல்கலைக்கழகம், தமிழக அரசு. pp. 1. http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-49.htm. பார்த்த நாள்: மே 12, 2012.
- ↑ http://www.tamilvu.org/library/nationalized/pdf/03-rasamanickam/periyapuranamarachi.pdf