பிந்துனுவேவா படுகொலைகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பிந்துனுவேவா படுகொலைகள் (Bindunuwewa massacre) அல்லது பிந்துனுவேவா சிறைச்சாலைப் படுகொலைகள் என்பது இலங்கையில் மத்திய மாகாணத்தில் பிந்துனுவேவா என்ற இடத்தில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அரசியல் கைதிகள் 27 பேர் அக்டோபர் 25, 2000ம் ஆண்டில் சிங்கள கும்பல் ஒன்றினால் கொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். இத்தாக்குதலால் மேலும் 14 பேர் காயமடைந்தனர்.[1][2]

பின்னணி

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் பங்காளர்கள் குறிப்பாக வயதில் குறைந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பிந்துனுவேவா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இம்முகாம் இலங்கை தலைநகர் கொழும்பிற்குக் கிழக்கே சுமார் 200 கிமீ தூரத்தில் உள்ளது. மற்றும் இது மிகவும் பாதுகாப்புக் குறைவான ஒரு முகாம் ஆகும்.

படுகொலை

2000, அக்டோபர் 25 அதிகாலையில் தடுப்பு முகாமின் சுற்றுப் புறத்தில் இருந்த சிங்களக் கிராம மக்கள் சில நூற்றுக்கணக்கானோர் கத்திகள், வாள், பொல்லுகள் எடுத்துக்கொண்டு முகாமிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு உறக்கத்தில் ஆழ்ந்திருந்த தமிழர்களை வெட்டிக் கொன்றனர். சிலர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.[3] இந்நிகழ்விற்கு முதல் நாளே அம்முகாமில் நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தனர். இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் படுகொலைகள் இடம்பெற்ற பொழுது பாதுகாப்பிற்கென நிறுத்தப்பட்டிருந்த காவற்துறையினர் அதனைத் தடுப்பதற்கு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை.[4]

இலங்கை அரசின் நிலைப்பாடு

தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களே முதலில் கலவரத்தில் ஈடுபட்டனர் என்றும் அதனைத் தடுக்க முயற்சி எடுத்த போதே இப்படுகொலைகள் நிகழ்ந்ததென்றும் தொடக்கத்தில் இலங்கை அரசு அறிவித்தது. எனினும் பின்னர் மிகவும் கோபமுற்ற நிலையில் இருந்த சிங்களவர்களை காவற்படையினரால் தடுக்க முடியவில்லை என்று கூறியது. கடமையில் இருந்த எட்டு காவற்துறையினர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு[5] சிறையிலடைக்கப்பட்டாலும் பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.[6]

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளி இணைப்புகள்