புலவராற்றுப்படை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆற்றுப்படை நூல்களில் புலவராற்றுப்படை என்பதும் ஒன்று. கல்வி கேள்விகளில் புலமை மிக்கவர் புலவர். திருவள்ளுவர் புலமையை நுண்மாண் நுழைபுலம் [1] என்கிறார். புலவர்களைத் தெள்ளியர் என்கிறார். திருவும் தெளிவும் ஓரிடத்தில் அமைவதில்லை. [2] எனவே புலவர்கள் வறுமையில் வாடினர். வள்ளல்களைத் தேடிச் சென்றனர். தேடிச் சென்று வறுமையைப் போக்கிக்கொண்ட புலவர்கள் வறுமையில் வாடும் புலவர்களை வள்ளல்கள் வாழுமிடத்துக்கு ஆற்றுப்படுத்தினர். இப்படிப் புலவர்களை ஆற்றுப்படுத்தும் பாடலைப் புலவராற்றுப்படை என்னும் துறையைச் சார்ந்தது என இலக்கண நூல்கள் கூறுகின்றன.

அகத்திணையில்
புறத்திணையில் புலவர் எனப்பட்டோர் அகத்திணையில் அறிவர் எனக் குறிப்பிடப்படுகின்றனர். [3] இவர்கள் தலைவியின் ஊடல் தீர்க்கும் வாயில்கள் பன்னிருவரில் ஒருவர்.
முதுவாய் இரவலர்
பொய்கையார் என்னும் சங்க காலப் புலவர் ‘முதுவாய் இரவலர்’ எனக் குறிப்பிடுகிறார். முதுவாய் இரவலன் ஒருவனைச் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுப்படுத்தும் பாடல்கள் இரண்டு புலவராற்றுப்படை எனக் குறிக்கப்பட்டுள்ளன. [4]
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை என்னும் நூலில் ‘முதுவாய் இரவலன்’ [5] குன்றுதோறாடும் குமரனைப் ‘புரையுநர் இல்லாப் புலமையோய்’ என்றெல்லாம் வாழ்த்தும்போது, முருகனுக்கு விழாக் கொண்டாடும் கூளியர்
அளியன் தானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்து
எனக் கூறி முதுவாய் இரவலனுக்கு அருள் புரியுமாறு முருகனிடம் வேண்டுகின்றனர். முதுவாய் இரவலன் என்னும் குறிப்பால் திருமுருகாற்றுப்படை நூலைப் ‘புலவராற்றுப்படை’ எனவும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். [6]
  • பாணாற்றுப்படை எனக் குறிப்பிடப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல் ஒன்று [7] புலவராற்றுப்படையும் ஆம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்காம் தமிழ்ச் சங்கம்
மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை நாகூர் வா . குலாம் காதிறு நாவலர் எனும் இசுலாமியத் தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்ட நூல். பாண்டித்துரைத் தேவர் நிறுவிய நான்காம் தமிழ்ச்சங்கத்தில் பரிசு பெற்ற புலவர் ஒருவர் பரிசில் தேடிக்கொண்டிருக்கும் புலவரொருவரை மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு ஆற்றுப்படுத்துவதாய் இந் நூல் இயற்றப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் இயற்றப்பட்ட ஆற்றுப்படை நூல்களுள் வழி கூறுவோர் நடைப்பயணத்திற்கான வழியைக் கூறுவர். நாகூர் வா.குலாம் காதிறு நாவலர் தான் வாழ்ந்த காலத்திற்கு ஏற்ப புகைவண்டியில் செல்லுமாறு கூறுகிறார்.

அடிக்குறிப்புகள்

  1. கல்வி இல்லாமை, நுண்மாண் நுழைபுலம் இல்லாமை ஆகும் – திருக்குறள் 407
  2. இருவேறு உலகத்து இயற்கை, திரு வேறு, தெள்ளியர் ஆதலும் வேறு – திருக்குறள் 374
  3. தொல்காப்பியம், கற்பியல் 52
  4. புறநானூறு 48, புறநானூறு 49,
  5. திருமுருகாற்றுப்படை – அடி 284
  6. வச்சணந்திமாலை உரை என்னும் 13 ஆம் நூற்றாண்டு நூல் நிருமுருகாற்றுப்படையைப் புலவராற்றுப்படை என்றும், மலைபடுகடாம் நூலைக் கூத்தராற்றுப்படை என்றும் குறிப்பிடுகிறது
  7. புறநானூறு 141

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=புலவராற்றுப்படை&oldid=14157" இருந்து மீள்விக்கப்பட்டது