மருதமலை முருகன் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மருதமலை முருகன் கோயில்
மருதமலை முருகன் கோயில் இராஜகோபுரம்
மருதமலை முருகன் கோயில் இராஜகோபுரம்
மருதமலை முருகன் கோயில் is located in தமிழ் நாடு
மருதமலை முருகன் கோயில்
மருதமலை முருகன் கோயில்
தமிழ்நாட்டில் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:11°02′47.6″N 76°51′06.4″E / 11.046556°N 76.851778°E / 11.046556; 76.851778Coordinates: 11°02′47.6″N 76°51′06.4″E / 11.046556°N 76.851778°E / 11.046556; 76.851778
பெயர்
பெயர்:மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர் மாவட்டம்
அமைவு:சோமையம்பாளையம் ஊராட்சி
ஏற்றம்:741 m (2,431 அடி)
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
இணையதளம்:www.marudhamalaimurugantemple.org/

மருதமலை முருகன் கோயில், அல்லது மருதாசலமூர்த்தி கோவில், கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. மருத மலைமேல் அமைந்துள்ளதால் "மருதன்" என்றும் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி (மருதன்) என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.

முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.[1]

முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார். பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது. மருதமலை முருகன் கோயில் கி.பி 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த மருதமலை முருகன் கோயில்.

அமைவிடம்

படிமம்:Maruthamalai Murugan Temple.jpg
மருதமலை முருகன் கோயில்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மருதமலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சேர்ந்தது. கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திலிருந்தும், தொடருந்து நிலையத்திலிருந்தும் இங்கு செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. மலை அடிவாரம் வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்கின்றன. மலையின் மீது படியேறி கோவிலுக்கு நடந்து செல்லலாம்; அல்லது கோயில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டணச் சிற்றுந்துகளில் மலைப்பாதையில் செல்லலாம். தனியார் இரு சக்கர வாகனங்களும் மகிழுந்துகளும் கட்டணம் செலுத்தி மலைப்பாதை மூலம் மேலே கோயிலுக்குச் செல்லலாம்.[2]

அருகிலுள்ள விமான நிலையம்: கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°02'47.6"N, 76°51'06.4"E (அதாவது, 11.046543°N, 76.851768°E) ஆகும்.

கோயில் அமைப்பு

படிமம்:Valampuri Vinayagar.jpg
கல் கொடிமரத்தில் வலம்புரி விநாயகர்

புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.

இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

மருதமலைக் கோயில் விவரம்
மூலவர் சுப்பிரமணிய சுவாமி/தண்டாயுதபாணி/மருதாசலமூர்த்தி (மருதப்பா)
உற்சவர்
அம்மன்/தாயார் வள்ளி, தெய்வானை
தல விருட்சம் மருதமரம்
தீர்த்தம் மருத தீர்த்தம்
ஆகமம்/பூஜை
பழமை சுமார் 800 ஆண்டுகள்
புராண பெயர்

ஆதிமூலஸ்தானம்

மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

பாம்பாட்டி சித்தர் குகைக்கோயில்

படிமம்:Pambatti siddhar sannidhi 1.jpg
பாம்பாட்டி சித்தர் சன்னிதி

இக்கோவிலின் தெற்குமூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது.[3] உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததார் என்பது மரபு வரலாறு. பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது.

பஞ்ச விருட்ச விநாயகர்

படிமம்:Maruthamalai Pancha virutcha Vinayagar.jpg
பஞ்ச விருட்ச விநாயகர்

ஆதிமூலஸ்தானத்திற்கும் முன்மண்டபத்திற்கும் தண்டாயுதபாணி சன்னிதி மண்டபத்திற்கும் இடையே பஞ்ச விருட்ச விநாயகர் சன்னிதி உள்ளது.[3] பொதுவாக அரசமரத்தடியில் காணப்படும் விநாயகர் இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் ஐந்து முகங்களுடன் அமைந்துள்ளார். நடைப்பயணமாக மலையேறி வருவோர் இந்த விநாயகரைத் தாண்டிதான் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்ல வேண்டும்.

நடைபயணப் பாதை

அடிவாரத்திலிருந்து நடைபயணமாக மலையேறும் பாதையில் படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் தான்தோன்றி விநாயகர் உள்ளார். இப்பாதை ஆதிமூலஸ்தானத்தில் முடிவடைகிறது. இப்பாதையில் செல்வோர் கவனிக்கக்கூடிய முக்கிய இடங்கள்: பதினெட்டாம் படி எனப்படும் முதல் பதினெட்டுப் படிகள்; காவடி சுமந்த வடிவிலுள்ள இடும்பன் கோயில்; குதிரைக் குளம்புச் சுவடு காணப்படும் பாறை.

குடமுழுக்கு விழா

தண்டாயுதபாணி சன்னிதிக்கு நேராக புதியதாக ஏழுநிலை இராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுர கல்ஹாரம், ஏழுநிலை கோபுரம், தங்கமுலாம் பூசிய ஏழு கலசங்கள், மேல்மண்டபம், இராஜகோபுரத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் இராஜ கோபுரத்திலிருந்து மேல் மண்டபத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் புதியதாய் இந்து சமய அறநிலைத் துறையால் நிர்மாணிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் நாளன்று இக்கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.[4][5][6]

திருப்புகழ் பாடல்

அருணகிரிநாதர் திருப்புகழில் மருதமலை முருகனைப் பாடியுள்ளார்.[7]

திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. "திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டில் மருதமலை பற்றிய குறிப்பு". Archived from the original on 2014-05-29. பார்க்கப்பட்ட நாள் மே 20, 2014.
  2. கோயில்பரணிடப்பட்டது 2011-05-19 at the வந்தவழி இயந்திரம்
  3. 3.0 3.1 "பாம்பாட்டி சித்தர் மற்றும் பஞ்சமுக விநாயகர் சன்னிதி". Archived from the original on 2014-05-30. பார்க்கப்பட்ட நாள் மே 20, 2014.
  4. http://dinamani.com/religion/article1507823.ece
  5. http://temple.dinamalar.com/news_detail.php?id=17355
  6. http://temple.dinamalar.com/news_detail.php?id=17511
  7. ஆதாரம் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளின் ‘ மாக்ருதா புஷ்பமாலையாம்’ திருப்புகழ் - சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை, சேலம். பதிப்பாசிரியர். வலையபேட்டை ரா. கிருஷ்ணன். ஆகஸ்ட் 2006 பக் 660

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மருதமலை_முருகன்_கோயில்&oldid=131652" இருந்து மீள்விக்கப்பட்டது