மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் | |
---|---|
படிமம்:Kolanjiappar temple kopuram.jpg | |
ஆள்கூறுகள்: | 11°31′20″N 79°17′59″E / 11.522246°N 79.29966°ECoordinates: 11°31′20″N 79°17′59″E / 11.522246°N 79.29966°E |
பெயர் | |
பெயர்: | மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் |
தமிழ்: | மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கடலூர் |
அமைவு: | மணவாளநல்லூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கொளஞ்சிநாதர் (முருகன்) |
தீர்த்தம்: | மணிமுத்தாறு நதி |
சிறப்பு திருவிழாக்கள்: | பங்குனி உத்தரம், கந்த சஷ்டி, சித்ரா பௌர்ணமி |
கொளஞ்சியப்பர் கோயில் விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார்.[1] இக்கோயிலின் சிறப்பு இங்கே நடைமுறையில் இருக்கும் “பிராது” எனும் வழக்கு பதிவு செய்யும் முறை, சூறை விடுதல் போன்றவையாகும். இங்கு பங்குனி உத்தரம் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிராது கட்டுதல்
பிராது என்கிற வார்த்தைக்கு முறையீடு, குற்றச்சாட்டு, புகார், குறை கூறல் என்பது பொருள். இயல்பு வாழ்க்கையில் மக்கள் தங்கள் புகாரினை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, மக்கள் தங்கள் புகார்களை, வேண்டுகோளை ஒரு காகிதத்தில் எழுதி கொளஞ்சியப்பரை நீதிபதியாக கருதி சமர்பிப்பார்கள். சமர்பித்த மூன்று நாட்களுக்குள்ளோ, மூன்று வாரங்களுக்குள்ளோ, மூன்று மாதங்களுக்குள்ளோ, மூன்று வருடங்களுக்குள்ளோ முறையிடப்பட்ட குறை, புகாரின் தன்மையைப் பொறுத்து கொளஞ்சியப்பரே ஆய்ந்து நல்ல முடிவை தந்து, குறையை தீர்த்து, வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதாக நம்பப்படுகிறது. வெளியூர்களில் இருந்தும் கூட பலரும் இங்கு வந்து இந்த பிராது பிராத்தனையை மேற்கொள்கின்றனர்.
- பிராது கட்டுதலில் பின்பற்றப்படும் வழிமுறைகள்
- மக்கள் காகிதத்தில் எழுதி கொடுக்கும் குறைகள் முதலில் மூலவரான கொளஞ்சியப்பர் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோயில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் முனியப்பர் சன்னிதானத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சூலம், ஈட்டி போன்றவற்றில் கட்டப்படும். தங்கள் வேண்டுதல், கோரிக்கை நிறைவேறிய பிறகு மக்கள் மீண்டும் இந்தக்கோயிலுக்கு வந்து தங்கள் பிராதினை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். பிராது கட்டும் வேண்டுதலுக்கு வசூலிக்கும் கட்டணத்திலும் ஒரு புதுமையான முறைமை கடைபிடிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் பொதுவான கட்டணத்திற்குப் பிறகு, பிராது கட்டும் நபர் எங்கிருந்து வருகிறாரோ அந்த இடத்திற்கும் கோயிலுக்கும் இடையே உள்ள தொலைவு கணக்கிடப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது.
வேப்பெண்ணெய்
இத்திருத்தலத்தில், பூசித்து விபூதியிடப்பட்ட வேப்பெண்ணெய் மருந்தாக வழங்கப்படுகின்றது.[2]
சூறை விடுதல்
விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சல் கிடைக்க இக்கோயில் வேண்டிக்கொள்கிறார்கள். அறுவடைக்குப் பிறகு வரும் பங்குனி உத்தர திருவிழா அன்று தாங்கள் விளைவித்த பயிர் விளைச்சலில் ஒரு பங்கினை கோயிலுக்கு கொண்டு வந்து மக்கள் கூட்டத்தில் மேலே எறிவார்கள் இது சூறைவிடுதல் எனப்படுகிறது[சான்று தேவை]. பொதுவாக சூறைவிடுதலில் முந்திரிக் கொட்டைகள் முக்கிய இடம்பெறும்.
கோயிலின் சிறப்பு
முருகப் பெருமான் வேண்டுதல் கடவுளாக உள்ளார். பக்தர்களின் கோரிக்கைகள் பிரார்த்தனை சீட்டில் எழுதப்பட்டு இங்குள்ள தல விருட்சத்தில் வேண்டுதலாக கட்டப்படுகிறது.நியாயமான கோரிக்கைகள் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் முருகக் கடவுள் நிறை வேற்றி வைப்பார் என பக்தர்களால் நம்பப் படுகிறது.
பிரார்த்தனை சீட்டு விபரம்
கோவில் நிர்வாகம் ஒரு சிறு காணிக்கை பெற்றுக் கொண்டு காணிக்கை சீட்டை விநியோகிக்கிறது. பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறியவுடன் திரும்ப காணிக்கை செலுத்தி பிரார்த்தனை சீட்டை எடுத்து விட வேண்டும் என்பது கோவில் ஜதீகம்.
கோவில் வரலாறு
பல நுற்றாண்டுக்கு முன்பு கோவில் இருக்கும் இடம் வனமாக இருந்தது. இங்குள்ள கொளஞ்சி மரத்திற்கு அடியில் இருந்த சிறு கல் மீது பசு பாலை சொரிந்தது. அப்பகுதி மக்கள் அங்கு கடவுள் இருப்பதை உணர்ந்து வழிபடத் தொடங்கினர். பிறகு அது கோவிலாக வளர்ந்தது.
சுந்தரனார் வழிபாடு
எட்டாம் நுற்றாண்டில் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரனார் இக்கோயிலுலுக்கு வந்து வழிபட்டுள்ளார். அவர் வருதகீரிஸ்வரரை வணங்கி விட்டு திரும்பி செல்லும் வழியில் வேடன் வடிவில் வந்த முருகக் கடவுள் அவருடைய பொருட்களை சி பெருமானின் ஆணைப்படி கவர்ந்ததாகவும், பின்னர் அப் பொருட்கள் வேண்டுமெனில் திரும்ப விருத்தாச்சலம் வர பணித்ததாகவும் கூறப்படுகிறது. இறைவனின் திருவிளையாடலை உணர்ந்த சுந்தரனார் திரும்ப கோவிலுக்கு வந்து வழிபட்டார்.
வேண்டுதலின் சிறப்பு
முருகக் கடவுள் இங்கு தனக்கென கொளஞ்சி வனத்தில் தனிக் கோவிலை ஏற்படுத்திக் கொண்டு ‘வேண்டுதல் தெய்வமாக மக்களுக்கு அருள் பாலிக்கிறார்’. சொத்து விவகாரம், வியாபாரம், வேலை, தொழில் போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள் இங்கு வந்தவுடடன் தீருவதாக மக்கள் நம்புகின்றனர்.
கட்டடக்கலை
இக் கோயிலில் 5 அடுக்கு கோபுரம் உள்ளது. சுற்றுசுவர் வெட்டி எடுக்கப்பட்ட பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. முருகப் பெருமானின் சிலை கிழக்கு நோக்கி உள்ளது. இடும்பன், கடம்பன் ஆகியோருக்கு தனித்தனி கோவில் உள்ளது. கருவறையை நோக்கி முனீஸ்வரர், வீரர் ஆகிய கடவுள் சிலைகள் உள்ளது. சித்தி விநாயகருக்கு தனி சந்நிதி உள்ளது. இக்கோவில் கடலுர் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக சுற்றுலா துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
{=கோவிலுக்கு செல்லும் வழி== விருத்தாசலத்தில் இருந்து மணவாள நல்லலுர் செல்லும் பாதையில் உள்ளது. விருத்தாசலத்தில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு.
மேற்கோள்கள்
காட்சியகம்
வெளி இணைப்புகள்
கொளஞ்சியப்பர் கோயிலின் இணையதளம் பரணிடப்பட்டது 2019-11-30 at the வந்தவழி இயந்திரம்