காகிதம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கும் அனைத்துலக காகிதம் என்ற காகித ஆலை
ஒரு காகிதக் கட்டு

காகிதம் (Paper) என்பது எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும் பயன்படும் ஒரு மெல்லிய பொருள் ஆகும். மரம், கந்தல் அல்லது புல் ஆகியனவற்றிலிருந்து கிடைக்கும் செல்லுலோசுக் கூழின் ஈரமான இழைகளை அழுத்தி பின்னர் நெகிழும் தன்மை கொண்ட தாள்களுக்கிடையில் உலர்த்தி இக்காகிதத்தைத் தயாரிக்கிறார்கள். எழுதுதல், அச்சிடுதல், பொட்டலம் கட்டல், தொழில்துறை மற்றும் கட்டுமான செயல்முறைகள் உட்பட பல பயன்களைக் கொண்ட ஒரு பல்துறை பொருளாக காகிதம் பயன்படுகிறது.

கி.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கி.மு. 105 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சீனாவில் மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே சீனாவில் காகிதம் பயன்படுத்தப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன[1][2].மரக்கூழ் மற்றும் காகிதத் தொழில் தற்காலத்தில் நவீனமாக்கப்பட்டு உலகளாவிய நிலையை எட்டியுள்ளது. காகித உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் அதைத்தொடர்ந்து அமெரிக்கா இரண்டாவதாகவும் திகழ்கின்றன.

வரலாறு

நவீனகாலக் காகிதத்திற்கு முன்னோடியாக சீனாவில் 2 ஆம் நூற்றாண்டு முதலே காகிதம் பயன்பட்டு வந்ததை தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்காலகட்டத்தில் சீனாவைச் சேர்ந்த "சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் காகிதத்தை உருவாக்கினார்[2]. சீனாவின் பட்டு ஏற்றுமதிக்கு பொற்காலமாக விளங்கிய அக்காலத்தில் அதற்கு மாற்றாக சீனர்கள் காகிதத்தைக் கருதினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.

காகிதத்தைப் பற்றிய அறிவும் இதன் பயன்பாடுகளும் 13 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து மத்திய கிழக்கு வழியாக இடைக்கால ஐரோப்பா வரை பரவியது, ஐரோப்பாவில்தான் தண்ணீரால் இயங்கும் காகித ஆலைகள் [3] முதலில் கட்டப்பட்டன. மேற்கு நாடுகளுக்கு பாக்தாத வழியாக காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டதால் இதை பாக்தாடிகாசு என்ற பெயரால் அழைத்தனர் [4]. 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்துறை உற்பத்தி பெருகியதன் காரணமாக காகிதத்தின் விலை வெகுவாகக் குறைந்தது, இவ்விலைக் குறைவு தகவல் பரிமாற்றத்திற்கும், குறிப்பிடத்தக்க கலாச்சார மாறுதல்களுக்கும் உதவியது. 1844 ஆம் ஆண்டில், கனடியன் கண்டுபிடிப்பாளர் சார்லசு பெனெர்டியும், செருமானியர் கெல்லரும் தனித்தனியாக மரத்தாலான இழைகளை காகிதக்கூழாக்கும் செயல்முறைகளை உருவாக்கினர் [5].

இழைகளுக்கான பண்டைய மூலங்கள்

காகித உற்பத்தி தொழிற்சாலைகளில் பேரளவில் காகிதம் தயாரிக்கப்படுவதற்கு முன்புவரை, பயன்படுத்தப்பட்ட பழைய துணிகளை மறுசுழற்சி செயல்முறையால் மரக்கூழாக மாற்றியே காகிதம் தயாரிக்கப்பட்டு வந்தது. சணல், பருத்தி, லினன் போன்றவற்றால் ஆன துணிகளின் இழைகள் இதற்குப் பயன்படுத்தப்பட்டன[6]. 1744 ஆம் ஆண்டு செருமன் நீதிபதி கிளாப்ரோத் என்பவரால், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் இருக்கும் அச்சிட்ட மைகளை அகற்றும் செயல்முறை கண்டறியப்பட்டது[6]. தற்பொழுது இச்செயல்முறை மையகற்றல் செயல்முறை எனப்படுகிறது. 1843 ஆம் ஆண்டு மரக்கூழிலிருந்து நேரடியாக காகிதம் தயாரிக்கப்பட்ட காலம் வரை மறுசுழற்சி முறை மரக்கூழ் தயாரிப்பு முறை வழக்கத்தில் இருந்தது[6].

பெயர்க்காரணம்

பேப்பர் என்ற சொல் இலத்தீன் மொழிச் சொல்லான பாப்பிரசிலிருந்து பெறப்பட்டது[7][8], இது கிரேக்க πάπυρος (பப்புரோக்கள்) சொல்லான சைப்பரசு பாப்பிரசு என்ற தாவரத்தின் பெயராகும். சைப்பரசு பாப்பிரசு தாவரத்தின் உட்சோறிலிருந்து பாப்பிரசு தயாரிக்கப்பட்டது. இது தடித்த காகிதம் போன்ற ஒரு பொருள் ஆகும். மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் காகிதம் அறிமுகமாவதற்கு முன்னரே பண்டைய எகிப்து மற்றும் பிற மத்தியதரைக்கடல் கலாச்சாரங்களில் எழுதுவதற்காக இதைப் பயன்படுத்தியுள்ளனர்[9]. பாப்பிரசு என்ற சொல்லில் இருந்து பேப்பர் என்ற சொல் பிறந்திருந்தாலும் இரண்டின் தயாரிப்பு முறைகளும் வெவ்வேறானவையாகும். பாப்பிரசு இயற்கை இழையின் மென்படல உறை போன்றதாகும், ஆனால் காகிதம் இழைகள் மூலம் உருவான மரக்கூழிலிருந்து தயாரிக்கப்படும் பொருளாகும்[2].

காகிதம் தயாரித்தல்

காகிதம் தயாரிப்பதற்காக நீரில் உள்ள இழைகளால் நீர்த்த தொங்கல் கரைசல் முதலில் தயாரிக்கப்படுகிறது. இத்தொங்கல் கரைசலை திரையினூடாகச் செலுத்தி நீரை வற்றச் செய்கிறார்கள். இழைகளால் பின்னப்பட்டது போல் உருவாகும் காகிதத்தை அழுத்தத்திற்கு உட்படுத்தி எஞ்சியிருக்கும் தண்ணீரும் அகற்றப்படுகிறது [10]. தொழில்நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் மனிதச் செயல்முறையில் காகிதம் தயாரிக்கப்படுவதில் சில மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன, எப்படியிருந்தாலும் கீழ்காணும் ஐந்து படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன.

  1. . மரம், பருத்தி போன்ற மூலப் பொருட்களில் இருந்து செல்லுலோசு தனித்துப் பிரிக்கப்படுகிறது.
  2. . செல்லுலோசு இழை கூழாக அடிக்கப்படுகிரது.
  3. . தேவைக்கேற்றபடி வண்ணம், தன்மைகளை மாற்றுவதற்காக வேதியியல், உயிரியல், மற்றும் இதர இரசாயன பொருட்களைச் சேர்த்தல்
  4. . உருவாகும் தொங்கலை திரையில் செலுத்துதல்
  5. . இறுதியாக அழுத்தி உலர வைத்து தேவையான காகிதத்தைப் பெறுதல்.

பயன்பாடு

சீனாவில் காகிதம் பயன்படுத்தியது போலவே, ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். சீனர்கள் முதலில் சாங் மற்றும் சவு அரசமரபு காலத்தில் எலும்பு மற்றும் மூஙகில் பட்டைகளில் தான் எழுதினர். சுமேரியர்கள் தங்களது ஆவணங்களை, ஈரமான களிமண் பலகைகளில் எழுத்தாணியால் எழுதி, பின்னர் அதனை தீயில் சுட்டு பாதுகாத்தனர். எகிப்தியர்கள் பாபிரஸ் என்ற நாணல் புல்லிலிருந்து தயாரித்த காகிதத்தில் எழுதினார்கள். தமிழர்கள் பனை ஓலையைப் பக்குவம் செய்து அதில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்துள்ளனர். தமிழ் இலக்கியஙகள் யாவும் இவ்வாறு பனைஓலையில் எழுதப்பட்டவையே. பின்னர் பட்டுத் துணிகளில் வண்ணக்குழம்பினைப் பயன்படுத்தி தமிழர்கள் எழுதி வந்துள்ளனர். என்றும் அழியாத எழுத்துகள் வேண்டும் என்பதற்காக கற்களிலும் எழுத்துகளை கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தனர். ஐரோப்பியர்கள் ஆட்டின் தோல் அல்லது கன்றின் தோல் இவற்றில் எழுதினார்கள்.

காகிதப் பணமாக, சொத்துகளை அங்கீகரிக்கும் பத்திரங்களாக, தகவல்களை சேமித்து வைக்கும் பொருளாக,, சுய குறிப்புகள் எழுத உதவும் நாட்காட்டியாக, தனிமனிதரிடமும், குழுவிடமும் தொடர்பு கொள்ள உதவும் ஒரு கருவியாக, பொருட்களை பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல அவற்றை பொட்டலங்களாக்க , துப்புரவு செய்யும் தாளாக, கட்டுமானப் பொருளாக, புத்தகங்கங்கள், பயிற்சி ஏடுகள் என பல்வேறு பயன்களை மனித சமூகத்திற்கு காகிதங்கள் வழங்குகின்றன.

நெகிழி உறைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் காகித உறைகளை சில உற்பத்தியாளர்கள் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இக்காகித உறைகள் நெகிழி உரைகளுக்குச் சமமான பயனைத் தருவனவாக உள்ளன என்பதோடு இவை சிதைவும் அடையும், சாதாரண காகிதத்துடன் இவற்றை மறுசுழற்சிக்கும் பயன்படுத்தமுடியும் என்பதே இதன் சிறப்பாகும் [11].

பரவல்

கி.பி எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சென்றனர்.கி.பி.751 இல் நடந்த தாலஸ் போரில் அரேபியர் வெற்றி பெற்றனர். அப்போது தாள்களை உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமைகளாக்கி தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள் தாள்கள் உருவாக்கும் கலையைக் கற்றனர். அரேபியர்களிடமிருந்து ஐரோப்பியர் கற்று உலகெங்கும் தாள் உருவாக்கும் கலையை பரப்பினர்.இவ்வாறு காகிதத்தின் பயன்பாடு மத்திய கிழக்கு பகுதியில் பரவியது.

காகிதத்தின் பயன்பாடு, சீனாவில் இருந்து இசுலாமிய உலகத்தினூடாக ஐரோப்பாவுக்கும், பாக்கித்தான், உசுபெக்கித்தான் (கி.பி.751), பாக்தாத் (கி.பி793)) எகிப்து (கி.பி.900), மற்றும் மொராக்கோ (கி.பி.1100) போன்ற நாடுகளுக்கு பரவியது. அங்கே 12 ஆம் நூற்றாண்டில் காகித உற்பத்தி தொடங்கியது.

அமெரிக்கா

ஐரோப்பியர்கள் மூலமாக அமெரிக்காவுக்கு வந்தது. முதலில் காகிதம் பயன்படுத்திய அமெரிக்க நகரம் மெக்சிகோ ஆகும். மெக்சிகோ கி.பி.1575 இல் காகிதத்தை பயன்படுத்த தொடங்கியது.

நவீன காகித வரலாறு

பழைய காகிதம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது.எடையும் அதிக அளவில் இருந்தது. எனவே மக்கள் மிகுந்த சிரமபட்டனர். நவீன காகிதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கபட்டது. நிக்கோலஸ் லூயிஸ் ராபர்ட் என்பவர் 1799 இல் நவீன காகிதத்தை கண்டுபிடித்தார்[12]. நவீன காகிதம் மரக்கூழினால் தயாரிக்கபடுகிறது.

மூலப் பொருட்கள்

தொடக்கத்தில் மூங்கில் போன்ற மரங்களை சிறுசிறு துண்டுகளாக்கி அதனை நன்றாக அரைத்து கூழாக்கினர். இதுவே செல்லுலோஸ் எனப்படும் காகிதக் கூழ் ஆகும். இந்த கூழினை நன்கு காய்ச்சி, அதில் உள்ள நீரை வடித்து கனமான தகடு போன்ற பொருளினால் அழுத்தி தாள்களை உருவாக்கினார்கள்.இவ்வாறு தான் காகிதம் உருவானது.

  • ஊசியிலை மரங்கள், மூங்கில், யூகலிப்டஸ், பருத்தி, சணல் கழிவு, கந்தை துணிகள், நார்கள், புற்கள், கரும்புச்சக்கைகள் போன்றவை.
  • தற்காலத்தில் மரத்துண்டுகளுக்குப் பதிலாக இரசாயன முறையில் அமிலஙகளை சேர்த்து வேகவைத்து காகிதக்கூழ் தயாரிக்கின்றனர்.
  • மரக்கூழுடன் ஆலும் என்னும் வேதிப்பொருளை சேர்க்கின்றனர்.எனவே காகிதங்கள் அமிலத்தன்மையை அடைகின்றன.
  • இயந்திரமயமாக்கப்பட்ட கடதாசி உற்பத்தி குறிப்பிடத்தக்க பண்பாட்டு மாற்றங்களை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. எழுதுவதும் அச்சிடுவதும் மிகவும் எளிதயிற்று.

அமிலத்தன்மை உடைய காகிதங்கள் விரைவாக எழுத்துக்களை அழிய செய்கின்றன. எனவே, தற்போது புத்தங்களை அச்சிடும் நிறுவனங்கள் அமிலத்தன்மை உடைய காகிதங்ளை தவிர்க்கின்றனர்.

பல்வேறு பெயர்கள்

எகிப்து நாட்டினர் முதன்முதலில் பப்ரைஸ் தாளில் எழுதியதால் "பேப்பர்" என்று அழைக்கின்றனர். அரேபியர் "காகத்" என்றனர். தமிழர்கள் காகிதம் எனவும் தாள் எனவும் அழைக்கின்றனர். போர்த்துகீசியர்கள் கடுதாசி என்று அழைக்கின்றனர்.

இது முதன் முறையாகக் கடிதங்கள், செய்தித்தாள்கள், புத்தகங்கள் என்பவற்றின் மூலம் மலிவான தகவல் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது. அதுமட்டும் அல்லாமல் செலாவணியாக நாம் பயன்படுத்தும் பணம் உருவாகவும் மூல காரணமாயிற்று.

இந்தியாவில் காகிதம்

அரேபியர்கள் மூலமாக காகிதம் இந்தியாவிற்குள் நுழைந்தது. கி.பி.400 இல் இந்தியாவில் காகிதங்கள் பயன்படுத்தபட்டன. தற்போது இந்திய காகிதம் என்பது மிக உயரியவகை காகிதமாக பயன்படுத்தபடுகிறது.ஏனெனில், இந்திய காகிதம் இருபத்தி ஐந்து சதவீதம் பருத்தி இலைகளால் ஆனது.இந்திய காகிதம் மிகவும் மெலிதாகவும், நீண்ட நாள் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் இருக்கும்.இந்த இந்திய காகிதம் விவிலியம் மற்றும் அகராதி தயாரிக்க பெரிதும் பயன்படுகிறது[13].

மறுசுழற்சி முறை

மரங்களை பாதுகாக்க வேண்டி மறுசுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் உலகத்தில் தொண்ணுற்று மூன்று சதவிகித காகிதங்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மறுசுழற்சி செய்யப்படும் ஒரு டன் காகிதங்கள் பதினேழு மரங்களை காப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காகிதத்தின் பயன்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்த காகிதம் தற்போது கழிவறையில் துடைப்பானாகவும்,வியர்வை துடைப்பானாகவும் பயன்படுகிறது. மேலும், செய்தித்தாள் தயாரிக்கவும் ,புத்தகம் அச்சிடவும் பெரும் அளவில் பயன்படுகிறது.

காகிதமும் சுற்றுச் சூழலும்

காகிதத்தின் உற்பத்தியும் அதன் பயன்பாடும் சுற்றுச்சூழலில் பல எதிர்மறை விளைவுகளை ஊண்டாகுகின்றன. . உலகளாவிய காகித நுகர்வு கடந்த 40 ஆண்டுகளில் 400% அளவுக்கு உயர்ந்துள்ளது, காடுகள் அழிப்பு அதிகரிக்க காகித நுகர்வு வழிவகுக்கிறது. உலகெங்கிலும் 35% மரங்கள் காகித உற்பத்திக்காக வெட்டப்படுகின்றன. பெரும்பாலான காகிதத் தயாரிப்பு நிறுவனங்கள் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக புதிய மரங்களை நடுவதாகக் கூறினாலும் காடுகள் அழிப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது. காகித உற்பத்தியினால் தோன்றும் காடுகள் அழிப்பு மிகவும் சர்ச்சைக்குரிய சிக்கல்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. . ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மட்டும் 40% அளவுக்கு காகிதக் கழிவுகள் உருவாகின்றன. இந்தக் காகிதக் கழிவின் எடை மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 71.6 மில்லியன் டன் ஆகும். சராசரி அலுவலக ஊழியர் ஒருவர் அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 31 பக்கங்கள் அச்சிடுகிறார்.

மேற்கோள்

ஐந்தாம் வகுப்பு, தமிழ்ப்பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு (சமச்சீர் கல்விக்கு முந்தையது)

  1. Hogben, Lancelot. “Printing, Paper and Playing Cards”. Bennett, Paul A. (ed.) Books and Printing: A Treasury for Typophiles. New York: The World Publishing Company, 1951. pp 15-31. p. 17. & Mann, George. Print: A Manual for Librarians and Students Describing in Detail the History, Methods, and Applications of Printing and Paper Making. London: Grafton & Co., 1952. p. 77
  2. 2.0 2.1 2.2 Tsien 1985, ப. 38
  3. Burns 1996, ப. 417f.
  4. Murray, Stuart A. P. The Library: An illustrated History. Skyhorse Publishing, 2009, p. 57.
  5. Burger, Peter. Charles Fenerty and his Paper Invention. Toronto: Peter Burger, 2007. ISBN 978-0-9783318-1-8 pp. 25–30
  6. 6.0 6.1 6.2 Göttsching, Lothar; Pakarinen, Heikki (2000), "1", Recycled Fiber and Deinking, Papermaking Science and Technology, vol. 7, Finland: Fapet Oy, pp. 12–14, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 952-5216-07-1 {{citation}}: Cite has empty unknown parameters: |laydate=, |separator=, |month=, |laysummary=, |chapterurl=, and |lastauthoramp= (help)
  7. πάπυρος, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
  8. papyrus பரணிடப்பட்டது 2012-06-28 at the வந்தவழி இயந்திரம், on Oxford Dictionaries
  9. "Papyrus definition". Dictionary.com. பார்க்கப்பட்ட நாள் 20 November 2008.
  10. Rudolf Patt et al. "Paper and Pulp" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a18_545.pub4
  11. PaperFoam Carbon Friendly Packaging
  12. http://historywired.si.edu/detail.cfm?ID=397
  13. https://en.wikipedia.org/wiki/India_paper
"https://tamilar.wiki/index.php?title=காகிதம்&oldid=29087" இருந்து மீள்விக்கப்பட்டது