அ. வேங்கடாசலம் பிள்ளை
அ. வேங்கடாசலம் பிள்ளை (டிசம்பர் 20, 1886 - டிசம்பர் 4, 1953) தமிழறிஞர். ”கரந்தைக் கவியரசு” என அழைக்கப்பட்டார்.[1] சங்க இலக்கியப் பாடல்களை மட்டுமல்லாது இலக்கணங்களையும் குறிப்பாக, தொல்காப்பியத்தையும் மனப்பாடமாக நூற்பா எண்ணோடு சொல்லக்கூடியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மோகனூர் என்ற சிற்றூரில், அரங்கசாமிப் பிள்ளை - தருமாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.[2]
தஞ்சை புனித பேதுரு உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், தனிக்கல்வியாக தமிழ் இலக்கியத்தைக் கரந்தை வேங்கடராமப் பிள்ளையிடமும், தமிழ் இலக்கணத்தை மன்னை காவல் ஆய்வாளர் மா.ந.சோமசுந்தரம் பிள்ளையிடமும் பயின்றார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இருந்த வேங்கடாசலம் பிள்ளை, திருவையாறு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார்.
கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சராகவும் சங்கத்து இதழாகிய "தமிழ்ப்பொழில்" ஆசிரியராகவும் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் மிகப்பெரும் பணி தனித்தமிழைப் பரப்பியது தான். "பிரேரிக்கிறேன்" போய் "முன்மொழிகிறேன்" என்றும், "தீர்மானம்" போய் "முடிவு" என்றும் வந்தன. "உண்மைத் தமிழர் ஒவ்வொருவரும் தாம் பேசுங்காலும், எழுதுங்காலும் தமிழ்ச் சொற்களையே எடுத்தாளுதல் தமது கடமை என்று உறுதி கொள்ளல் வேண்டும். சிறார் முதல் கிழவர் ஈறாக உள்ளார் யாவரும் பிறமொழிக் கலப்பினை எவ்வாற்றானும் வேண்டாது விட்டொழித்தலைக் கடனாகக் கொள்ளல் வேண்டும்” என்று "தமிழ்ப் பொழில்" இதழில் கவியரசு எழுதினார்.
கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வழியாகவும், திருவையாறு அரசர் கல்லூரியில் பணியாற்றியதன் மூலமும் எண்ணற்ற புலவர் பெருமக்களையும், தனித்தமிழ் அன்பர்களையும் உருவாக்கியவர் கவியரசு.
எழுதிய நூல்கள்
- ஆசான் ஆற்றுப்படை (தூய பேதுரு பள்ளியில் தம் ஆசிரியராக இருந்த குயிலையா என்னும் சுப்பிரமணிய ஐயர் மேல் இயற்றியது)
- மொழி அரசி
- மணிமேகலை நாடகம்
- செந்தமிழ்க் கட்டுரைகள் (தமிழ்ப்பொழில் இதழில் வந்த கட்டுரைகள்)
உரை நூல்கள்
- அகநானூறு உரை
- வேங்கட விளக்கு
பதிப்பித்த நூல்கள்
ந.மு.வே.நாட்டாருடன் இணைந்து ”தொல்காப்பியம் - சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை” என்ற நூலைப் பதிப்பித்துள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "கரந்தைக் கவியரசர் அரங்க வேங்கடாசலம் பிள்ளை". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2010/apr/04/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-164973.html. பார்த்த நாள்: 9 November 2021.
- ↑ "இதே நாளில் அன்று". Dinamalar. 2018-12-19. பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.