பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் | |
---|---|
படிமம்:Pachaimalai Rajagopuram.jpg | |
ஆள்கூறுகள்: | 11°26′56″N 77°26′44″E / 11.44889°N 77.44556°ECoordinates: 11°26′56″N 77°26′44″E / 11.44889°N 77.44556°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | பச்சைமலை பாலமுருகன் திருக்கோவில், மரகதாச்சலம் |
பெயர்: | பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | ஈரோடு மாவட்டம் |
அமைவு: | பச்சைமலை, கோபிசெட்டிபாளையம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஸ்ரீ பாலமுருகன் (மரகதாச்சல மூர்த்தி) |
சிறப்பு திருவிழாக்கள்: | பங்குனி உத்திரம், தை பூசம், சூரசம்ஹாரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டடக்கலை |
இணையதளம்: | www.pachaimalaimurugan.tnhrce.in |
பச்சைமலை (மரகதாச்சலம்) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் (English: Pachaimalai Arulmigu Subramanyaswamy Temple) ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும். "பச்சைமலை பவளமலை எங்கள் மலை நாடு" என்ற வாசகத்திற்கேற்ப இவ்விருமலை முருகன் கோவில்களும் இப்பகுதி மக்களால் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருத்தலத்தில் முருகன், குழந்தை வடிவாக ஞான தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.[1][2]
பச்சைமலை - பெயர்க்காரணம்
நாம் பலரும் நினைப்பது போல பச்சைமலை என்று இம்மலை பெயர் பெற காரணம் மரங்களோ, செடிகளோ அல்ல. பழைய படங்களை புரட்டினால் பச்சைமலையில் அவ்வளவாக மரங்கள் இல்லாமல் பாறைகளும் கற்களுமாக இருப்பதையே காண முடியும். இங்கு "பச்சை" என்பது நீரை குறிக்கிறது. இங்குள்ள மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது. இது சமீப காலத்தில் நிரூபானம் ஆனது ஒரு சுவையான நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். வருடம் 2000 க்கு முன்பு பச்சைமலைக்கு நீர் மலை அடிவாரத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்படும். அப்பொழுது ஏற்பட்ட வறட்சியில் கிணறுகள் வற்றிவிட்டன. அப்பொழுது மலைக்கு மேலே ஆழ்குழாய் கிணறு அமைத்தல் பற்றிய திட்டம் உருவானது. மலை அடிவாரத்தில் தண்ணீர் இல்லாத சமயம் மலைக்கு மேலே தண்ணீர் இருக்க முடியாது என்பதால், மிகுந்த சந்தேகத்தோடு தான் ஆழ்குழாய் தோண்டப்பட்டது. அன்று சிறு ஆழத்திலேயே மிகவும் வேகமாகவும், உயரமாகவும் நீர் வெளியேறியதை அருகிலிருந்தோர் இன்றும் பரவசத்தோடு நினைவு கூறுகின்றனர். இதனால், பச்சைமலையில் பயன்படுத்தும் நீர் அனைத்தையுமே நாம் தீர்த்தமாக கொள்ளலாம்.
திருக்கோவில் வரலாறு
முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்து, சிவ பூஜை செய்ய சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது, கோபி அருகே அமைந்துள்ள மொடச்சூர் என்னும் ஊர் தான் சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சைமலை ( மரகதாச்சலம்/ மரகதகிரி) என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான். துர்வாசர் முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார். பச்சைமலை முருகன் கோவில் சுமார் மூவாயிரம் ஆண்டு பழமையான திருக்கோவில்.
காலங்கள் கடந்தோட, மரகதாச்சலத்தின் மகிமையை உலகம் மறந்தது. பூஜை மற்றும் திருப்பணி இல்லாமல் கோவில் மிகவும் பாழடைந்தது. அப்போது குப்புசாமி கவுண்டர் என்ற பக்தர் இறைவனை தரிசிக்க வருகிறார். அவருக்கு ஜோதி வடிவாக அருளிய முருகன், தன் கோவிலை பராமரிக்குமாறு அவருக்கு அசரீரியாக ஆணை பிறப்பிக்கிறார். இறைவனின் ஆணை ஏற்று பூஜைகள் தொடங்கப்பட்டது. பக்தர்களால் இணைந்து திருப்பணிகள் பல செய்யப்பட்டது. இன்று மீண்டும் மரகதாச்சலபதியாகிய பச்சைமலை பாலமுருகன், தமிழகமெங்கும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படுகிறான்.
பச்சைமலை கும்பாபிஷேகங்கள் மூன்று*
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்"
கும்பாபிஷேகம் என்றால் தமிழில் திருக்குடமுழுக்கு அல்லது பெருஞ்சாந்தி என்று வழங்கப்படும். 12 ஆண்டுகளாக இறைவனை வழிபட்டால் என்ன பலன் உண்டோ, அதை ஒரு கும்பாபிஷேகம் கண்டால் பெற்றுவிடலாம் என்பர் மறையோர். பச்சைமலையில் 1981 மற்றும் 2006 ஆண்டுகளில் இரண்டு குடமுழுக்குகள் நடைபெற்றன. இப்பொழுது 2021ஆம் ஆண்டு நடைபெறுவது மூன்றாம் குடமுழுக்கு. இப்பொழுது ஒவ்வொரு குடமுழுக்கும் எப்படி நடைபெற்றது என்று ஆராய்வோம்.
*முதலாம் திருக்குடமுழுக்கு*
சிறிய கோயிலாக முறையான பூசையற்றுக் கிடந்த பச்சைமலைக் கோயிலைத் தெய்வத் திருவுளப்படி. 1956 ஆம் ஆண்டு தொடங்கி 1980 ஆம் ஆண்டு வரை திரு குப்புசாமி கவுண்டர் என்னும் சிறுநிழக்கிழார். திருப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து வந்தார்கள். பெருமகனார் அவர்கள் கும்பாபிஷேகத்திற்குத் திட்டமிடும் நேரத்தில், இப்பூலகை விட்டு குகனது திருவடிகளை அடைந்தார். அவர் விட்டுச்சென்ற திருப்பணிகளை அவரது தமையன்கள், திரு. ஈஸ்வரன், திரு. சண்முகம், திரு சச்சிதானந்தம் மற்றும் திரு காளியண்ணன் (ஜெய்) ஆகியோர் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பணிகளைத் தொடர்ந்தனர். சண்முகர், தண்டபாணி .உற்சவ மூர்த்திகள் செய்யப்பட்டது. அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்றுப் பிரகார திருமண மண்டபம், சிறிய முகப்பு கோபுரம், ஆகியவையும், கீழ்த்திசை நோக்கும் வித்யா கணபதி, மரகதவள்ளி சமேத மரகதீஸ்வரர், தெற்கு நோக்கி அருணகிரிநாதரும், நவக்கிரகக் கோயில்களும், மேல்நிலை நீர்த்தொட்டி, மணி மண்டபம் போன்றவையும் அமைக்கப்பட்டது. மலைமேல் சுற்றளவு மிகவும் சிறிதான படியினால், கொஞ்சமாக விரிவுபடுத்தி, அழகுபடுத்தி மக்கள் ஆண்டவனை சுற்றிவரும் அளவுக்கு அமைக்கப்பட்டது. எம்பெருமானுக்கு ஸ்வர்ண பந்தனம் என்னும் தங்க பீடம் அமைத்து ஆண்டவனை எழுந்தருளச் செய்தனர். சொற்சுவை அரசு திருமுருக கிருபானந்த வாரியார், அருட்செல்வர் திரு நா மகாலிங்கம் போன்ற பெரியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அடிவாரத்தில் உள்ள இரண்டே கால் திருமண மண்டப வளாகத்தில் பந்தல் விரிவாக அமைக்கப்பட்டு, திருவாளர்கள் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் மற்றும் சூலமங்கலம் சகோதரிகள் இசைக் கச்சேரியுடன் தெய்வத்திரு. குப்புசாமி கவுண்டர் அவர்கள் உத்தம பட்ச யாகம் (33 வேள்விகள்) செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த படியால், 8 கால வேள்விப் பூசைகளாக சிவத்திரு. கல்யாண சிவாச்சாரியார் மற்றும் சிவத்திரு. அம்பி இராமனந்த சிவாச்சாரியர் தலைமையில் நடைபெற்றது. 1981 ஆம் ஆண்டு ஆனி மாதம் சுவாதி நட்சத்திரமும் கூடிய நன்னாளில், இறையன்பின் வெளிப்பாடாய் இனிதே நடைபெற்றது.
*இரண்டாம் திருக்குடமுழுக்கு*
முதலாம் நன்னீராட்டின் போது, ஐந்துநிலை கோபுரம் அமைப்போம் என்ற வாசகத்தின் அடிப்படையில், ரூ 1.10 கோடி செலவில், கல்லும் அதன் மேல் சுதையுமாய், இராஜகோபுரம் கட்டப்பெற்றது. திருப்படிக்கட்டுகள் விரிவுபடுத்தப்பட்டு மேலும் இரண்டு படி மண்டபங்கள் கட்டப்பெற்றது. மரகதீஸ்வரர், மரகதவள்ளி, வித்யா கணபதி மற்றும் பைரவருக்கும் தனி சன்னதிகள் அமைக்கப்பட்டது. புதியதாக தட்சிணாமூர்த்தி, கல்யாண சுப்ரமணியர், ஆஞ்சநேயர் மற்றும் தேவியருடன் கூடிய நவக்கிரக மூர்த்தங்கள் எழுந்தருளப் பெற்றனர். மலைமேல் சுற்றளவு மிகவும் விரிவுபடுத்தப்பட்டு சுதையினால கூடிய அழகிய வேலைப்பாடுகளுடன் வசந்த மண்டபம் அமைந்தது. மரகதீஸ்வரருக்கும் மரகதவள்ளி அம்மனுக்கு இரஜத பந்தனம் என்னும் வெள்ளி பீடம் அமைக்கப்பட்டது. முதல் குடமுழுக்கு நடைபெற்றது போலவே இரண்டே கால் மண்டபத்தில் உத்தம பட்ச யாகம் அமைத்து 51 வேள்விக்குழிகளில் பூசைகள் தொடங்கின. 8 கால பூசைகள் சிவத்திரு. சோமசுந்தரம் சிவாச்சாரியர் மற்றும் கோயில் முறை கொண்ட சிவத்திருவாளர்கள் பழனிச்சாமி & தண்டபாணி சிவாச்சாரியார்கள் மறை ஓத நடைபெற்றது. ஆனி சுவாதி நன்னாளில் வானொலியில் தமிழன்பர்கள் நிகழ்ச்சியினை நேரடியாக வழங்க, அரகரா முழக்கம் வின்னெட்ட, நன்னீராட்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அனைத்து உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனைகளை நடாத்தினர். அன்று நாள் முழுவதும் அன்பர்கள் பசியாற தண்ணீரும் அட்டிட்டலும் நடைபெற்றது. மக்கள் வெள்ளத்தில் பச்சைமலை பொலிவு பெற்றுக் காணப்பட்டது. இந்த இரண்டு குடமுழுக்கிற்கும் இடைப்பட்ட காலத்தில் பெரிய மரத்தேர் செய்யப்பட்டு பங்குனி உத்திர நன்னாளில் தேர்த்திருவிழா நடைபெற்று வருவது நினைவு கூறத்தக்கது. அன்பர்கள் பக்தியுடன் அடுத்த நன்னீராட்டுக்கு தங்கத்தேர் செய்ய வேண்டும் என்று மேற்கொண்டு "ஐந்து நிலை கோபுரம் கண்டோம், தங்கத்தேர் காண்போம்" என்று முழக்கம் எழுப்பினர்.
*மூன்றாம் திருக்குடமுழுக்கு*
15 ஆண்டுகளாகத் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால் பழகிப் போன அன்பர்கள், இரண்டாம் குடமுழுக்கின் மண்டல பூசையின் போது பச்சைமலையில் திருப்பணிகள் என்றும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என நல்லுள்ளம் பற்றினர். அதன்படி, பூதேவி ஸ்ரீதேவி உடனுறை மரகத வெங்கடேசப் பெருமாளுக்குத் தனிக் கோயிலும், திருமகள், நிலமகள் உடனுறை பச்சை வண்ணப் பெருமாளுக்கு உற்சவர் என்ற முறையில் பஞ்சலோக சிலைகளும் செய்து சிறிய அளவில் குடமுழுக்கு நடைபெற்றது. விண்ணோரும் மண்ணோரும் போற்றும் வகையில் முருகப்பெருமானுக்கு பசும்பொன்னாலான தேரும், அதற்கு ஒரு பாதுகாப்பு அறையும், தங்கமயில் ஊர்தியும், அடியார்களின் பெரும் முயற்சியால் கட்டப்பட்டது. வேழமுக வேந்தனுக்கு மரத்தேரும், தேர்த் திருவிழாவிற்கான பலவகை வாகனங்களும் செய்யப்பட்டன. பலவகை பொற்கவசங்களும், வெள்ளிக்கவசங்களும், சிலைகள் பாதுகாப்பாக வைக்க ஒரு பாதுகாப்பு அரணும் கட்டப்பட்டது. ஆனந்தக் கூத்தாடும் எம்பிரானை சிதம்பரம் சென்று தரிசிக்க முடியாததால், அம்பலத்தை பச்சைமலையில் அமைத்துக் காண வேண்டும் என்ற அடிப்படையில் சிவகாமி அம்பாள் உடனுறை சிவசிதம்பர நடராஜபெருமான் எழுந்தருளப்பெற்றார். அவருக்கு மரகதசபை அமைக்க முடிவெடுத்து பணிகள் நடைபெற்று வருகிறது. வேள்வி மண்டபமும், பல படிக்கட்டு மண்டபங்களும், புதிய வகை மணி மண்டபமும், அடியார்கள் அமுதுண்ணும் இரண்டு நிலைக்கூடமும், கோசாலையும், வரிசைக் கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. முதலாம் மற்றும் இரண்டாம் குடமுழுக்கைப் போலவே இரண்டே கால் மண்டபத்தில் உத்தம்பட்ச யாக அமைப்பில் 53 வேள்விக்குழி மற்றும் உபச்சார பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிவத்திரு.S சோமசுந்தர சிவாச்சாரியார், சிவத்திரு. மணிகண்ட சிவம், சிவத்திரு சக்தி சுப்பிரமணிய சிவம் மற்றும் திருக்கோயில் முறை கொண்ட பழனிச்சாமி, தண்டபாணி இராமநாத சிவாச்சாரியார்கள் மறை ஓதுகின்றனர். பாரியூர் பூசைப் பெருமக்கள் பாடும் தேனினும் இனிய தீந்தமிழிசையான திருமுறையும், திருப்புகழும், கொங்கர்பாளையம் நாதமணி திரு.குப்புசாமி குழுவினரின் மங்கள இசையும். நாட்டியாஞ்சலியும், இறை உணர்த்தும் கச்சேரிகளும், அறிஞர்கள் ஆராயும் கருத்துரைகளும், அடியார்கள் உளம் நிறைய அட்டிட்டலும் நடைபெறுகிறது. ஆதினங்களும், அமைச்சர்களும், தமிழறிஞர்களும், ஆன்றோரும் சான்றோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்..
மூலவர்
பச்சைமலை மூலவர் பால தண்டயுதபாணியாகக் காட்சி தருகிறார். பச்சைமலை மூலவரின் புன்னகை சிறப்பு. பழனியை போன்றே இங்கு மூலவர் மேற்கு நோக்கிய வண்ணம் காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய முருகன் திருத்தலங்கள் மிகவும் அரிது. இங்கு மூலவருக்கு ஸ்வர்ணபந்தனம் செய்யப்பட்டுள்ளது.பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை அன்று மூலவருக்கு சத்ரு சம்ஹார திரிசடை அர்ச்சனை செய்யப்படுகிறது. தை பூசம், பங்குனி உத்திரம், கந்தர் ஷஷ்டி திருநாட்களில் இறைவனை தங்க கவச அலங்காரத்தில் சேவிக்கலாம்.
ஸ்ரீ ஷண்முகர்
பச்சைமலையில் பிரதான உற்சவராக ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர் உள்ளார். ஆறுமுகம் கொண்ட முருகனின் ரூபத்தையே ஷண்முகர் என்று அழைக்கிறோம். பிரதி ஷஷ்டி, கிருத்திகை மற்றும் விசாக தினத்தன்று ஷன்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஷன்முகார்ச்சனை செய்யப்படுகிறது. கந்தர் சஷ்டியின் பொது ஆறு நாட்கள் தொடர்ந்து ஷன்முகார்ச்சனை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர கல்யாண உற்சவத்தின் போது சிவப்பு சாத்தி உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஷண்முகர் திருசெந்தூரை போலவே நடராஜராகவும் காட்சி அளிப்பார். அன்றைய தினம் இரவு வெள்ளை சாத்தி உற்சவமும், மறுநாள் பங்குனி உத்திரத்தன்று பச்சை சாத்தி உற்சவமும் நடைபெறும். முருகன் தானே சிவன், பிரம்மா, விஷ்ணுவாகத் திகழ்வதை உணர்த்தவே இவ்வலங்காரங்கள் செய்யப்படுகின்றது. வருடத்தில் ஒரு முறை மட்டுமே மலர் பல்லக்கில் நகர் வலம் வருகிறார் ஷண்முகர்.
- Pachaimalai Sivapu Saathi.jpg
சிவப்பு சாத்தி - சிவ ஸ்வரூபம்
- Pachaimalai Shanmugar White saathi.jpg
வெள்ளை சாத்தி - பிரம்ம ஸ்வரூபம்
- Pachaimalai Shanmugar Pachai Saathi.jpg
பச்சை சாத்தி - நாராயண ஸ்வரூபம்
கட்டிடக்கலை
பச்சைமலை கோவிலுக்கு வரும் பக்தர்களை ஐந்து நிலை ராஜகோபுரம் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது. கோபி நகரை சுற்றி உள்ள ஊர்களில் இருந்தே ராஜ கோபுரத்தை எளிதில் காணலாம். மூலவராகிய பாலமுருகனுக்கு கைகளால் தேய்த்துப் பளபளபாக்கப்பட்ட கருங்கல்லால் கர்ப்பகிரகம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மரகதீஸ்வரர், ஸ்ரீ மரகதாம்பாள், ஸ்ரீ வித்யா கணபதி, ஸ்ரீ மரகதவெங்கடேச பெருமாள், ஸ்ரீ கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் தனி கருங்கல் சன்னதிகள் உள்ளது. மஹா மண்டபம், வசந்த மண்டபம், சுற்று மண்டபம் என கோவில் கம்பிரமாகத் திகழ்கிறது. பச்சைமலையில் 40 அடி உயர செந்திலாண்டவர் சிலை அமைந்துள்ளது. இது உலகிலேயே பெரிய செந்திலாண்டவர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலுக்கு மேலே வர மலை பாதையும், 181 படிகளை உடைய படித்துறையும் உள்ளது. படிகளில் வரும் போது வள்ளி திருமண நிகழ்ச்சியின் சுதை சிற்பத்தையும் காணலாம்.
- Pachaimalai Temple Facade.jpg
இராஜகோபுரம்
- Pachaimalai Karpagriham.jpg
கர்பகிரிஹம்
- Pachaimalai Senthilandavar.jpg
செந்திலாண்டவர்
- Pachaimalai Maha Mandapam.jpg
சுற்று மண்டபம்
- Pachaimalai Vasantha Mandapam Side View.jpg
வசந்த மண்டபம்
பூஜை விபரம் / திறந்திருக்கும் நேரம்
பச்சைமலை கோவிலில் எழு கால பூஜைகள் செய்யப்படுகிறது. காலை பதினொரு மணியளவில் ஒரு அபிஷேகமும், மாலை ஆறு மணியளவில் ஒரு அபிஷேகமும் தினமும் செய்யப்படுகிறது. மாலை ஆறு முப்பது மணியளவில் தங்க மயில் புறப்பாடு நடைபெறுகிறது. தங்க மயில் மீது பவனி செல்லும் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி பிறகு தங்கத்தேரில் எழுந்தருளுவார்.
இறுதியாக மாலை எழு மணியளவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜை என்கிற இராக்கால பூஜை, பழனியை போன்றே மிகவும் சிறப்பாகச் செய்யப்படுகிறது. இறைவனாகிய பாலமுருகனுக்கு வெள்ளை ஆடை சாற்றி மலர்களால் அலங்காரம் செய்யபடும். அலங்கார தீபாராதனை முடிந்தவுடன் தமிழ் வேதங்களாகிய பன்னிரு திருமுறை உள்ளடக்கிய பஞ்சபுராணம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை,கந்தர் அநுபூதி,கந்தர் அலங்காரம், அபிராமி அந்தாதி, பிள்ளை தமிழ் ஆகிய நூல்களில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் பாடப்படும். அப்பொழுது சிவசாரியார்களுடன் சேர்ந்து பக்தர்களும் பாட அனுமதிக்கப்படுவார்கள். இறுதியாக கல்யாண சுப்ரமணியர் மற்றும் பைரவர் தீபாராதனை முடிந்து கோவில் சாத்தப்படுகிறது. கல்யாண சுப்பிரமணியர் முன் இந்த இறுதி தீபராதனையில் வைக்கும் வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பிறகு பிரசாதமாக திணை மாவு மற்றும் ஞானப்பால் வழங்கபடுகிறது.
இக்கோவில் காலை 5:30 AM மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மதியம் 1:00 PM மணிக்கு நடைசாற்றப்படும். அதே போல் மாலை 4:00 PM மணி முதல் இரவு 8:30 PM மணி வரை கோவில் திறந்திருக்கும்.
- Pachaimalai Golden Peacock May 2017.jpg
தங்க மயில்
- Pachaimalai Thanga Ther.jpg
தங்கத்தேர்
அடைவது எப்படி
பச்சைமலை கோவில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் அமைந்துள்ளது. கோபி பேருந்து நிலையத்தில் இருந்து 1 Km தொலைவில் உள்ளது. பேருந்து வசதி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உள்ளதால், கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம். கோவிலுக்கு மேலே செல்ல மலை பாதை வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையம் 40 Km தொலைவிலும், கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் 80 Km தொலைவிலும் அமைந்துள்ளது.
படங்கள்
- Pachaimalai.jpg
இராஜ கோபுரம்
- Pachaimalai Kalyana Subramanyar pic1.jpg
ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர்
- Pachaimalai Valli Thirumanam.jpg
வள்ளி திருமணம்
- Pachaimalai Rajagopuram May 2017.jpg
ராஜகோபுரம்
- Pachaimalai Vasantha Mandapam June 2017.jpg
பச்சைமலை கோவில்